சாங்கி விமான நிலையத்தில் புதிய விதி அமலானதும், சிங்கப்பூரைவிட்டு வெளியேறும் பயணிகளின் பெட்டிகளிலிருந்து 15 மின்தேக்கிகள் (பவர் பேங்க்) அப்புறப்படுத்தப்பட்டதாகச் சாங்கி விமானநிலையக் குழுமம் தெரிவித்துள்ளது.
ஒரு பயணி அதிகபட்சமாக இரண்டு சாதனங்களையே வைத்துக்கொள்ளலாம் என்னும் விதி புதன்கிழமை (ஏப்ரல் 15) முதல் அமலுக்கு வந்தது.
அதனைத் தொடர்ந்து, சாங்கி விமான நிலையத்தில் 1, 2, 3 ஆகிய முனையங்களின் பயண நுழைவாயிலில் பாதுகாப்புச் சோதனைகள் நடத்தப்பட்டன. முனையம் 4ன் பயணப் புறப்பாட்டு குடிநுழைவு வட்டாரத்துக்கு அப்பால் அந்தச் சோதனை நடத்தப்பட்டது.
அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கும் நள்ளிரவுக்கும் இடைப்பட்ட வேளையில், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமாக வைத்திருந்த ‘பவர்பேங்’ சாதனத்தைப் பெட்டிகளிலிருந்து வெளியே எடுத்துவிடுமாறு பயணிகளிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவை அப்புறப்படுத்தப்பட்டன.
புதன்கிழமை ஒருநாளில் மட்டும் 275 விமானங்களில் பயணம் செய்யவிருந்தவர்களின் உடைமைகள் சோதிக்கப்பட்டதாகக் குழுமம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இரண்டு ‘பவர் பேங்க்’ சாதனங்களுக்கு மேல் கொண்டுவரும் பயணிகள், இரண்டை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றைப் பயணப் பெட்டியிலிருந்து அகற்றிவிட வேண்டும் என்னும் நடைமுறை ஏப்ரல் 15 முதல் நடப்புக்கு வரும் எனச் சிங்கப்பூரின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் ஏப்ரல் 6ஆம் தேதி அறிவித்து இருந்தது.
அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு வகுத்துள்ள அந்த விதி, மணிக்கு 100 வாட் என்னும் அளவிலான மறுமின்னேற்றம் செய்யத்தகுந்த எல்லா மின்கலன்களுக்கும் (rechargeable battery) பொருந்தும்.
இந்த விதி நடப்புக்கு வருமுன்னர் ஒவ்வொரு பயணியும் அதிகபட்சமாக 20 பவர் பேங்க் வரை தங்களுடன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

