இணையதள அம்சங்களைத் தவறாகப் பயன்படுத்திய 3 சில்லறை வர்த்தகர்கள்

இணையதள அம்சங்களைத் தவறாகப் பயன்படுத்திய 3 சில்லறை வர்த்தகர்கள்

2 mins read
c9ba2ad2-5e47-4a8f-b0b8-ddf8ffce43e7
போலியாகப் பார்வையாளர்கள் எண்ணிக்கையை உயர்த்திக் காட்டுவது, பொய்யான தள்ளுபடி சலுகைகளை அறிவிப்பது  போன்ற ஏமாற்று வேலைகளில் அந்நிறுவனங்கள் ஈடுபட்டதாகச் சிங்கப்பூர் போட்டி, பயனீட்டாளர் ஆணையம் தெரிவித்துள்ளது. - படங்கள்: சிங்கப்பூர் போட்டி, பயனீட்டாளர் ஆணையம் 
Google News Preferred Icon

சிங்கப்பூரில் இணையவழியாகப் பொருள்களை விற்பனை செய்யும் மூன்று சில்லறை வர்த்தக நிறுவனங்கள், பயனீட்டாளர்களைத் திசைதிருப்பும் ஏமாற்று வேலைகளைக் கையாண்டதைச் சிங்கப்பூர் போட்டி, பயனீட்டாளர் ஆணையம் கண்டறிந்துள்ளது.

வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் போலியாகப் பார்வையாளர்கள் எண்ணிக்கையை உயர்த்திக் காட்டுவது, பொய்யான தள்ளுபடி சலுகைகளை அறிவிப்பது போன்ற மோசடி நடவடிக்கைகளில் அந்நிறுவனங்கள் ஈடுபட்டதாகத் திங்கட்கிழமை (மே 18) ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தங்கள் பொருள்களுக்குச் சந்தையில் பெரும் தட்டுப்பாடும் அவசரத் தேவையும் இருப்பது போன்ற போலித் தோற்றத்தை உருவாக்க இதுபோன்ற மோசடிகளில் அந்நிறுவனங்கள் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

‘போர்டிங் கேட்’ எனும் பயணப் பொருள்கள் விற்பனை நிலையத்தை நடத்தும் ‘சீகர்’ நிறுவனம், மெத்தை விற்பனை நிறுவனமான ‘ஒரிஜின் ஸ்லீப்’, ஆடை விற்பனை நிறுவனமான ‘லைட் இன் தி பாக்ஸ்’ ஆகிய மூன்று நிறுவனங்கள் மேற்குறிப்பிட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு, ஆணையத்தின் விதிமுறைகளை மீறியுள்ளன.

தற்போது இந்த மூன்று நிறுவனங்களும் தவறான நடைமுறைகளை நிறுத்திக்கொண்டதோடு, ஆணையத்திடம் அதிகாரபூர்வ உறுதிமொழிகளையும் வழங்கியுள்ளன.

‘போர்டிங் கேட்’ இணையத்தளத்தில், ஒரு குறிப்பிட்ட பொருளை எத்தனை பேர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற போலித் தகவல் நேரலையாகக் காட்டப்பட்டது. இது அந்தப் பொருளுக்குப் பெரும் தேவை இருப்பதாக வாடிக்கையாளர்களை நம்ப வைக்க மேற்கொள்ளப்பட்ட மோசடி நடவடிக்கை என ஆணையம் கூறியது.

அந்த இணையத்தளத்தை ஆய்வு செய்தபோது, அந்த எண்கள் கணினி மூலம் தற்செயலாக உருவாக்கப்பட்டவை என்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

மேலும், எந்தவொரு ஆதாரமுமின்றி, பயனீட்டாளர்கள் பலர் அந்தப் பொருள்களை வாங்க முண்டியடிப்பதாக அந்தத் தளம் பொய்யான தகவல்களைக் காட்டியது.

இதேபோன்ற ஏமாற்று வேலைகளை ‘ஒரிஜின் ஸ்லீப்’ நிறுவனமும் கையாண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சில்லறை விற்பனைபோட்டித்தன்மைஆணையம்