கடல்வாழ் உயிரினங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கண்காட்சி

கடல்வாழ் உயிரினங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கண்காட்சி

2 mins read
919bbc12-bb69-4cbf-8136-21b2743fa0ca
கண்காட்சி மே 20 முதல் ஜூலை 19ஆம் தேதி வரை நடைபெறும். - படம்: த.கவி
Google News Preferred Icon

ரிசார்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசாவில் உள்ள கடல்வாழ் உயிரினக் காட்சியகத்தில் (சீ அக்வேரியம்) ஐந்தாவது ஆண்டாக ‘பெருங்கடல் விழா’ எனும் கண்காட்சி நடைபெறுகிறது. ‘எதிர்காலத்தை சரிசெய்வது’ என்ற கருப்பொருளில் மே 20 முதல் ஜூலை 19 வரை இரண்டு மாதங்களுக்கு இக்கண்காட்சி நடைபெறும்.

புகைப்படம், காணொளி, விளையாட்டு என்ற அம்சங்களில் இந்நிகழ்ச்சியில் மூன்று கண்காட்சிகள் இடம்பெறுகின்றன.    

கல்வி, ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்புக் குழுவை வழிநடத்தும் நிக் டெர்பிஷையர், “நாங்கள் கடல் கல்வி, ஆராய்ச்சி மற்றும் மீன்வளத்தை பாதுகாப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துகிறோம். 

கடல் உயிரினங்கள் மீது அக்கறைகொள்ள கடல் பாதுகாப்புக்குப் பங்களிக்க மக்களை ஊக்குவிப்பது எங்கள் இலக்குகளில் அடங்கும்,” என்றார் அவர்.

புகைப்படக் கலைஞர் டோஹ் சிங் ஜியே 
புகைப்படக் கலைஞர் டோஹ் சிங் ஜியே  - படம்: த.கவி

உலகளாவிய விருதுபெற்ற புகைப்படக் கலைஞர் டோஹ் சிங் ஜியே, சிங்கப்பூரின் நீர்வாழ் உயிரினங்களைக் காட்சிப்படுத்தும் புகைப்படக் காட்சியகத்தை அமைத்துள்ளார். 

2023ல் ‘ஆண்டின் சிறந்த இயற்கைப் புகைப்படக் கலைஞர்’ என்ற பிரிவில் அவர் முதலிடம் வகித்தார். 

இந்தக் கண்காட்சியில் ஐந்து புகைப்படங்களைக் காட்சிப்படுத்திய அவர், “கடலுக்குள் சென்றபோது, அங்கு அவ்வளவாக வெளிச்சம் இல்லை. மிகச் சிறிதாக இருக்கும் அரியவகை உயிரினங்களைச் சரியான நேரத்தில் படம்பிடிக்க வேண்டியிருந்தது.

“இப்புகைப்படக் கண்காட்சியின் மூலம் உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாராட்டவும் கடல் உயிரினங்களைப் பாதுகாக்கவும் ஊக்குவிக்க முடியும் என நம்புகிறேன்,” என்றார் அவர். 

கண்காட்சியில் கடல்வாழ் உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
கண்காட்சியில் கடல்வாழ் உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. - படம்: த.கவி

சக சிங்கப்பூரர்களின் கனவுகளையும் கடலைப் பற்றிய நினைவுகளையும் கண்டறிய ஒரு தனித்துவமான காணொளியும் கண்காட்சியில் இடம்பெறுகிறது.

புதுமையான ஆர்கேட் விளையாட்டு.
புதுமையான ஆர்கேட் விளையாட்டு. - படம்: த.கவி

புதுவகையான ஆர்கேட் விளையாட்டும் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களில் இருந்து இவ்விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இதில், தொழில்துறை நிபுணர்களிடமிருந்து தனித்துவமான உயிரினங்களைப் பற்றிய சுவாரசிய தகவல்களைப் பெறலாம். 

கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த விளையாட்டின் நோக்கம்.

மே 18, மே 25, ஜூன் 21ஆம் தேதிகளில் பார்வையாளர்கள் ஆசிய-பசிபிக் பகுதியைச் சேர்ந்த தொழில்துறை நிபுணர்களிடமிருந்து கடல்வாழிடத்தைப் பற்றி அறியலாம்.

கண்காட்சிக்கான நுழைவுச்சீட்டுகளை வாங்க https://www.rwsentosa.com/en/promotions/attractions/sea-aquarium-ocean-fest எனும் இணையத்தளத்தை நாடலாம். 

குறிப்புச் சொற்கள்