உலகச் சவால்களுக்கு இடையே சிங்கப்பூரில் $14.2 பில்லியன் முதலீடு

உலகச் சவால்களுக்கு இடையே சிங்கப்பூரில் $14.2 பில்லியன் முதலீடு

2 mins read
8b8e7d6c-c745-4b22-a9eb-867424057f16
பொருளியல் வளர்ச்சிக் கழகத் தலைவர் பிங் சியோங் பூன் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜெர்மைன் லாய் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசினர். - படம்: சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகம்
Google News Preferred Icon

வரும் ஆண்டுகளில் சிங்கப்பூர் நல்ல பொருளியல் வளர்ச்சியைப் பெறவும் புதிய வேலைகளை உருவாக்கவும் கைகொடுக்கும் வகையில் கடந்த ஆண்டு அதிகமான முதலீட்டை நாடு ஈர்த்துள்ளது.

வரிகளால் உலகத்தில் நிச்சயமற்ற போக்கு நிலவும் வேளையிலும் நாடுகளிடம் தன்னைப் பேணித்தனம் பரவும் நிலையிலும் பெருந்தொகையிலான முதலீட்டுக் கடப்பாடுகளை சிங்கப்பூர் பெற்றுள்ளது.

2025ஆம் ஆண்டில் $14.2 பில்லியன் நிலையான சொத்து முதலீட்டுக் கடப்பாடுகளை (FAI) சிங்கப்பூர் பெற்றது.

முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் அது அதிகம். குறிப்பாக, 2024ஆம் ஆண்டைக் காட்டிலும் 5.2 விழுக்காடு அதிகமான முதலீட்டுக் கடப்பாடுகள் அவை.

2024ஆம் ஆண்டில் $13.5 பில்லியனையும் அதற்கு முந்தைய 2023ஆம் ஆண்டில் $12.7 பில்லியனையும் சிங்கப்பூர் முதலீடாக ஈர்த்தது.

சிங்கப்பூரின் முன்னணி முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்பான பொருளியல் வளர்ச்சிக் கழகம் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதிகமான முதலீடுகளால் சிங்கப்பூரில் புதிய வேலைகள உருவாகும் என்று கூறிய கழகத்தின் தலைவர் பிங் சியோங் பூன், இதே வேகத்தில் முதலீடுகள் வளர்ந்தால் அடுத்த ஐந்தாண்டுகளில் 15,700 வேலைகளை உருவாக்க இயலும் என்றார்.

அத்துடன், மதிப்புக் கூட்டலில் $18 பில்லியன் அளவுக்கு முதலீடுகள் பங்களிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சிக்கு ஒரு நிறுவனம் செய்யும் நேரடி பங்களிப்பின் அளவீடு ஆகும். அதில் பெரும்பாலான பங்களிப்புகள் சம்பளம் மற்றும் லாப அதிகரிப்பு தொடர்பானவை என்றார் திரு பிங்.

2025ஆம் ஆண்டுக்கான முதலீட்டுக் கடப்பாடுகள், உலகப் பிளவு அதிகரித்து வரும் நிலையிலும் உலக நிறுவனங்களின் நம்பத்தகுந்த மையமாக சிங்கப்பூர் திகழ்வதைக் காட்டுகிறது என்று அவர் தெரிவித்தார்.

வர்த்தக மீள்திறனை வலுப்படுத்தவும் நீண்டகால நன்மதிப்பை உருவாக்கவும் உலக நிறுவனங்கள் சிங்கப்பூரை நாடுவதை இது குறிக்கும் என்றும் அவர் கூறினார்.

“சவால்கள் நீடிக்கின்றபோதிலும் சிங்கப்பூரர்களை வருங்காலத்திற்குத் தயார்ப்படுத்தவும் தரமான வேலைகளை அவர்களுக்கு உருவாக்கித் தரவும் முதலீடுகளை ஈர்க்கும் பணியில் பொருளியல் வளர்ச்சிக் கழகம் உறுதியாக ஈடுபடும்.

“அதற்காக, சிங்கப்பூரில் தற்போதுள்ள வளர்ச்சித் துறைகளை வலுப்படுத்துவதிலும் புதிய வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவதிலும் கழகம் ஈடுபடும்,” என்றார் திரு பிங்.

குறிப்புச் சொற்கள்
பொருளியல்முதலீடுவேலை

தொடர்புடைய செய்திகள்