மழை பெய்யும்போது, நடைபாதைகளில் நாம் நத்தைகளைப் பார்த்திருப்போம். நத்தைகள் முதுகெலும்பில்லாத உயிரினம். தசையால் ஆனது அதன் உடல். அதனால் அதைப் பாதுகாக்க அதற்கு ஓடு இருக்கிறது.
உடல்
ஒரு நத்தையின் உடல் ஐந்து முக்கிய பாகங்களைக் கொண்டுள்ளது. தலை, கழுத்து, உள்ளுறுப்பு கூம்பு, வால், கால் ஆகியவை அவை.
நத்தைகளுக்கு ரேடுலா எனப்படும் ரிப்பன் போன்ற நாக்கு உள்ளது. அதில் ஆயிரக்கணக்கான சிறிய பற்கள் உள்ளன.
தனிச்சிறப்பான ஓடு
நத்தைகளின் முதுகில் சுழல் ஓடு உள்ளது. இது அவற்றின் உள் உறுப்புகளைப் பாதுகாக்கும் கடினமான அமைப்பாகும்.
பாதுகாப்பற்ற நிலையில், நத்தைகள் தங்களின் பாதுகாப்பு கவசமான ஓட்டிற்குள் மறைந்து கொள்ளும். நத்தைகள் மெதுவாகத் தன் உடலை வளைத்து, நெளிந்து, சுருக்கி ஊர்ந்து செல்லக் கூடியவை.
வலுவான கால்
நத்தைகள் வலுவான தசைக் கால்களைக் கொண்டவை. அவை கரடுமுரடான பரப்புகளில் ஊர்ந்து செல்லவும், அவற்றின் மென்மையான உடல்கள் வறண்டு போகாமல் இருக்கவும் உதவுகிறது.
வாழிடம்
நத்தைகள் பூமியில் உள்ள அனைத்து வாழிடங்களிலும் வாழ்கின்றன. மரப்பட்டைகள், ஈரமான கழிவுகளின் குவியல்கள், பாசி போன்ற ஈரமான சூழல்களை அவை விரும்புகின்றன.
உணவு முறை
நத்தைகள் பொதுவாக தாவர வகைகள், இலைகள், பூக்கள், பழங்கள், தண்டுகள் போன்றவற்றை உண்ணும். பெரிய நத்தைகளும் சில கடல் சார்ந்த நத்தை இனங்களும் மாமிச உண்ணிகள்.
தொடர்புடைய செய்திகள்
நத்தைகள் முக்கியமாக கால்சியம் நிறைந்த உணவை உண்கின்றன. அது அவற்றின் ஓடுகளை அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கின்றன. வயது ஆக ஆக ஓடு வளரும்.
ஊட்டச்சத்து
சிலர் நத்தையை உண்பார்கள்.
ஒரு சராசரி நத்தையில் 80% நீர், 15% புரதம், 2.4% கொழுப்பு உள்ளது. அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், கால்சியம், இரும்பு, செலினியம், மெக்னீசியம், உயிர்ச்சத்து (வைட்டமின்கள்) E, A, K, B12 ஆகிய சத்துகள் நத்தையில் உள்ளன.
ஸ்லக்ஸ் நத்தைகள்
ஓடில்லா அல்லது குறைந்த ஓடுகளைக் கொண்ட நத்தைகளும் காணப்படுகின்றன. இதனை ஆங்கிலத்தில் slugs என்றும் குறிப்பிடுவர்.
பெரிய நத்தை, வேகமான நத்தை
35 செ.மீ நீளமான பாதம் கொண்ட ஆப்பிரிக்க நத்தை மிகப்பெரிய நத்தை ஆகும். வேகமான நத்தை ஹெலிக்ஸ் ஆஸ்பெர்சா ஆகும். இது 0.03 மைல் வேகத்தில் நகரக்கூடியது.
இறைச்சிக்காக நத்தைகளை வளர்ப்பது ஹெலிகல்ச்சர் என்று அழைக்கப்படுகிறது.

