18 வயது இளையர் கைது; $34,000, ஏடிஎம் அட்டைகள் பறிமுதல்

1 mins read
3b19caf4-8751-4368-8355-333b96df5d3c
தம்மிடமிருந்த பணத்திற்கும் மற்றப் பொருள்களுக்கும் அந்த இளையரால் சரியான விளக்கம் அளிக்க முடியவில்லை எனக் கூறப்பட்டது. - படம்: சிங்கப்பூர் காவல்துறை

சிராங்கூன் பூங்காவில் $34,000க்கும் அதிகமான பணமும், பல ஏடிஎம் அட்டைகளும், சிம் அட்டைகளும் வைத்திருந்த 18 வயது இளையரைக் காவல்துறை கைது செய்தது.

புதன்கிழமை இரவு 11.10 மணியளவில் அங் மோ கியோ காவல்துறை அதிகாரிகள் சாண்டவுன் பிளேஸ் அருகே சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்ததாகக் காவல்துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

அவர்கள் அந்த இளையரைச் சோதனையிட்டனர். அப்போது, அவரிடமிருந்து பணம், ஏடிஎம் அட்டைகள், நான்கு கைப்பேசிகள், இணையப் பரிவர்த்தனை கருவி ஆகியவற்றைக் காவல்துறை கைப்பற்றியது. அவற்றை வைத்திருந்ததற்கு அந்த இளையரால் சரியான விளக்கம் அளிக்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட சில ஏடிஎம் அட்டைகளுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் மோசடி வழக்குகளில் தொடர்புடைய பணம் வைப்புத்தொகையாக செலுத்தப்பட்டிருந்தது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.

திருடப்பட்டப் பொருள்களை வைத்திருந்ததாக அந்த இளையர்மீது குற்றம் சுமத்தப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்