சக்கர நாற்காலி

22 mins read
4da06da1-3251-4344-8b77-ffaaa1f6ed71
‘சக்கர நாற்காலி’ சிறுகதை எழுத்தாளர் தனலஷ்மி கருப்பையா. - தனலஷ்மி கருப்பையா.

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் தரை இறங்கிய விமானம் விரைவாக ஓடுதளத்தில் ஓட ஆரம்பித்தது. எல்லோரும் கீழே இறங்கும் ஆர்வத்துடன் இருக்க, என் நினைவுகள் மட்டும் மேல்நோக்கிப் பறக்க ஆரம்பித்தது. முதியோர் இல்லத்தில் விட்டு வந்த என் அண்ணன் முகம் கண்ணில் நின்றது. அவர் கண்களில் தெரிந்தது கவலையா? பயமா?

இரண்டு மாதமாய், மலை அடிவாரத்தில் சுற்றித் திரிந்து, மக்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்த சிறுத்தைப் புலியை ஒற்றை ஆளாக, துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திய வீரர் அவர். வரிவரியாய் கோடிட்ட கறுப்பு மஞ்சள் பனியன் அணிந்து, மாட்டு வண்டியில் இறந்த புலியை, முட்டுக் கொடுத்து நிற்கவைத்து, துப்பாக்கியைத் தோளில் சார்த்திக் கொண்டு விடிய விடிய, கிராமத்து வீதியில் கிராம மக்கள் வாழ்த்தொலிகளோடு ஊர்வலம் வந்த, அந்தக் கால ‘ஜேம்ஸ் பாண்ட்’ அவர். துணிவு அவர் உடன் பிறந்தது. அவருக்குள் இப்படியொரு கலக்கமா? மூப்பும் நோயும், அவர் வலிமையை ஆட்கொண்டு விட்டதா?

எல்லோரும் வரிசையாக எழுந்து நின்று, வெளியே போக ஆயத்தமானார்கள். நானும் என் நினைவுகளில் இருந்து மீண்டு, பெல்ட்டை விடுவித்து எழுந்து நின்றேன், கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். ஸ்மார்ட் வாட்ச், ஆட்டோ மேட்டிக்காக மாறி சிங்கப்பூர் டைம் காட்டியது.

விமானத்தை விட்டு வெளியே வரும்போது, கவின் ஏற்பாடு செய்திருந்த, “சக்கர நாற்காலி” எனக்காகக் காத்திருந்தது. பெயரைக் குறிப்பிட்டு சிப்பந்தி, நான் ஏறி நாற்காலியில் அமர உதவினார். கால்களை பெடலில் வைத்து, சௌகரியமாக சாய்ந்து உட்காரவைத்து, பாதுகாப்பாக பெல்ட்டைப் போட்ட போது, எனக்கு ‘அப்பாடா’ என்றிருந்தது.

கவின் எனக்கு ஏர்போர்ட்டில் சக்கர நாற்காலி ஏற்பாடு செய்திருப்பதாக, தொலைபேசியில் கூறியபோது, எனக்குக் கோபம் பற்றிக் கொண்டு வந்தது. “எத்தனை முறை சிங்கப்பூர் வந்து போயிருக்கிறேன். நடந்து வரவில்லையா? ஏன் இந்தப் புதுப் பழக்கம்? எல்லோரும் பார்க்க சீக்காளி போல், சக்கர நாற்காலியில் உட்கார்ந்து வர என்னால் முடியாது. மொண்டியா? முடமா? இது தேவையா கவின்?” என்றேன் எரிச்சலாக.

கவின் சிரிப்பது கேட்டது. “அம்மா பொறுங்க, பொறுங்க. நீங்க ஆரோக்கியமாத்தான் இருக்கீங்க. நான் ஒத்துக்கறேன். ஆனால் இந்த ஒரு வருடமா, நீங்க மூட்டுவலியாலே அவதிப்பட்டு சிகிச்சை எடுத்ததையும் மறந்துடாதீங்க. கொஞ்ச தூரம் நடந்தாலே, உங்களுக்கு மூச்சு இரைக்கிறதையும், நடை தள்ளாடுவதையும் கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். ரொம்ப தூர நடை, நகரும் படிக்கட்டில் பயணிப்பது, இதையெல்லாம் நீங்க குறைச்சுக்கணும். கொஞ்சம் தடுமாறினாலும், நம் எல்லோருக்கும் கஷ்டம்.” கவின் சொன்னது, நியாயமாகப்பட்டது.

சக்கர நாற்காலிப் பயணம் சுகமாகத் தான் இருந்தது. மூச்சு வாங்க நடக்காமல், நிதானமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு, ‘இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டுமோ?’ என்ற டென்ஷன் இல்லாமல், மிகவும் அருமையாக இருந்தது. சக்கர நாற்காலிதான், மீண்டும் அண்ணனை ஞாபகப்படுத்தி விட்டது.

கிராமத்து நில புலன்களை கவனித்துக்கொண்டு, அவ்வப்போது, எனக்கும் வந்து உதவிக் கொண்டு எண்பத்தைந்து வயதுக்குப் படு ஆரோக்கியமாக இருந்தார். தனிக்கட்டை, பீடி, சிகரெட் என எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. எவ்வளவு தூரமென்றாலும் சளைக்காமல் நடப்பார்.

அப்படிப்பட்டவர் திடீரென்று மயங்கி விழுந்து, மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகக் கூற, பார்க்க ஓடினேன். கோமா ஸ்டேஜில் சுயநினைவின்றி படுத்திருந்தார். ரொம்ப நாட்களாய் இருந்த ரத்த அழுத்த நோயை அசட்டை செய்ததின் விளைவு, மூளையில் ரத்தக்கசிவு. ‘பிரெய்ன் ஹேமரேஜ்’ என்றார்கள். ஒரு மாதத் தீவிர சிகிச்சைக்குப் பிறகு பக்கவாதம் வந்து படுத்த படுக்கையானார். வலது கையும் காலும் பாதித்து, பேச்சும் வராதபோது நான் பதறிப் போனேன்.

“இவ்வளவு வயசுக்குப் பிறகு இப்படி ஒரு நிலைமையா?” தொடர் மருத்துவ சிகிச்சையில் குணமாகலாம். அது எவ்வளவு நாளாகும் என்று சொல்ல முடியாது. ஆனால் முன்பு போல் நடமாடுவது, சந்தேகமே. வயதாகி விட்டது அல்லவா! நன்கு கவனித்தால் அவர் வேலைகளை அவர் கவனித்துக் கொள்ளலாம். மருந்து மாத்திரைகளைவிட, அவர் மனம் தளராமல் பார்த்துக் கொள்ளுங்கள்,” என மருத்துவர் கூறிவிட்டார்.

உறவுகள் கூடி ஆலோசித்தனர். இவ்வளவு பெரும் பொறுப்பை யாரும் எடுத்துக்கொள்ளத் தயாரில்லை. ஒரு அனாதை இல்லத்தில் சேர்த்து, முடிந்தால் அவ்வப்போது வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தபோது, எனக்கு உலகமே கசந்தது. “அண்ணன் என்னடா? தம்பி என்னடா? அவசரமான உலகத்திலே!” என்ற கண்ணதாசன் பாடல் வரிகள் காதில் ஒலித்தது.

அண்ணன் இது ஒன்றும் தெரியாமல் மருந்து மயக்கத்தில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். ‘தொடர் கவனிப்பில் குணமாகி விடும்’ என்கிறார்களே. அத்தகைய சிகிச்சை அனாதை இல்லத்தில் கொடுப்பார்களா? இலவசமாய் உணவும், உறங்கும் இடமும் கிடைக்கும். உயிருக்குப் போராடும் அவரை அவர்களால் எப்படிப் பாதுகாக்க முடியும்? தெருவில் அடிபட்டுக் கிடக்கும் பூனையையும் நாயையும் கூட எடுத்துச் சென்று, காப்பாற்றும் மனிதர்கள் மத்தியில் இப்படியும் சிலர் இருக்கிறார்களே! மனம் நொந்தது.

நான் முடிவு செய்தேன். ‘ஊருக்கு உபதேசம்’ என்றில்லாமல் அவரைக் கவனிக்கும் பொறுப்பை நாமே ஏற்றுக் கொள்வதென்று. உறவினர்கள் ‘விட்டால் போதும்’ என்று நடையைக் கட்ட, நான் ஆம்புலன்ஸில் வைத்து அண்ணனை என் வீட்டுக்கு அழைத்துவந்தேன்.

“மேம் ரெஸ்ட்ரூம் போகணுமா?” சக்கர நாற்காலி சிப்பந்தியின் குரல் கேட்டு, என் நினைவு கலைந்தது. ஆமோதிப்பாய் தலையசைக்க, பெல்ட்டைக் கழற்றிவிட்டு, மிதிபலகை யில் இருந்த கால்களை அகற்றி, இறங்க உதவியவருக்கு நன்றி கூறி நடந்தேன். வயதானவர்களுக்கென்று தேவைப்படும் வசதிகளுடன் அமைந்திருந்தது அந்த ரெஸ்ட்ரூம். தடுமாறாமல் எழ கைப்பிடி, ஈரமில்லாத தரைத்தளம், இன்ன பிற வசதிகள் அருமை. சீனியர் சிட்டிசன்களின் தேவைகள் சிங்கப்பூரில் சிறப்பாக செயல்படுவதைப் பார்க்க மகிழ்ச்சியாய் இருந்தது. மெல்ல நடந்து வந்து, சக்கர நாற்காலிப் பயணத்தைத் தொடர்ந்தேன். மீண்டும் அந்தச் சிப்பந்தியின் அக்கறையான கவனிப்பு.

அண்ணனைப் பற்றிய நினைவுகள் மறுபடியும் ஒட்டிக் கொண்டது. ‘திடுதிப்பென்று’ , அழைத்துக் கொண்டு வந்து விட்டேனே ஒழிய, அவர் வருகைக்கு வீட்டை ஒழுங்குபடுத்துவதில் திண்டாடிப் போனேன். மாடியில் வசிக்கும் நான், அவரை மேலே கொண்டு போக இயலாது. கீழே இருந்த சாமான் அறையை க்ளீன் பண்ணி, அவருக்குத் தேவையான வசதிகள் செய்தேன். ரிமோட் கன்ட்ரோலில் இயக்கும், விளக்கு, மின்விசிறி, காலிங் பெல் படுக்கையிலிருந்தபடி அவர் கையால் இயக்க எளிதாக இருந்தது.

அண்ணனைக் கவனித்துக் கொள்ளவென்று, தனியாகக் குளிக்க வைக்க ஒரு பணியாளர், உணவு கொடுக்க ஒரு சமையல் ஆள், தனி நர்ஸிங் கேர் - இரவும் பகலும் எனச் சுழற்சிமுறைக் கவனிப்பில் அவர் இருக்க ஏற்பாடு செய்த பிறகுதான் நிம்மதிப் பெருமூச்சு வந்தது.

கணவர் இறந்த பிறகு, கவினுடன் சிங்கப்பூரிலேயே செட்டிலாவதாகத்தான் திட்டம். அவருடைய பென்ஷன் சம்பந்தமான வேலைகள், பூர்வீக நிலம் குறித்த டாக்குமென்ட் மாற்றுவது, என ஒரு வருடம் ஓடிவிட்டது. கீழே வாடகைக்கு குடித்தனக்காரர்களை வைத்து விட்டு, போகலாம் என்று முடிவு எடுத்தபோது, எதிர்பாராத விதமாக, அண்ணன் பொறுப்பு எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு விட்டது.

அவர் தேவைகளைப் பார்த்துப் பார்த்துக் கவனிக்க வேண்டியதாயிற்று. அவர் பேசுவதும் கேட்பதும் எனக்கு மட்டும்தான் விளங்கும். வேலைக்காரர்கள் புரியாமல் விழிப்பார்கள். மணிக்கணக்காகப் பேசித் தீர்க்கும் அவர் இப்போது பேச இயலாமல் தவிப்பதைப் பார்க்க வருத்தமாக இருந்தது. படிக்கப் பேப்பர், பார்க்க டி.வி, அவசரத்துக்கு என்னைக் கூப்பிட, ரிமோட்டுடன் கூடிய அழைப்பு மணி. வாரம் ஒருமுறை, டாக்டர் விசிட். ஒரு நாள் விட்டு ஒரு நாள் பிசியோதெரபிஸ்ட், தினமும் நாற்காலியில் உட்கார வைத்து, உருவி உருவி, இதமான வெந்நீர் குளியல், நேரா நேரத்துக்கு மருந்து மாத்திரைகள், சத்தான உணவு, ஒரு குழந்தையைப் போல் பராமரித்ததால் அண்ணன் தேறிவிட்டார். படுக்கையிலிருந்து எழுந்து ஊன்றுகோல் உதவியுடன் சுற்றி நடமாட முடிந்தது.

“எல்லாம் நல்லா இருக்கு. அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பது தான் சிரமமாக இருக்கிறது. எத்தனை நாளுக்கு இப்படி?” என்று ஒரு நாள் அவர் ஏக்கத்துடன் கூறியபோது, பார்க்கப் பாவமாக இருந்தது, வருத்தமாக இருந்தது. அன்று மாலையே, ‘சக்கர நாற்காலி’க்கு ஏற்பாடு செய்தேன். அதில் உட்கார வைத்து, வீட்டை விட்டு, வெளி வாசலுக்கு வந்து, தெருவைப் பார்க்க உட்கார வைத்தபோது, அவர் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டுமே! அதற்கு என்ன விலை கொடுத்தாலும், எவ்வளவு சிரமப்பட்டாலும் தகும் என்று தோன்றியது.

சக்கர நாற்காலியை உருட்டிக்கொண்டு வாசலுக்கு வந்து, தெருவை வேடிக்கை பார்ப்பதிலும், வருவோர் போவோரின் பேச்சுக்களைக் கவனித்துக் கொண்டிருப்பதிலும், தட்டுத்தடுமாறி ஏதாவது பேச முயல்வதுமாக அவர் இயந்திர வாழ்க்கையில் ஒரு மாறுதல்! சக்கர நாற்காலியின் வரவு, அவருக்குப் புத்துணர்வு ஊட்டியது. முகத்திலிருந்த சலிப்பு, சங்கடம் மாறி, அந்த வாழ்க்கையை அவர் இயல்பாக ஏற்றுக்கொள்வது புரிந்தது.

“அண்ணன் வழியில்லாமல் இங்கே வந்து விட்டார்,” என்று நினைத்து விடாதீர்கள்.! அவர் எங்கள் ஊர் நாட்டாண்மைக்காரராக இருந்தவர். தோப்புத் துரவெல்லாம் ஊரில் இருக்கிறது. மெக்கானிக்கல் அறிவு அதிகம். படிப்பு அதிகம் இல்லாவிட்டாலும் பழுதான மோட்டார்களைப் பார்த்த மாத்திரத்தில் சரிசெய்து ஓட்டி விடுவார். “ஏதோ என் மேலுள்ள பிரியத்தில் இங்கு வந்து இருக்கிறார்,” என வேலைக்காரர்களிடம் நான் பேசும்போது, அவர் முகத்தில் தெரியும் பெருமிதம் எனக்கு மகிழ்வளிக்கும். இப்படிப்பட்ட மனோதத்துவ சிகிச்சையும் அவ்வப்போது தொடரும்.

“மேம்? பாஸ்போர்ட்டைக் கொடுங்க”. மின் தூக்கியில் கீழே இறங்கி, குடிவரவு கவுன்டருக்கு வந்து விட்டோம். சக்கர நாற்காலி சிப்பந்தி, அதிகம் காத்திராமல், பாஸ்போர்ட்டைச் செக் செய்து கொண்டு வந்து என்னிடம் கொடுத்தார். முன்பெல்லாம் வெகுநேரம் நின்று கொண்டிருந்தது ஞாபகத்துக்கு வந்தது. இப்போதும் நீண்ட வரிசைதான். ஆனால் எங்கள் சக்கர நாற்காலி வாசிகளுக்கு முன்னுரிமை. முதுமை கொடுமை என்று யார் சொன்னது? இந்த வசதிகளைப் பார்க்கும்போது பெருமைதான். கொண்டு வந்திருந்த சாமான்களைச் சேகரித்துக் கொண்டு, நாங்கள் வெளியே வந்தபோது கவினும், ரமாவும் காத்திருந்தார்கள். சிப்பந்திக்கு நன்றி கூறினேன். அவன் கவனிப்பில் மனம் நிறைந்திருந்தது. அலுப்புத் தட்டாத பயணம் எனக்கு.

“பிரயாணம் சௌகரியமா இருந்ததா அம்மா?” என்று பாசத்துடன் கேட்ட கவினுக்கு, “விமானப் பயணம் மட்டுமல்ல, கவின்! சக்கர நாற்காலிப் பயணம் கூட வசதியாக இருந்தது” என்றேன் குதூகலமாக. கவின் சிரிக்க, மருமகள் ரமா, “நீங்கள்தான், ‘சக்கர நாற்காலியா? நானா? முடியவே முடியாது’ என்று அடம் பிடித்தீர்களே! உங்களைச் சம்மதிக்கவைக்க இவர் பட்டபாடு!” என்று சிரித்தாள். காத்திருக்கச் சொல்லிவிட்டு, பார்க்கிங்கில் இருக்கும் காரை எடுத்துவரச் சென்றான் கவின்.

மருமகளின் கைகளைப் பிடித்துக்கொண்டு, “சக்கர நாற்காலி, உண்மையிலேயே, ரொம்ப வசதியாக இருந்தது ரமா. எந்த சிரமமும் இல்லாமல் வரும்போதுதான் நினைத்தேன், என் அண்ணனுக்கு சக்கர நாற்காலி கொடுத்து சௌகரியம் செய்த புண்ணியம் தான், கடவுள் எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார்,” என்றேன் மனநிறைவுடன். ரமாவுக்கு சிரிப்பு தாங்கவில்லை. எனக்கு மறுபடியும் அண்ணன் நினைவு வந்துவிட்டது.

அவர் இப்போது வீட்டில் இல்லை. ஹோமில் விட்டுவிட்டு வந்திருக்கிறேன். “விசா புதுப்பிக்க வேண்டும்,” என்று என் பயணத்துக்குக் காரணம் கூறிப் புறப்பட்டிருக்கிறேன். ஒரு வருடத்துக்கும் மேலாக, ஓய்வின்றி, கீழேயும் மேலேயும் படிகளில் ஏறி இறங்கி அலைந்ததினாலா? இரவும் பகலும் ஒரு நோயாளின் துன்பம் கண்டு, ஏற்பட்ட மன உளைச்சலா? எனக்கு மூட்டுவலி வந்து விட்டது. ‘இனி நடக்கவே முடியாதோ?’ என்ற பயம் வந்தது. தகவல் அறிந்து பறந்து வந்த கவின், ஒரு தடவை அல்ல, பலமுறை வந்து தகுந்த சிகிச்சை அளித்து ஒரு வழியாக நான் தேறி எழுந்தேன். சாதாரணமாக நடமாட முடிந்தாலும், பழைய பலம் இல்லை. இயல்பான நடையில்லை. கொஞ்ச தூரம் நடந்தாலும், கால் வலியும் சோர்வும் ஆட்கொள்கிறது. என் மூட்டுவலி வேதனை கண்டு அண்ணன் தான் மிகவும் வருந்தினார். “எனக்குத்தான் இப்படி! நீயாவது சுகமாக இருக்கக் கூடாதா? உனக்கு ஏம்மா இந்தச் சோதனை?” என்ற புலம்பல். அரைகுறைப் பேச்சிலும் அதைப் பலமடங்கு பிரதிபலித்த கண்களில் குடிகொண்ட கவலையிலும் தெரிந்தது.

சென்றமுறை வந்தபோது, கவின் முடிவாகச் சொல்லிவிட்டான், “அம்மா! மாமாவைப் பார்த்துக் கொள்வது முக்கியம் தான். ஆனால் எங்களுக்கு நீங்கள் அதைவிட முக்கியம்! நல்ல ஹோமில் மாமாவைச் சேர்த்து விடலாம். எந்தக் குறையுமின்றி பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் நிம்மதியாக, எங்களுடன் வந்து இருக்கலாம்,” என்றபோது, எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

நெருக்கமானவர்கள், “உங்களுக்கும் வயதாகிறது. கவின் சொல்வது போல, இந்த வயதான காலத்தில் பிள்ளைகளிடம் போய் இருப்பதுதான் பாதுகாப்பு. அண்ணனுக்காக நிறைய உழைத்து விட்டீர்கள். ஒத்தாசைக்கு ஆள் இருந்தால், இனி அவர் எங்கேயும் இருந்து கொள்வார். உங்களுக்கென மகன், மருமகள், பேத்தி என ஒரு குடும்பம் இருக்கிறது. இனி அவர்களிடமிருந்து காலம் தள்ளுவதுதான் உங்களுக்கும் பெருமை. அவர்களுக்கும் பெருமை. வசதியான ஹோமில் சேர்த்துவிட்டு, சிங்கப்பூர் கிளம்பப் பாருங்கள்” என்ற போது யோசிக்கத் தோன்றியது. மருமகள் ரமா, “அத்தை! உங்கள் அண்ணனைப் பார்த்துக் கொள்வது உங்களுக்கு சந்தோஷம் என்றால், உங்களை இனிமேல் தனியே விடாமல், தன்னுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதுதான், உங்கள் பிள்ளைக்கு சந்தோஷம்” எனக் கூறியபோது, முடிவே பண்ணிவிட்டேன், சிங்கப்பூர் புறப்படுவதென்று. கவினுடன் தங்கி விடுவதென்று.

விசா புதுப்பிக்க நான் சிங்கப்பூர் போவதாக அண்ணனிடம் பேசியபோது, நான் எதிர்பார்த்ததற்கு மாறாக உற்சாகமாகப் பேசினார். “அடிக்கடி பிள்ளைகளைப் போய்ப் பார்த்துட்டு வரணும். அதுதான் அவர்களுக்கும் பெருமை, நமக்கும் பெருமை. என்னைப் பத்திக் கவலைப்படாதே. நான் வீட்டைப் பார்த்துக்கிறேன். நீ உடனே புறப்படு.” தைரியமும் தன்னம்பிக்கையும், இந்த இயலாமை நிலையிலும் அவரை விட்டுப் போகவில்லை. அதுதான் என் அண்ணன். அப்புறம் ஏவல் ஆட்களை நம்பி விட்டு வராமல், எல்லா வசதிகளும் நிறைந்த ஹோமில், நிறைய பணம் கட்டி சேர்த்து விட்டுப் புறப்பட்டாலும் மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது என்னவோ உண்மைதான்.

காரில் ஏறிக்கொண்டு, கவின், ரமாவுடன் பேசிக்கொண்டு வந்ததில், ஜூராங் வெஸ்ட் வந்ததுகூடத் தெரியவில்லை. 830 பிளாக் என்னை வரவேற்றது. எதிரிலிருந்த சிறுவர் பூங்கா, மரங்களின் அறிமுகச் சிரிப்பு அவற்றின் இலையசைவில் தெர்ந்தது. “எத்தனை வருடங்களாக, இந்தப் பூங்காவில் நடந்திருக்கிறேன்!” ஆறாவது மாடிக்கு மின் தூக்கியில் பயணித்தபோது, “மேல்தளம் மட்டுமே இருந்தாலும், ஊரிலும் இப்படியொரு வசதி பண்ணிக்கொள்ளணும். இல்லையென்றால் இனிமேல் மாடி ஏறி இறங்குவதெல்லாம் கஷ்டம்” என்ற நினைப்பு வந்த வேகத்தில் சிரிப்பும் வந்தது. நாம்தான் இங்கு நிரந்தரமாகவே தங்க வந்து விட்டோம். இனி எதற்கு அந்தக் கவலை?

வழக்கமாக நான் வந்து தங்கும் அறை என் மருமகள் கை வண்ணத்தில் தயாராக இருந்தது. சுத்தமான விரிப்புடன் கூடிய படுக்கை, கண்ணாடி கூடிய அலங்கார மேஜை, சுழல் நாற்காலி, கால் நீட்டிக்கொள்ள சின்ன மேஜை, ஒழுங்குபடுத்தியிருக்கும் கப்போர்டு. எதிர் சுவரில் எழுந்தவுடன் நான் வணங்கும் காலண்டர் பிள்ளையார், சின்னதாக விபூதித் தட்டு. என் மேல் அவள் வைத்திருக்கும் அக்கறை செயல்களில் தெரிந்தது. பெட்டிகளைக் கொண்டு வந்து, அறையில் வைத்துவிட்டு, என் அருகே உட்கார்ந்த கவின் கேட்டான், “மாமா என்ன சொன்னார்?”.

“விசா வேலைகள் முடிந்தவுடன் ஒரு மாதத்தில் வந்து விடுவேன்,” என்று சொன்னேன். “’வேலைகளைப் பொறுமையாக முடித்துவிட்டு, அவசரம் இல்லாமலே வா. தூரம் தொலை ஊர், அடிக்கடி செலவு செய்து போய் வர முடியுமா? நான் சமாளிச்சுக்குவேன்’ என்றார்.” கவின் பரிதாபமாக என்னைப் பார்த்தான். “ஏம்மா, அப்படிச் சொன்னீங்க? நீங்கள் இங்கேயே தங்கிவிடப் போவதைப் பக்குவமாகச் சொல்லி இருக்கலாமே! மனதளவில் அவரைத் தயார் படுத்தியிருக்க வேண்டாமா?” என்றான். என் நினைவு மீண்டும் பின்னோக்கி ஓடியது. பாத்ரூம் இணைப்புடன் தனி ரூம், மெத்தைக் கட்டில், டி.வி. அடிக்கடி வந்து பார்த்துக்கொள்ளும் பணியாட்கள், நேரா நேரத்துக்கு மருந்து மாத்திரை கொடுத்து, உடல் நலனைக் கவனித்துக் கொள்ளும் செவிலியர் என எந்தக் குறையும் இல்லாதது, அந்த விடுதி. நிறையப் பேசி, அவரை விட்டுக் கிளம்பிய போது, “நல்லபடியா போய்ட்டு வா. ஒரு மாசத்திலே வந்திருவல்ல?” என்றபோது, குழறிய அந்தக் குரலிலும், பார்வையிலும் தெரிந்த ஏக்கம் என் வயிற்றைப் பிசைந்தது. கைகளைப் பிடித்துக் கொண்டு, “சீக்கிரம் வந்து விடுவேன்,” என்று ஆதரவாக அவர் தோள்களைத் தட்டிக் கொடுத்தேன். “எல்லாம் வசதிதான். இருந்தாலும், நம்ம வீடு, நம்ம மனுஷர் போல ஆகுமா?” என்றவரிடம் ஒரேயடியாக மகனுடன், சிங்கப்பூரிலேயே தங்கிவிடப் போகிறேன் என்று சொல்லும் துணிச்சல் எனக்கு இல்லை. கவினுக்குத் தெரியாமல் கண்ணீரை மறைத்துக் கொண்டேன்.

பயணக் களைப்பு, படுத்ததுதான் தெரியும். நன்றாகத் தூங்கிவிட்டேன். கடிகாரத்தைப் பார்த்தால் மணி 7.30 ஆனது. ‘நேரம் ஆனது தெரியாமல், தூங்கிவிட்டோமே’ என்று பதறியடித்து எழுந்தவளை, இழுத்துப் பிடித்து, உட்கார வைத்தது மனம். இரண்டரை மணி நேரம் வித்தியாசம். அங்கு ஐந்து மணிக்கு எழுந்திருப்போம். இங்கு 7.30 மணி. எல்லாம் ஒன்றுதான் என்ற நினைவு அமைதிப்படுத்தியது. கவின் அலுவலகம் சென்று விட்டான்.

வேலைகள் முடித்து, ஆறாவது மாடியிலிருந்து, மின் தூக்கியில், நான் கீழ்த்தளத்துக்கு வரும்போது மணி பத்துக்குமேல் ஆகிவிட்டது. இடுப்பில் மாட்டிக் கொண்டு வந்த, சாவிக் கொத்திலிருந்து எங்கள் வீட்டு தபால்பெட்டியின் சாவியைத் தேடி எடுத்துத் திறந்தேன். உள்ளே அன்றைய தமிழ்த் பத்திரிகை “வந்தாச்சா” என வரவேற்றது. சிங்கப்பூருக்குப் பயணச் சீட்டுப் போட்ட உடனே ரமா செய்யும் முதல் வேலை எனக்குப் பிடித்த தமிழ்ப் பத்திரிகைக்கு சந்தா கட்டுவதுதான். யோகா போல், காபி போல், தினசரி பேப்பர் படிப்பதும் என் நித்திய கடமைகளில் ஒன்று.

பத்திரிகையைக் கையில் பிடித்துக்கொண்டு பூங்காவைச் சுற்றியிருக்கும் நீண்ட நடை பாதையில் நடக்க ஆரம்பித்தேன். முன்பெல்லாம் மூன்று சுற்று வருவேன். இப்போது முழங்கால் வலி வந்த பிறகு முடியுமா? என்று தோன்றவில்லை. ஆறாவது மாடி ஜன்னலிலிருந்து இந்தப் பூங்காவைப் பார்ப்பது, எனக்கு நல்ல பொழுதுபோக்கு. அதிகாலை ஐந்து மணிக்கே பூங்கா கலகலத்து விடும். அலுவலகம் போகும் சிலர், அந்த அவசரத்திலும் அதிகாலையில் எழுந்து ஓட்டம், நடை என ஆரம்பித்துவைக்க, ஒன்பது மணிக்குமேல், ஓய்வாக இருக்கும் குடும்பத் தலைவிகள், வயதானவர்கள் என்று ஒரு கூட்டம் நடைப்பயிற்சி செய்து கொண்டு, வெயில் காய்ந்து கொண்டு, முடிந்த அளவில் உடற்பயிற்சி செய்து கொண்டு பார்க்க ரம்மியமாக இருக்கும். மாலை 4 மணிக்கு மேல், இளந்தாய்மார்கள், பள்ளி விட்டு வந்துவிட்ட இளம் குழந்தைகளுடன் பூங்காவை முற்றுகையிட, அந்த இளம் புயல்களின் வரவால், பூங்கா அமளி துமளிப்படும். இரவு அலுவலகம், கல்லூரியிலிருந்து திரும்பும் இளைஞர்களால் பேட்மிண்டன், ஓட்டம், நடை, உடற்பயிற்சி எனக் கலகலப்பாகி பத்து மணிக்கெல்லாம் பூங்கா அமைதியில் ஆழ்ந்து விடும். ஓய்வாக அமர ஆங்காங்கு பெஞ்சுகள், நிறைய மரநிழல்கள், கவனமான பராமரிப்பு. ஆக, ஓர் ஆரோக்கியமான வாழ்வுக்கு அங்கு வித்திட்டிருப்பதைக் காண முடிந்தது.

நினைவுகளுடன் ஒரு வட்டம் முடிந்து, மரத்தைச் சுற்றி வட்ட வடிவமாக அமைத்திருந்த பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். கூட்டம் குறைந்து வளர்ப்பு நாய்களைப் பிடித்துக்கொண்டு ஓரிருவர் உலவிக் கொண்டிருந்தனர்.

முன் ஜாக்கிரதையாக கையில் ஒரு கேரிபேக். அவர்கள் செல்லங்கள் காலைக்கடன் கழித்தால், எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட வேண்டும் என்பது விதி. வயதானவர்கள் ஒரு சிலர் ஊன்றுகோலுடன் தளர் நடை பயில, முதியவர் ஒருவரை சக்கர நாற்காலியில் வைத்து, இளம் பெண் ஒருத்தி சுற்றி வந்து கொண்டிருந்தாள். பெரியவருக்குத் தொண்ணூறு வயதிருக்கும். எனக்கு என் அண்ணன் ஞாபகம் வந்தது.

வைத்த கண் வாங்காமல், பார்த்துக் கொண்டிருந்த என்னை பக்கத்தில் கேட்ட குரல் கலைத்தது. “தமிழ்க் குரல்!” வியப்புடன் திரும்பிப் பார்த்தேன். “என்ன அப்படிப் பார்க்கிறீங்க?”. தேன் மதுரத் தமிழ் ஓசை கேட்டு, மளமளவென பேச ஆரம்பித்தோம். நாற்பது வயதிருக்கும். சற்று பருமனான உடல். இளைப்பதற்க்காக நடக்கிறாராம். மூச்சு வாங்கப் பேச ஆரம்பித்தாள். “நம்ம ஊரிலே தடுமாற ஆரம்பிச்சாலே பெரியவுங்களை வெளியே விட மாட்டோம். ஆனா இங்கே ரொம்ப மரியாதையாவும், அன்பாகவும் நடத்து வாங்க. சில பேர் தனியா ஆள் போட்டு தேவையான உதவிகள் செய்ய, ரெண்டு வேளையும் இப்படி பார்க்குக்குக் அழைத்து வந்து உலாத்தறதுக்குன்னே ஆள் போட்டுக்குவாங்க. நல்ல சாமான் இருந்தாக் கூட, ‘உபயோக மில்லேன்னா இடத்தை அடைக்குதுன்னு’ யோசிக்காமே தூக்கி வெளியே போடுகிற. இந்த ஊரிலே, எவ்வளவு வயசானாலும் பெரியவுங்களுக்குத் தனி மரியாதை, சலுகைகள், தனி கவனிப்புடன் ஆதரிக்கிறாங்க.” பிரமிப்போடு பார்த்தேன். மூத்த தலைமுறையை அன்புடன் அரவணைக்கும் இந்த தலைமுறை மேல் எனக்கு தனி மரியாதையே வந்துவிட்டது. அந்தப் பெண் பெயர் மீனா. திருநெல்வேலி பக்கம் ஊர். வந்து பத்து வருடங்களுக்கு மேலாகிறது. நிரந்தரக் குடியுரிமை வாசி.

பேச்சு பல்வேறு திசைகளில் பயணித்துக் கொண்டிருக்க, ‘மணி பிளான்ட் செடி வெளியே தொங்கி, அடையாளம் காட்டும் எங்கள் ஆறாவது மாடியையும்’, ஜன்னல் வழியே என்னைத் தேடிக் கொண்டிருந்த ரமாவையும் அறிமுகப்படுத்தினேன். தள்ளி நின்று கையாட்ட, ரமாவும் கையாட்டி, மேலே வரும்படி சைகை செய்தாள். மீனாவிடம் விடைபெற்றுக் கிளம்பினேன். மதியச் சாப்பாட்டு நேரம். விதவிதமாய் சமைப்பதிலும் சரி, நேரம் தவறாமல் பாசத்துடன் பரிமாறுவதிலும் சரி, எங்கள் ரமாவை மிஞ்ச ஆளே கிடையாது.

பேருந்துப் பயணத்தை ரசித்துக் கொண்டிருந்தேன். “உங்களைப் பேருந்தில் அலைய விட்டது தெரிந்தால், அவர் என்னத் திட்டித்தீர்த்துவிடுவார். எனப் பொருமினள் ரமா. சிங்கப்பூரில் என்முதல் தேர்வு நூலகம்தான், அள்ளிக் கொண்டு வந்து போட்டு, ஆசை தீரப் படிப்பதில் என் நேரம் போவதே தெரியாது. காரில் வருவதென்றல் இன்னும் நாலுநாள் காத்திருக்க வேண்டும். பேருந்து ஓடிக் கொண்டிருந்தது. மதிய வேளை அதிகக் கூட்ட மில்லை. ஜுராங் ஈஸ்ட் நூலகம் வர இன்னும் கொஞ்சம் நேரமாகலாம். உடல் ஊனமுற்றவர்களுக்காக ஒதுக்கிய பகுதி. சக்கர நாற்காலியில் ஓரு முதியவள் அமர்ந்து இருக்க, பக்கத்தில் அவள் பெண் உட்கார்ந்திருந்தாள். தாயின் ஜாடை தெரிந்தது. “ரமா! இவர்கள் பேருந்தில் ஏறிஇறங்குவது எப்படி?” என்றேன் ஆச்சரியமாக! “பொறுங்கள்” என்ற ரீதியில் ரமா தலையசைத்தாள்.

அடுத்த நிறுத்தம் நெருங்கும்போதே அந்தப் பெண், தன் இருக்கைக்குப் பக்கமிருந்த, அழைப்பு மணியை அழுத்த அது ஓட்டுநர் இருக்கைக்கு அருகே ஒலிப்பது கேட்டது. அந்த அழைப்பிலிருந்த ஒலியோ? அல்லது ஒளியா? அதன் வேறுபாடு, ஓட்டுநருக்கு அது உடல் ஊனமுற்றவர் அழைப்பு என்பதை உணர்த்தியிருக்க வேண்டும். எனக்குத் தெரியவில்லை. அதை பின்பு ரமாவிடம் கேட்கவேண்டும். ஓட்டுநர் தன் இருக்கையிலிருந்து எழுந்து வந்து, படிக்கட்டருகே இறங்குவதற்கு தோதாக, சரிவாக, ஒரு சாய்வுப் பலகையை இறக்கிவிட்டார். சக்கர நாற்காலி, தன் பயணியுடன் எந்தச் சிரமமும் இல்லாமல் இறங்கி, சமதளத்தில் நின்றது. எந்த அவசரமும் இல்லாமல், பலகையைப் பழைய இடத்தில் பொருத்திவிட்டு, ஓட்டுநர் பயணத்தைத் தொடர்ந்தார். பயணிகள் ஏறும்முன் இறங்கும்முன் பேருந்தைக் கிளப்பி, ஆபத்தை விலைக்கு வாங்கும் நம் ஊர் ஓட்டுநர்கள் இதைப் பார்க்க வேண்டும். “எப்படி?” என்றாள் ரமா. “அருமை” என்றேன் நான். ஊனமுற்றவர்கள் என ஒதுக்கித் தள்ளாமல், அவர்களை இரக்கத்துடன், பாதுகாப்புடன், பட்சமாக நடத்தும் விதம் போற்றுதர்க்குறியது. நூலகம் போனது, புத்தகம் எடுத்தது எல்லாம், இயந்திர கதியில் நடக்க, என் நினைவு எல்லாம் இந்தப் பேருந்துப் பயணத்தையே சுற்றி சுற்றி வந்தது. எத்தனை அற்புதமான மனிதர்கள் இவர்கள்?

ஐ.சி.ஏ.வில் ஒருநாள். கவின் விடுமுறை எடுத்துக்கொண்டு, என்னை அழைத்துப் போக, அந்த அமைதியான இடத்தில் டோக்கன் வாங்கிக் கொண்டு காத்திருந்தோம். விசா புதுப்பிக்க, விசா வாங்க, மற்றும் விசா தொடர்பான வேலைகளைக் கவனிக்கவென்று நிறையக் கூட்டம். பொறுமையாக உட்கார்ந்து அமைதியாக அமர்ந்திருந்து, வேலை சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தது. மிஞ்சிப் போனால் ஒரு மணி நேரம் இருக்கும், எங்கள் நம்பர், திரையில் வந்து அழைத்தது. விவரங்கள் கேட்டு, விவரங்கள் சரிபார்க்கப்பட்டு என் விசாவை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து முத்திரை இட்டுக்கொடுத்தார்கள்.

ரமா கை குலூக்கினாள் “அத்தை! இன்னும் மூணு வருசத்துக் உங்களை யாரும் அசைக்கமுடியாது. நினைத்தபோது போகலாம், வரலாம்,” என்று ரமா உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தபோது,,கவின் குறுக்கிட்டான். “அம்மா இனி இங்கே தானே இருக்கப் போகிறர்கள்! போவதைப் பற்றிப் பேசுவதே வேண்டாம்,” என்றான். அவனுடைய அந்த அக்கறை எனக்கு மகிழ்ச்சி அளித்தது.

வந்த வேலை சிறப்பாக முடிந்த பின், மற்ற வேலைகளில் கவனம் திரும்பியது. ஒவ்வொரு கோவில் ஒருநாளென, டேங்க்ரோடு முருகன், ஜூராங் ஈஸ்ட் முருகன், சைனாடவுன் சித்தி விநாயகர் கோயில், சிராங்கூன் பெருமாள் கோவில், அடுத்து என் நெஞ்சில் குடியிருக்கும் மாரியம்மன் கோவில். அந்த மகமாயியைத் தரிசித்த நிறைவில் என் மனம் நிறையும்.

ஜூரோங் ஈஸ்ட் முருகன் கோவிலில், ஒரு புறம் வீற்றிருக்கும் எங்கள் குலதெய்வம் கருப்புச்சாமியை தரிசித்தபோது என் கவலை எல்லாம் பறந்து போய்விடும். இன்னும் இங்கு எண்ணற்ற கோவில்கள். ஊரிலும் திரும்பிய இடமெல்லாம் கோவிலாக இருந்தாலும் அண்ணனைத் தனியாக விட்டுவிட்டு நான் அதிகமாக, ஏன்? போனதே கூட இல்லை. தெருவில் உலாவரும், எங்கள் தெருக் காளியம்மனை வாசலில், நின்று மன நிறைவோடு என் அண்ணனுக்காக, என் பிள்ளைகளுக்காக, நான் வேண்டிக்கொள்வேன்.

என் பேத்தி பவ்யா விருப்பத்திற்க்காக ‘சைன்ஸ் சென்டர், யுனிவர்சல் ஸ்டூடியோ, செந்தோசா, ஹா பார் வில்லா, மெரினாபே’ சென்று வந்தேனே ஒழிய என் முழுத் திருப்தியும் தெய்வத் தலங்கள்தான். சொல்ல மறந்து விட்டேனே! ஜூரோங் ஈஸ்ட் முருகன் கோவிலில் இருக்கும் ஆஞ்சநேயர் என்னுடன் நேரில் பேசுவது போலவே இருக்கும்! ஏதாவது ஒரு பிரார்த்தனையை அவரிடம் வைத்துவிட்டு ஊருக்குப் போவதும், வந்ததும், கவினிடம் டாலர் வாங்கி காணிக்கை செலுத்துவதும் என் வழக்கம். அன்னதானப் பிரசாதம் வாங்கி நிம்மதியாகச் சாப்பிட்டு விட்டு வருவேன். அம்மனுக்குச் சாற்றிய புடவைகளை ஓரமாக விற்பனைக்கு வைத்திருப்பார்கள். நான் ஒரு முறை வாங்கியிருக்கிறேன். உடுத்தும்போது, அம்மனே எனை கவசமாய் காப்பது போல் ஒரு உணர்வு.

அன்று விடுமுறை நாள். பவ்யாவுக்கு வேண்டிய காஸ்மெட்டிக் ஐட்டங்கள், ரமாவுக்குத் தேவையான வீட்டுச் சாமான்கள், கவினுக்கு வேண்டியவை என்று ஒரு லிஸ்ட் தயாரித்துக் கொண்டு, “ஜூராங் பாய்ண்ட் மால்” ஒன்றுக்கு சென்றிருந்தோம். ஒரு மணி நேரம்போல் சுற்றி வந்ததில், கால் வலியெடுத்து, உட்கார்ந்து விட்டேன். புள்ளிமானாய் சுற்றித் திரியும் பேத்தி பவ்யாவுடைய வேகத்துக்கு அவள் பெற்றோர் கள்தான் ஈடுகொடுக்க இயலும். அவர்கள் ஆளுக்கு ஒரு பக்கமாய் ஷாப்பிங்கில் மூழ்கி விட்டார்கள். கையிலிருந்த கரும்புச் சாற்றைக் குடித்து, களைப்பகற்றி, சுற்றுப்புறத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். நீளமான அந்தக் கோடியில் ஒரு சக்கர நாற்காலி வருவது தெரிந்தது. முன்பைவிட, இப்போது சக்கர நாற்காலிகள் தான் என் கவனத்தை ஈர்ப்பது புரிந்தது. அண்ணனுக்கு இந்த வசதி பண்ணிக் கொடுத்து அவர் மகிழ்ச்சியைப் பார்த்த பிறகு, இந்தச் சக்கர நாற்காலி மேல ஒரு தனிப் பாசமே வந்துவிட்டது.

மாஸ்க் போட்டுக் கொண்டு, வயதான பெண்மணி தொண்ணூறு வயதுக்கு மேல் இருக்கும். தளர்ந்த ஒல்லியான உடல், நரைத்த கேசம் பாப் வெட்டியிருந்தது. கணுக்கால் வரை கவுன். சைனிசா? மலாயா? என்று தெரியவில்லை. கழூத்தில் தொங்கிய கைப்பையுடன் மலர மலரப் பார்த்தவாறு சக்கர நாற்காலியில் உட்கார்ந்து வர, ஒரு பணிப் பெண் தள்ளிக் கொண்டு வந்தாள். கடைகளுக்குச் சென்று பொருள் எடுத்து வந்து காட்டுவதும், முதியவள், அவள் கை நடுங்க வாங்கி உற்றுப் பார்த்து அபிப்பிராயம் சொல்லுவதுமாக வந்து கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் ‘விண்டோ ஷாப்பிங்’ தான் என்று தெரிந்தது. ஒரு இடத்தில் மட்டும் ஏதோ ஒரு பொருளை முதியவள் தேர்வு செய்து கொடுத்ததும், கழுத்தில் மாட்டியிருந்த பையில் பணம் எடுத்துக் கொடுத்ததும், பணிப் பெண் பவ்யமாய் கொண்டு வந்து கொடுத்த மீதியை, கவனமாய் சரிபார்த்து, தன் பையில் போட்டதும் தெரிந்தது.

சக்கர நாற்காலி என் அருகில் வந்து நின்றது. பணிப்பெண் முதியவளுக்கு, தண்ணீர் கொடுத்து அமைதிப்படுத்திவிட்டு, என் அருகே உட்கார்ந்தாள். ஒரு நட்புச் சிரிப்புடன் நான் அவளைப் பார்த்து, “ஹாய்” சொல்ல, அவளும் “ஹாய்” சொல்லிவிட்டு, “சென்னையிலிருந்து வருகிறீர்களா?” என்ற அவள் கேள்வி என் காதில் தேனாகப் பாய்ந்தது. “யாமறிந்த மொழிகளிலே” என்ற வரிகள் மனதுக்குள் ஓட, மகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தேன். அவள் உடையும் தோற்றமும், வேறு மாதிரி காட்ட, “உனக்குத் தமிழ் தெரியுமா?” என்ற என் கேள்விக் கேட்டு, மலர்ச்சியுடன் சிரித்தாள். “பல தலைமுறையாய் நாங்கள் சிங்கப்பூர் குடிமக்கள்தான். என் முன்னோர்கள் காரைக்குடி பக்கமிருந்து வந்ததாகச் சொல்வார்கள். வீட்டில் தமிழ் நிறையப் பேசுவோம். மலாய், சைனிஸ், ஆங்கில மொழிகளும் தெரியும். வேலைக்குப் போகும் இடங்களில் அவரவர் மொழிகளில் பேசுவோம்,” என்றாள்.

முதியவளைப் பரிவுடன் பார்த்தவாறு, “இந்த வயதான காலத்தில் பாட்டியை ஏன் இழுத்தடிக்கிறீர்கள்? என்றவள் நாக்கைக் கடித்துக் கொண்டேன். எனக்கே எழுபது வயதாகப் போகிறது. அவளைப் போய்ப் பாட்டி என்கிறேனே?” மேக்னா சிரித்தாள். “இழுத்தடிக்கிறோமா? யார் சொன்னது? நாங்கள் ‘ட்ரீட்மெண்ட்’ கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.” “ஆஸ்பத்திரிகூட இங்கே இருக்கிறதா? என்ன?” வியப்புடன் கேட்டேன். மறுபடியும் சிரித்தாள் மேக்னா. இந்தச் சிரிப்பு, அவளை மேலும் அழகூட்டியது. பேச ஆரம்பித்தாள். “இவுங்களுக்கு தொண்ணூற்றி அஞ்சு வயசுக்கு மேல் ஆகுது.” பாட்டி என்று சொல்லியது, பரவாயில்லை தான் என நினைத்துக் கொண்டேன். இருப்பினும் அந்தக் கூர்மையான பார்வையும், சுறு சுறுப்பான இயக்கங்களும், வயதை நம்ப மறுத்தது. “பரவாயில்லையே! இவ்வளவு வயதுக்கு கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டு ஸ்மார்ட்டா இருக்காங்களே!” என்றேன் வியப்புடன்.

“அதுதான் எங்க சின்ன மேடம் கொடுக்கிற ட்ரீட்மெண்ட். உடம்புக்கல்ல. மனதுக்கு. அவங்க பெரிய மேடத்தோட மருமகள். ஆமாங்க மேடம்? வயசானவங்களை முடக்கிப் போடாமே, இப்படி சில வேலைகளை அவர்களுக்குக் கொடுத்து, தானும், வீட்டுக்கு உபயோகமாகத்தான் இருக்கிறோம். நம்மாலும் வேலை செய்ய முடியும், யாருக்கும் சுமையாயில்லை என்ற உணர்வை அவர்களுக்கு உண்டு பண்ணுவதுதான் இதன் நோக்கம். நேர்த்தியாய் உடை அணிவதும், ஆர்வமாக வெளியில் கிளம்புவதும், பலதரப்பட்ட மக்களைப் பார்ப்பதும் உடலிலும் மனதிலும் புத்துணர்வு ஊட்டும். கலகலப்பான சூழ்நிலை, அவர்கள் மூளையை உற்சாகப்படுத்தி, வாழவேண்டுமே என்ற விரக்தியைப் போக்கி, வாழ வேண்டும் என்ற பிடிப்பை, உண்டாக்குகிறது. ஏதோ ஹேப்பி ஹார்மோனாமே! டிமென்ஷியா, அம்னீஸியா, பார்க்கின்ஸன் போன்ற இன்னும் பல முதுமை நோய்களும் வராமல் தடுக்க உதவுமாம். என்ன? இவர்களைக் கவனிக்க கூடுதல் பொறுமை வேண்டும். அதற்க்குத்தான் எங்களைப் போனறவர்கள் இருக்கிறமே” என்று பேசி முடித்தபோது திகைத்துப்போனேன். சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்த, அந்த மலாய் பாட்டியின், கைகளைப் பற்றி விடை கொடுத்தபோது, மென்மையான அவர் கைகுலுக்கலில் சந்தோஷம் தெரிந்தது.

வீட்டுக்கு வந்து, டின்னர் முடித்துப் படுக்கையில் விழுந்த எனக்கு, வெகுநேரம் வரை தூக்கம் வரவில்லை. பார்க்கில், பேருந்தில் மாலில் பார்த்த சக்கர நாற்காலிகள், என்னையே சுற்றிச்சுற்றி வந்தன. அதன் தொடர்பான விஷயங்கள் மனதைப் பிசைந்தன. பயன் முடிந்ததும் தூக்கிப் போடும், பழம் பொருளாய் எண்ணாமல் தன் வயோதிக உறவுகளை ஒரு பொக்கிஷமாய்ப் பாராட்டும் இவர்களின், மனிதநேயம்!, இந்த மனிதாபிமானத்துக்கு உறுதுணையாய் இருக்கும் இந்த நாடு!, இருகரம் கூப்பி வணங்கத் தோன்றியது. எனக்காக, என் சுகத்துக்காக என் அண்ணனின் பொறுப்பை, உதறிவிட்டு, இங்கு வந்து ஒளிந்து கொண்டது, எனக்குச் சரியாகப்பட வில்லை. உள்மனம் என் தவறை எனக்கு உறுத்தியது. வாழ்வதற்க்கு ஒரு அர்த்தம் வேண்டும். என் வாழ்வின் அர்த்தம் கூட, ஆதரவற்ற என் அண்ணனைப் பாசத்துடன் பராமரிப்பதாக இருக்கலாம். ஒரு முடிவுக்கு வந்தேன். விரைவில் ஊருக்குத் திரும்பி, முதியோர் இல்லத்தில் இருக்கும் அண்ணனை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்துவிட வேண்டும், நிம்மதியாகப் படுத்துத் தூங்க ஆரம்பித்தேன்.

காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக கவினிடம், ஊர் திரும்ப பயணச் சீட்டுக்கு ஏற்பாடு செய்யச் சொன்னேன். கவினும் ரமாவும் வியப்புடன் பார்த்தார்கள், “ஆமா கவின்! வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் வேண்டும். என் வாழ்க்கைக்கு அர்த்தம், நடமாடமுடியாத என்அண்ணனைப் பாதுகாப்பதாகக் கூட இருக்கலாம்,” நான் பேச ஆரம்பித்தேன்.” நல்லபடியாக அவர் காலம் முடிந்தபிறகு, நான் திரும்ப வந்து விடுகிறேன். உங்களையெல்லாம் பிரிந்து, நான் கண்டிப்பாகத் தனியே இருக்க மாட்டேன். அப்துல் கலாம் ஐயா சொல்லியது போல், “பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும்,” என்றார். சரித்திரம் படைக்காவிட்டாலும், ஒரு சாதாரணமனுசியா ஒரு நடக்க இயலாத ஜீவனுக்கு, கடைசி காலத்தில் உதவிசெய்த, திருப்தி எனக்குக் கிடைக்கட்டும். அதற்கு நான் கொடுக்கும் விலை, பாசமான உங்களைப் பிரிந்திருப்பதுதான் என்றேன்.

என்னசொல்வதென்று தெரியாமல் வருத்தத்துடன் கவின் என்னைப் பார்த்தான். அந்த இறுக்கமான சூழ்நிலையை வழக்கம்போல் ரமாதான் கலைத்தாள்.

“அத்தை, ஒரு தரம் முடிவு செய்துட்டா, அப்புறம் அவுங்க பேச்சை அவுங்களே கேட்க மாட்டாங்க. சிரித்தாள் ரமா. அவுங்க நல்ல நோக்கத்துக்கு நாம துணையா இருப்போம். கவலைப்படாதீங்க. அவுங்க கடமையை முடிச்சிட்டு, நிம்மதியாக வந்து நம்ம கூட இருக்கட்டும்,” என்றாள் பரிவுடன்.

முதியோர் இல்லக் காப்பாளரைத் தொலைபேசியில் அழைத்து, ”அண்ணன்” எப்படி இருக்கிறார்? என்று விசாரித்தேன். “நாங்க என்னதான் கவனித்துக் கொண்டாலும், அவர் உங்களைத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறார் அம்மா!” என்றார்.” அடுத்த வாரம் வந்து விடுவேன் என்று, அண்ணனிடம் சொல்லுங்கள்,” என்றேன் உற்சாகமாக, மகிழ்ச்சியாக.

தனலக்‌ஷ்மி கருப்பையா