விமானப் போக்குவரத்துத் துறை கண்காட்சியில் 2,000 வேலைவாய்ப்புகள்

விமானப் போக்குவரத்துத் துறை கண்காட்சியில் 2,000 வேலைவாய்ப்புகள்

1 mins read
8fb4ef97-6f73-4f35-928e-f68f46cb0518
விமானப் போக்குவரத்துத் துறைக்கான வேலைவாய்ப்புக் கண்காட்சியில் 2,000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

பிடோக் வட்டாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விமானப் போக்குவரத்துத் துறைக்கான வேலைவாய்ப்புக் கண்காட்சியில் 2,000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை எதிர்பார்க்கலாம்.

சமூக அளவில் அத்தகைய விமானப் போக்குவரத்து வேலைவாய்ப்புக் கண்காட்சி நடைபெறுவது இதுவே முதன்முறை.

ஹார்ட்பீட்@பிடோக் சமூக மன்றத்தில் பிப்ரவரி 28ஆம் தேதியும் மார்ச் 1ஆம் தேதியும் கண்காட்சி இடம்பெறும். அதில் 18 விமான நிறுவனங்கள் பங்கேற்கின்றன. நிர்வாகம், மேலாண்மை, செயல்பாடு ஆகிய வெவ்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

ஊழியர்களை வேலையில் விரைவாகப் பணியமர்த்த, கண்காட்சியில் பங்கேற்கும் பத்து நிறுவனங்கள் அங்கேயே நேர்முகத் தேர்வையும் நடத்தவிருப்பதாகச் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

விருந்தோம்பல் துறையில் உள்ள அக்கோர் லவுஞ்சஸ், பாதுகாப்புச் சேவைத் துறையில் உள்ள செர்டிஸ் குழுமம், விமானப் பொறியியல் விநியோகத் துறையில் உள்ள ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனம், விமானச் சரக்குகளைக் கையாளும் சேட்ஸ், எஸ்ஐஏ நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் நேர்முகத் தேர்வை நடத்தவுள்ளன.

பயணிகளைக் கையாளும் அதிகாரிகள், துணைக் காவல்படை அதிகாரிகள், பழுதுபார்ப்பு அதிகாரிகள், தளவாட உதவியாளர்கள், உணவு விநியோக அதிகாரிகள் உள்ளிட்ட பணிகள் வழங்கப்படுகின்றன.

சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்துடன் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் வேலைநியமன, வேலைத் தகுதிக் கழகம் (e2i), விமானத் துறை, விமானப் போக்குவரத்துத் துறைத் தொழிற்சங்கம் ஆகியவை இணைந்து வேலைவாய்ப்புக் கண்காட்சியை நடத்துகின்றன. கண்காட்சியில் வேலைவாய்ப்புகளோடு குடும்பங்கள் பங்கேற்பதற்கான விமானப் போக்குவரத்துத் துறை சார்ந்த நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன.

குறிப்புச் சொற்கள்
விமானப் போக்குவரத்துவேலைவாய்ப்புகண்காட்சி