சிங்கப்பூர் ஏர்லைன்சில் ஐந்து ஆண்டுகளில் பெண் விமானிகள் 25 விழுக்காடு அதிகரிப்பு

சிங்கப்பூர் ஏர்லைன்சில் ஐந்து ஆண்டுகளில் பெண் விமானிகள் 25 விழுக்காடு அதிகரிப்பு

2 mins read
62c8baf2-c259-439b-960b-66b041da3e87
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் ஆகியவற்றில் 102 பெண் விமானிகளும் 7,471 பெண் சிப்பந்திகளும் பணிபுரிகின்றனர். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 3
Google News Preferred Icon

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், பாலின பன்முகத்தன்மை தொடர்பில் நிர்ணயித்துக்கொண்ட நான்கு இலக்குகளில் கடந்த ஆண்டு இரண்டை நிறைவேற்றியுள்ளது. நிறுவனத்தில் பணிபுரியும் பெண் விமானிகளின் எண்ணிக்கையை அதிகரித்தது அவற்றுள் ஒன்று.

2020ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பெண் விமானிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு குறைந்தது 25 விழுக்காடு அதிகரித்தது. மாறாக, 2021ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க, ஸ்கூட் விமானங்களில் பணிபுரியும் பெண் விமானிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு சரிந்தது.

ஒரு விமானியாவதற்கு உரிய நிபந்தனைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முழுமையான மதிப்பீட்டின்படி ஆள்சேர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றதாக இம்மாதம் 25ஆம் தேதி வெளியிடப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்தின் நிலைத்தன்மை அறிக்கை குறிப்பிட்டது.

2021ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க இயக்குநருக்கும் மேலான மூத்த பதவிகளில் உள்ள பெண்களின் எண்ணிக்கையை ஸ்கூட் கடந்த ஆண்டு குறைந்தது 25 விழுக்காடு அதிகரித்தது.

மாறாக, மூத்த பதவிகளில் குறைந்தது 25 விழுக்காட்டுப் பெண் ஊழியர்கள் இருக்கவேண்டும் என்ற இலக்கை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தவறவிட்டது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் ஆகியவற்றில் வேலை செய்வோரில் பாதிக்கும் சற்று அதிகமானோர் பெண் ஊழியர்கள் என்று அறிக்கை சுட்டியது.

ஒட்டுமொத்தமாக, இரண்டு நிறுவனங்களிலும் ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் ஊழியர்களின் எண்ணிக்கை 3.1 விழுக்காடு அதிகரித்தது. மார்ச் 31 நிலவரப்படி 21,667 ஊழியர்கள் அந்த நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். அவர்களில் 3,676 விமானிகள், 11,332 விமானச் சிப்பந்திகள்.

இரண்டு நிறுவனங்களிலும் 102 பெண் விமானிகளும் 7,471 பெண் சிப்பந்திகளும் பணிபுரிகின்றனர்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் ஆகியவற்றில் கடந்த ஆண்டு எந்த வேலையிட மரணமும் ஏற்படவில்லை.

இருப்பினும், கடந்த ஆண்டு கடுமையான அல்லது நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும் வேலை தொடர்பான காயங்களை ஏற்படுத்திய இரண்டு சம்பவங்கள் பதிவாகின. அதற்கு முந்தைய நிதியாண்டில் அத்தகைய 10 சம்பவங்கள் ஏற்பட்டன.

மேலும், கடந்த ஆண்டு லேசான காயங்களை ஏற்படுத்திய 480 வேலையிடச் சம்பவங்கள் பதிவாகின. முந்தைய நிதியாண்டில் அது 401ஆக இருந்தது.

குறிப்புச் சொற்கள்
விமானிபெண்கள்சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்ஸ்கூட்அதிகரிப்பு