டெலிவரூ ஓட்டுநர்களின் திறனை மேம்படுத்தும் பயிலகம்

டெலிவரூ ஓட்டுநர்களின் திறனை மேம்படுத்தும் பயிலகம்

2 mins read
b8e33f80-575b-4e8a-83a7-3da36dcfc0b3
டெலிவரூ ஓட்டுநர்களுக்கும் குடும்பத்தாருக்கும் 1,500க்கும் மேற்பட்ட இலவசப் பாடங்களை வழங்கும் வகையில் விரிவடைந்துள்ளது டெலிவரூ ஓட்டுநர் கற்றல் தளம். - படம்: டெலிவரூ சிங்கப்பூர்
Google News Preferred Icon

பகுதிநேர டெலிவரூ ஓட்டுநரும் வசதிகள் ஒருங்கிணைப்பாளருமான சண்முகம் பிள்ளை, 41, தன் அன்றாட வேலைக்கு உதவும் திறன்களைக் கற்றுவருகிறார்.

தன் அலுவலகத்தின் இணையவழிக் கற்றல் தளத்தில் மட்டுமன்றி, அவர் டெலிவரூ ஓட்டுநர் கற்றல் தளம் மூலமும் ‘எக்செல்’ , வாடிக்கையாளர் சேவைத் தொடர்பான பாடங்களைக் கற்றுவருகிறார்.

அவரைப்போல திறன்களை மேம்படுத்திவருகிறார் ஏழாண்டுகளாக டெலிவரூவில் முழுநேர ஓட்டுநராகப் பணியாற்றிவரும் லக்விந்தர் சிங், 31.

டெலிவரூ ஓட்டுநராக அவருக்குத் தொடர்ச்சியான வருமானம் வந்தாலும், தனக்குப் பிடித்தவற்றைக் கற்று, எதிர்காலத்தில் அதைத் தன் தொழிலாக மாற்றிக்கொள்ள விரும்பினார் லக்விந்தர்.

தற்போது நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தரவு பகுப்பாய்வில் நிபுணத்துவப் பட்டயம் படித்துவரும் அவர், டெலிவரூ ஓட்டுநர் கற்றல் தளத்தில் தரவு ஆய்வு தொடர்பான பாடங்களையும் பயின்றுவருகிறார்.

இவர்களைப் போன்ற ஓட்டுநர்களுக்குத் துணைபுரிந்துவரும் டெலிவரூ ஓட்டுநர் கற்றல் தளம், சமீபத்தில் தன் ஓட்டுநர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் 1,500க்கும் மேற்பட்ட இலவசப் பாடங்களை வழங்கும் வகையில் விரிவடைந்தது. இதை ஏப்ரல் தொடக்கத்தில் டெலிவரூ சிங்கப்பூர் அறிவித்தது.

இதற்காக ‘லிங்க்ஸ் எடுகேட்’டுடன் புதிய அனைத்துலக பங்காளித்துவத்தை மேற்கொண்டுள்ள டெலிவரூ, தன் கற்றல் தளத்தில் ‘தி ஓபன் யுனிவர்சிட்டி’, ‘ஓபன்கிளாஸ்ரூம்ஸ்’, ‘செக் ஸ்கில்ஸ்’ போன்ற பங்காளிகள் வழங்கும் பாடங்களை உள்ளடக்கும். இவற்றில் வேலை, கல்வி தொடர்பான நிபுணத்துவப் பாடங்களும் அடங்கும்.

2019ல் சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட டெலிவரூ ஓட்டுநர் கற்றல் தளம் மூலம் சிங்கப்பூர் ஓட்டுநர்கள் 600க்கும் மேற்பட்ட பாடங்களைப் பயின்றுள்ளனர். குறிப்பாக, மின்னிலக்கத் திறன்கள் அதிக நாட்டம் கண்டுள்ளன.

என்னைப் போல முழுநேரமாகப் பணியாற்றுவோர் நேரடி வகுப்புகளுக்குச் செல்வது கடினம். அதனால் டெலிவரூவின் இணையவழிக் கற்றல் உதவுகிறது.
பகுதிநேர டெலிவரூ ஓட்டுநர் சண்முகம் பிள்ளை, 41.

“டெலிவரூ வேலையை அடிப்படையாகக் கொண்டு, மற்ற வேலை வாய்ப்புகளை பல ஓட்டுநர்கள் நாடுகின்றனர். இம்முயற்சியில் திறன் மேம்பாடு அவர்களுக்கு உதவும். மேன்மேலும், நிபுணத்துவ தரவு ஆய்வுப் பாடங்களை டெலிவரூவும் அரசாங்கமும் வழங்கினால் பெரிதும் உதவும்,” என்கிறார் லக்விந்தர்.

அரசாங்கத்தின் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திறன் மேம்பாட்டுத் திட்டம்

மேலும், அரசாங்கம் இவ்வாண்டு அறிவித்த ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திறன் மேம்பாட்டுத் திட்டம்வழி மே 1 முதல், சிறந்த வேலைவாய்ப்புகள் வழங்கும் குறிப்பிட்ட பாடங்களுக்காக ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ பயிற்சி உதவி நிதி (பணியிடைக்கால) $4,000 டாப்-அப் வழங்கப்படும். முழுப் பாடப் பட்டியலை ஸ்கில்ஸ்ஃபியூச்சர் இணையத்தளத்தில் காணலாம்.

குறிப்புச் சொற்கள்