பாவையர் கூடிப் பாடி மகிழ்ந்த விழா

பாவையர் கூடிப் பாடி மகிழ்ந்த விழா

2 mins read
de5057eb-151f-4629-a656-ee9bdfa110d8
அருள்மிகு வீரமாகாளியம்மன் கோயிலில் திருவெம்பாவை பாடி உரையளித்த பாவையர். - படம்: திருமுறை மாநாடு ஏற்பாட்டுக் குழு
Google News Preferred Icon

தங்களுக்கு நல்ல கணவன் வாய்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இளம்பெண்கள் மார்கழி மாதத்தில் நோன்பிருப்பது வழக்கம்.

அவ்வழக்கத்தைக் கடைப்பிடிக்கும் விதத்தில், திருவெம்பாவையை ஒட்டிய விழாக்கள் சிங்கப்பூரில் 2003ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றன.

ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 7) காலை 9 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை ஈசூன் புனிதமரம் பாலசுப்பிரமணியர் ஆலய மண்டபத்தில் இவ்விழா சிறப்பாக நடந்தேறியது.

திருவெம்பாவை புகழ்பாடும் ‘பாவை விழா’வின் தொடக்கமாகக் கூட்டுப் பிரார்த்தனையாகத் திருப்பள்ளி எழுச்சி பாராயணம் செய்யப்பட்டது. சிங்கப்பூர் ஆலய ஓதுவார்கள் ஐந்து பேரும் இணைந்து மாணிக்கவாசகரின் திருவெம்பாவையைப் பக்க வாத்தியங்களோடு விண்ணப்பம் செய்தார்கள்.

பாவை விழாவைத் திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினர் அருள்மிகு புனிதமரம் பாலசுப்பிரமணியர் ஆலயத்துடன் இணைந்து நடத்தினர்.

சிங்கப்பூரில் இளம்பேச்சாளர்களை அடையாளம் கண்டு, அவர்களது பேச்சாற்றலை வளர்க்கும் வண்ணம், வாய்ப்புகள் கொடுத்துப் பேச வைப்பது பாவை விழாவின் நோக்கங்களில் ஒன்று.

நிகழ்ச்சியின்போது இளையர்கள் ரவீந்திரன் மதிமயூரதன், மகாலட்சுமி தினகரன், ஸ்ரீவித்தியா ரவிசங்கர் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள். ‘பொற்கிழிக் கவிஞர்’ சொ சொ மீனாட்சி சுந்தரமும் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

திருமுறைப் பயிற்சிக் கழகத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

அவ்வகையில், திருமுறைப் பயிற்சிக் கழகத்தின் தலைமை தேர்வு அதிகாரியாகப் பணியாற்றும் டாக்டர் ஆ ரா சிவகுமாரன், தேர்வின் நோக்கம், தேர்வு நடத்தப்படும் விதம், தேர்வின் பயன்கள் குறித்துப் பேசினார். சான்றிதழ்களைத் திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டாக்டர் இராம கருணாநிதி வழங்கினார்.

சிங்கப்பூருக்குத் தொடர்ச்சியாக 30 ஆண்டுகள் வந்து சைவ சமய வளர்ச்சிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் பங்காற்றியுள்ள பொற்கிழிக் கவிஞருக்குத் திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் அ.கி.வரதராசன் வெண்பாவால் ஆன பாராட்டுப் பத்திரம் வழங்கினார்.

இப்பாவை விழாவிற்கு முன்னர், பாவை வழிபாடு என்னும் பெயரில் கடந்த மாதம் 31ஆம் தேதியன்று அருள்மிகு வீராமாகாளியம்மன் கோயிலில் விடியற்காலை 6 மணிக்கு 20 இளம்பெண்கள் திருவெம்பாவையினைப் பாடி விளக்கவுரை அளித்தனர்.

குறிப்புச் சொற்கள்