அழகுராணிப் போட்டியில் வென்ற புதுமை மகளிர்

அழகுராணிப் போட்டியில் வென்ற புதுமை மகளிர்

2 mins read
e8a76188-3af3-4cc7-9eca-86919903809d
பிரதான பட்டங்களை வென்ற (இடமிருந்து) ஜே எஸ் பிரியோனா, ஜெயந்தி ராஜகோபாலன், இஷா பர்வீன். - படம்: லூமியர் இண்டர்நேஷனல்
Google News Preferred Icon

மூன்று இந்தியர்கள் மே 18ஆம் தேதி ‘லூமியர் இண்டர்நேஷனல்’ நடத்திய ‘சிங்கப்பூர் குளோபல் யுனிவர்ஸ்’ அழகுராணிப் போட்டி இறுதிச்சுற்றில் பிரதான பட்டங்களை வென்றனர்.

‘அனைத்துலக சுற்றுலா சிங்கப்பூர் அழகி 2024’ என்ற பிரதான பட்டத்தையும் ‘கவர்ச்சியழகி 2024’ என்ற பட்டத்தையும் வென்றார் ஜே எஸ் பிரியோனா.

திருமணமானோர் பிரிவில் ‘அனைத்துலக சிங்கப்பூர் அழகி’ என்ற பிரதான பட்டத்தையும் ‘ஆசிய பசிபிக் வைர ராணி 2024’, ‘நன்கொடை ராணி’, ‘மக்கள் மனம் ராணி’, ‘ஊக்கமூட்டும் அழகி’ ஆகிய பட்டங்களையும் பெற்றார் ஜெயந்தி ராஜகோபாலன்.

திருமணமானோர் பிரிவில் ‘அனைத்துலக ஆசிய பசிபிக் அழகி’ என்ற பிரதான பட்டத்தையும் ‘திருமதி பிரபல அழகி’ என்ற பட்டத்தையும் பெற்றார் இஷா பர்வீன்.

இவ்வெற்றியால் அடுத்த ஆண்டு அனைத்துலக மேடையில் மூன்று அழகுராணிகளும் சிங்கப்பூரை வெவ்வேறு மேடைகளில் பிரதிநிதிக்கவுள்ளனர்.

தொடக்கமே வெற்றிப் பயணம்

பிரியோனா, ஜெயந்தி இருவரும் அழகுராணிப் போட்டியில் பங்குபெற்றது இதுவே முதன்முறை. இஷா, ‘அனைத்துலக இந்தியா திருமதி சிங்கப்பூர் 2017/2018’ என்ற பட்டத்தை வென்றார்.

“முழுப் பயணமும் மிகக் கடினமாக இருந்தது. இறுதிச் சுற்று உள்பட பலமுறை குதிஉயர் காலணிகளை அணிந்து மேடையில் தடுக்கி விழுந்துள்ளேன். எனினும், நம்பிக்கையை இழந்ததாகக் காண்பிக்காமல் உடனடியாக எழுந்து நடந்தேன். அழுதும் இருக்கிறேன். ஆனால், மற்ற போட்டியாளர்கள் எனக்கு ஊக்குவித்தனர்,” என்றார் பிரியோனா.

திறன் சுற்றில் பிரியோனா ஓவியம் தீட்டிக்கொண்டே பாடியபோது அவரின் ஆதரவாளர்களுடன் பிறரும் கைதட்டியது அவருக்குப் பெரும் உற்சாகமளித்தது.

‘மாற்றத்தை ஏற்படுத்துவோம்’

“மெலிந்து, உயரமாக இருப்பவர்தான் அழகுராணியாக முடியும் என்ற கருத்தை நாம் முதலில் ஒழிக்கவேண்டும். 40களிலும் தாயாராக, மனைவியாக, சகோதரியாக உள்ள ஒரு பெண் தன்னம்பிக்கையினால் அழகுராணி ஆகலாம்,” என்றார் ஜெயந்தி.

பெண்கள் முன்வந்து அழகுராணிப் போட்டிகளில் பங்குபெற ஊக்குவிக்கவுள்ளார் ஜெயந்தி.

“சமூக ஊடகங்கள்வழி அச்சுறுத்தல்களுக்கு ஆளாகும் இளம்பெண்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புகிறேன்,” என்றார் ஜெயந்தி.

நீடித்த நிலைத்தன்மைக்குக் குரல்கொடுப்பவர்

“பலரும் உடைகளை ஓரிரு முறை அணிந்ததுமே வீசிவிடுகின்றனர். இது சுற்றுப்புறத்திற்குக் கேடு விளைவிக்கிறது,” என்றார் இஷா.

அதனால் ஆடைகளைப் புத்தாக்க முறைகளில் மறுபயனீடு செய்வது எப்படி என்பதைத் தன் இரு பிள்ளைகளுடன் தொடங்கி, சமூகத்தினருக்குக் கற்பிக்கிறார் இஷா. நீடித்த நிலைத்தன்மைமிக்க உடைகளைத் தயாரித்தும் வருகிறார்.

இஷாவின் வெற்றிப் பயணத்தில் அவரின் தந்தை எவ்வாறு பங்காற்றினார் என்பது குறித்து தந்தையர் தினத்தன்று தமிழ் முரசில் வெளியாகும்.

குறிப்புச் சொற்கள்