தீச்சம்பவம்: மூன்று குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்

தீச்சம்பவம்: மூன்று குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்

1 mins read
7fd2151d-7c49-4019-8a7b-c75ee40926d4
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தண்ணீர் நிரம்பிய வாளிகளைக் கொண்டு தீயை அணைத்தது. - படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை/ ஃபேஸ்புக்
Google News Preferred Icon

ரெட்ஹில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தீ மூண்டதைத் தொடர்ந்து, மூன்று பிள்ளைகள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

ரெட்ஹில் ரோடு, புளோக் 71இல் உள்ள வீடு ஒன்றில் தீ மூண்டது குறித்து காலை மணி சுமார் 7.20க்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தைச் சென்றடைந்ததும் ஏழாவது மாடியில் உள்ள அந்த வீட்டில் சிலர் சிக்கியிருந்ததை குடியிருப்பாளர்கள் தீயணைப்பு வீரர்களிடம் தெரிவித்தனர்.

அலெக்ஸாண்ட்ரா, மரினா பே தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் பூட்டை உடைத்து வலுக்கட்டாயமாக வீட்டினுள் நுழைந்தனர்.

வீட்டின் வரவேற்பறையின் ஓர் ஓரத்தில் மூண்ட தீயை, தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் நிரம்பிய வாளிகளைக் கொண்டு அணைத்தனர். தீ அணைக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், மற்றொரு தீயணைப்புக் குழுவினர் மூன்று குழந்தைகள் சமையலறைக்குப் பின்னால் உள்ள கழிவறையில் ஒளிந்துகொண்டிருந்ததைக் கண்டனர்.

அவர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு கே கே மகளிர் சிறார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

மேலும் இருவர் குடிமைத் தற்காப்புப் படையினர் அங்குச் சென்றடைவதற்கு முன்னரே, படுக்கை அறை சன்னல் வழியாகத் தப்பிச் சென்றனர்.

வீட்டின் வரவேற்பறையில் இரண்டு தனிநபர் நடமாட்டச் சாதனங்களுக்கு மின்னேற்றம் செய்யப்பட்டிருந்ததாகவும், அவற்றில் இருந்த மின்கலங்களிலிருந்து தீ மூண்டிருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணைகள் காட்டின.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்