கலைவிழாவுடன் 75 ஆண்டுகால நிறைவைக் குறிக்கும் சிஃபாஸ்

கலைவிழாவுடன் 75 ஆண்டுகால நிறைவைக் குறிக்கும் சிஃபாஸ்

1 mins read
5103e3af-21c0-4eb0-94ee-7a675eef130e
(இடமிருந்து) சிஃபாஸ் கலைவிழா 2024ன் இணைத் தலைவர் நாராயணன் பாலசுப்ரமணியன், சிஃபாஸ் செயலாளர் பி.எஸ்.சோமசேகரன், சிஃபாஸ் தலைவர் கே.வி.ராவ், நிர்வாக இயக்குநர் மேனகா கோபாலன். - படம்: மேனகா கோபாலன்
Google News Preferred Icon

சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம் (சிஃபாஸ்) நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் தனது கலைவிழாவின் தொடக்கத்தை அது அறிவித்திருக்கிறது.

ஏப்ரல் 12 முதல் மே 1 வரை நடைபெறவுள்ள அந்தக் கலைவிழாவில், பள்ளியின் 75 ஆண்டுகால நிறைவைக் குறிக்கும் விதமாக 75 செவ்விசை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று வியாழக்கிழமை (ஏப்ரல் 11) நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் சிஃபாஸ் தெரிவித்தது.

பிரபல கர்நாடக சங்கீத கலைஞர்கள் ரஞ்சனி காயத்ரி சகோதரிகளின் ‘ராகா சங்கமம்’, சென்னையின் பழம்பெரும் கலைப்பள்ளியின் ‘ருக்மிணி கல்யாணம்’, பிரபல கர்நாடகப் பாடகர் அபிஷேக் ரகுராம் மற்றும் ஜெயதீர்த் மெவுண்டியின் ‘செவ்விசை சங்கமம்’ உள்ளிட்டவை எஸ்பிளனேட் அரங்கில் நடைபெறும் கட்டணத்துடன் கூடிய நிகழ்ச்சிகள்.

கலைப்பள்ளியினரால் படைக்கப்படும் எஞ்சிய நிகழ்ச்சிகளுக்கான அனுமதி இலவசம். பரதநாட்டியம், கதக், கர்நாடக இந்துஸ்தானி செவ்விசை நிகழ்ச்சிகள் விழாவின் அங்கங்களாக ஆண்டு முழுவதும் இடம்பெறும்.

‘விராசத’ கலைகளின் காலம் கடந்த மரபைக் கொண்டாடுதல் என்ற கருப்பொருளைக் கொண்டுள்ள இவ்விழா, கடந்தகால பெருமையை மட்டும் பறைசாற்றாமல் இந்திய நுண்கலைகளின் எதிர்காலத்தையும் அரவணைப்பதாக இருக்கும் என சிஃபாஸ் தலைவர் கே.வி.ராவ் கூறினார்.

உள்ளூரிலும் உலகளவிலும் கலைஞர்களின் கூட்டுறவுடன் நடத்தப்படும் இந்த 20வது விழா, பிரதிநிதித்துவம் அதிகம் பெறாதோருக்குச் சென்றுசேர கலைப்பள்ளி அதிக முனைப்பு காட்டுவதாக அதன் நிர்வாக இயக்குநர் மேனகா கோபாலன் சொன்னார்.

“இதன்மூலம் மனநலமும் கலையறிவும் மேம்படுகின்றன,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்