தீவு விரைவுச்சாலையில் விபத்து; இருவர் காயம்

1 mins read
a5245ce3-8044-4415-a70a-3754257e95f4
தோ பாயோ லோரோங் 6இன் வெளிவழிக்கு முன்னர் சாங்கியை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் விபத்து நடந்தது. - படம்: எஸ்ஜிரோட் புளோக்ஸ்/டெலிகிராம்

தீவு விரைவுச்சாலையில் ஜனவரி 17ஆம் தேதி ஐந்து கார்கள் சம்பந்தப்பட்ட விபத்தைத் தொடர்ந்து இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில், தோ பாயோ லோரோங் 6இன் வெளிவழிக்கு முன்னர் சாங்கியை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் நடந்த விபத்து குறித்து காலை 8.35 மணிவாக்கில் தனக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

விபத்திற்குப் பிந்திய நிலவரத்தைக் காட்டும் படம் ஒன்று டெலிகிராம் தளத்தில் பரவிவந்தது. அதில் நான்குத் தடச் சாலையில் ஆக வலது தடத்தில் ஐந்து கார்கள் இருப்பதைக் காணமுடிந்தது.

அவற்றில் குறைந்தது இரண்டு கார்கள் சேதமுற்ற நிலையில் காணப்பட்டன.

அவசர மருத்துவ வாகனம் ஒன்றும் படத்தில் காணப்பட்டது.

இருவர் டான் டொக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது. 42 வயது ஆண் ஓட்டுநரும், 56 வயது பெண் பயணியும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்து குறித்து காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்
விபத்து