திருப்புகழ் திருவிழா

திருப்புகழ் திருவிழா

2 mins read
c34b7415-51e2-416c-bbe8-7a0cbec405a4
போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள். - படம்: ஓம் ஆர்ட்ஸ்
Google News Preferred Icon

புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவிலில் ‘ஓம் ஆர்ட்ஸ்’ நிறுவனம், கந்தன் தினைப்புனத்தின் ஆதரவுடன் சீனப் புத்தாண்டு விடுமுறையன்று (பிப்ரவரி 18) திருப்புகழ் திருவிழாவைக் கொண்டாடியது.

குழந்தைகள் தற்போது தொழில்நுட்பத்திலும் சமூக ஊடகங்களிலும் மிகுந்த ஈடுபாடு காட்டும் நிலையில் மொழி, இலக்கியம், பாரம்பரியத்தின்மீதும் அவர்கள் ஈடுபாடு கொள்ளவேண்டும் என்ற நோக்கில், வண்ணம் தீட்டுதல், ஓவியம் வரைதல், பாடல், பேச்சுப்போட்டி என பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பாலர் பள்ளி முதல் உயர்நிலை 4 வரையிலும் படிக்கும் மாணவர்கள் என 53 பிள்ளைகள் பங்கேற்றனர்.

விழாவில் திரளாகப் பங்கேற்றோர்.
விழாவில் திரளாகப் பங்கேற்றோர். - படம்: ஓம் ஆர்ட்ஸ்

“அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ், வாழ்க்கையை உயர்த்துகின்ற வழிகாட்டும் வரிகளாகத் திகழ்கிறது. அதில் உள்ள ஆழ்ந்த தத்துவங்களும் விழுமியங்களும் பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கை, பணிவு, துணிவு, அன்பு, இரக்கம், தன்னடக்கம், சமூகச் சிந்தனை போன்ற நல்லொழுக்க பண்புகளை வளர்ப்பதோடு, மாணவர்களின் சிந்தனையைத் தூண்டி, அவர்களை நல்ல மனிதர்களாகவும் பொறுப்புள்ள குடிமக்களாகவும் உருவாக்க வேண்டும் என்பதே இந்நிகழ்ச்சியின் முதன்மையான நோக்கம்,” என்று அமைப்பு குறிப்பிட்டது.

வரவேற்புரைக்குப் பின் சிறப்பு விருந்தினர் டாக்டர் ஆ ரா சிவகுமாரன் குத்துவிளக்கேற்றி வைத்தார். முத்தாய்ப்பாக அமைந்த பிரியா நாயர் அறக்கட்டளை நிறுவனரின் ‘காவடிச்சிந்து’ நடனத்தையடுத்து போட்டிகள் தொடங்கின. திருவாட்டி கங்கா பாஸ்கர் முழு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.

போட்டிகள் முடிந்த பிறகு ஓம் ஆர்ட்ஸ் நிறுவனர் சுபாஷினி நாயர் எழுதிய ‘திருப்பரங்குன்றக் கடவுள்’ (God of Thiruparankundram) என்ற குழந்தைகளுக்கான நூலைக் கந்தன் தினைப்புனத்தின் நிறுவனர் வினுதா கந்தகுமார் வெளியிட்டார். சிறப்பு விருந்தினர் ஆ ரா சிவகுமாரன் சிறப்புரை ஆற்றி, அனைத்து மாணவர்களுக்கும் பரிசளித்தார்.

திருப்புகழ் வகுப்புகளில் கலந்துகொள்ள விரும்புவோர் வினுதா கந்தகுமாரை 94591773 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்
கோவில்திருப்புகழ்போட்டிமாணவர்கள்