நூல் அறிமுகம்

2 mins read
38cbb0fd-b52f-4bad-958b-eeb2ef64df15
என். கணேசன் சிறுகதைகள் - படம்: தேசிய நூலக வாரியம், சிங்கப்பூர்

தலைப்பு: என். கணேசன் சிறுகதைகள்! நூலாசிரியர்: என்.கணேசன் பதிப்பாளர்: சென்னை : Blackhole, 2017. குறியீட்டு எண்: GAN அனைத்து உரிமைகளும் காப்புரிமைக்கு உட்பட்டவை.

இந்நூலில் மொத்தம் இருபத்து எட்டு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. மனிதனின் உயர்ந்த குணங்களை அடையாளம் காட்டிப் படைத்திருக்கிறார் ஆசிரியர்.

முதல் சிறுகதையான “ஊருக்கு மகான் ஆனாலும்…”என்னும் கதையில், எப்படிப்பட்ட மகானாக இருந்தாலும் தாய் என்று வரும் பொழுது உணர்ச்சிகளுக்கு அடிமைதான் என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்.

“கடைசி பிரார்த்தனை” என்னும் கதையில் வரும் கற்பகம், தான் சுமங்கலியாகச் சென்று சேர்ந்து விட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டிருப்பவள். ஆனால் அவள் நோய்வாய்ப்பட்டதும் பிள்ளைகள் தந்தையைக் கவனித்துக் கொள்ளாமல் அவரின் சொத்துக்களை எப்படி அடையலாம் என்பதிலேயே குறியாக இருப்பதைப் பார்த்து தன் பிரார்த்தனையை மாற்றிக் கொள்கிறாள்.

“புன்னகைத்தார் பிள்ளையார்!” என்னும் கதையில் வரும் பார்வதியின் மகன் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஏற்பட்ட கைகலப்பில் அருண் என்பவனால் கொல்லப்படுகிறான். அதற்கான தண்டனையை அனுபவித்து விட்டு வெளியே வரும் அருண் முதியோர் இல்லத்தில் தங்கி இருக்கும் பார்வதியைப் பார்த்து மன்னிப்புக் கேட்கிறான். அருணின் மகன் ஒரு விபத்தில் இறந்துவிட்டதை அறிந்த பார்வதி பிள்ளையாரிடம் சென்று அவனுக்கு இன்னொரு மகன் பிறக்க வேண்டும் என்று வேண்டுகிறாள்.

இப்படி அனைத்துக் கதைகளுமே அன்பு, கருணை, மன்னிப்பு, பெருந்தன்மை போன்ற உயரிய குணங்களைப் பேசுகின்றன. இச்சிறுகதைகள் வாசகர்களுக்கு ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தையும் திருப்தியையும் வழங்கும் என்பது உறுதி.

தேசிய நூலக வாரியத்துக்காக, சுவர்ணலட்சுமி ஜெயராமன்

நூல் கிடைக்கும் நூலகங்களின் விவரங்களைப் பெற: http://catalogue.nlb.gov.sg

குறிப்புச் சொற்கள்