தொழில் முன்னேற்றம் தரும் மென்திறன்கள்

தொழில் முன்னேற்றம் தரும் மென்திறன்கள்

2 mins read
f9dde835-ca6a-4532-ada5-cc99abf60dca
தனிப்பட்ட வளர்ச்சியை சந்தை தேவைகளுடன் பொருத்துவதைத் தாண்டி, பணியிடத்தில் மேன்மை பெற மென்திறன்கள் பேரளவில் உதவுகின்றன. - படம்: இணையம்
Google News Preferred Icon

சிங்கப்பூரின் பரபரப்பான பணிச்சூழலில் வேலை வாய்ப்புகளைப் பெறவும் பணியைத் தக்கவைக்கவும் பணியிட வளர்ச்சிக்கும் தொழில்நுட்பத் திறன்களுடன், ‘சாஃப்ட் ஸ்கில்ஸ்’ எனப்படும் மென்திறன்களையும் வளர்த்துக்கொள்வது அவசியமாக கருதப்படுகிறது.

தொடர்புத் திறன்

சிங்கப்பூரின் பணிச்சூழலில், பயனுள்ள தகவல் தொடர்பு என்பது தொழில் வளர்ச்சியின் இன்றியமையாத திறன். கருத்துகளைத் தெளிவாக வெளிப்படுத்தவும் பங்குதாரர்களுடனான ஆலோசனை அமர்வுகளை நகர்த்தவும் தொடர்புத் திறன் அவசியமாக இருக்கிறது.

மென்திறன்கள் வளர்ச்சிக்குப் பங்காற்றும் என்பதை விட, வளர்ச்சி அதனைப் பொறுத்தே அமையும் என்கிறார் மென்திறன் பயிற்சியாளரும் ‘அல்விகோர்’ நிறுவனத்தின் நிறுவனர் ரமேஷ் முத்துசாமி.

வெறும் 15 விழுக்காடு பணியிட வளர்ச்சி மட்டுமே தொழில்திறன் சார்ந்ததாகவும் மீதமுள்ள 85 விழுக்காடு வளர்ச்சி மென்திறன் எனப்படும் வாழ்க்கைத் திறன் சார்ந்து அமைவதாகச் சொல்கிறார் அவர்.

ஒரு பணிக்குத் தேவையான அடிப்படைத் திறன் தவிர ஒவ்வொரு பணிக்கும் ஏற்ற மென்திறன்களை வளர்க்கும் நோக்கில் ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ உள்ளிட்ட பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

நிறுவனங்களும் கல்லூரிகளும் அவற்றை வலுப்படுத்த பயிற்சி வழங்குகின்றன என்கிறார் அவர்.

குழுவாகப் பணியாற்றுவது

சிங்கப்பூரின் கூட்டுப் பணிக் கலாசாரம் ஒரு குழுவிற்குள் இணக்கமாக வேலை செய்யும் திறனை அதிகம் எதிர்பார்ப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில், குழு செயல்பாட்டில் ஆக்கபூர்வமாகப் பங்களிக்கும் ஊழியர்களின் சம்பளம் பிறருடன் ஒப்பிடுகையில் அதிகம் உயர்வதாகத் தெரிய வருகிறது.

தழுவுதிறன்

தொழில்நுட்ப மாற்றங்கள், நிறுவன அமைப்புகளின் அசுர வளர்ச்சி, அங்கு பணியாற்றும் ஊழியர்களும் மாற்றத்திற்கு தங்களைத் தகவமைத்துக்கொள்ள (adaptability) வேண்டும் என்கிற எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.

புதிய சவால்கள், அமைப்புகளை ஏற்பது, தேவைக்கேற்ப பணியின் இயல்பை சற்றே மாறுபடுத்த ஒப்புக்கொள்வது ஆகிய திறன்கள் விலைமதிப்பற்றவையாக கருதப்படுகின்றன. அவற்றை வளர்த்துக்கொள்பவர்கள் அதிக பணியிட வளர்ச்சியும் பெறுகின்றனர்.

தீர்வளிக்கும் திறன்

தீர்வு சார்ந்த பணியிடங்களில் பிரச்சினைகளைக் கண்டறிந்து, சிந்தித்து, பயனுள்ள தீர்வுகளை உருவாக்கும் திறன் மதிப்புமிக்க திறனாகக் கருதப்படுகிறது.

பொறியியல் துறை தொடங்கி நிதி வரை, சிக்கலான பிரச்சினைகளைத் திறமையாக தீர்க்கும் வல்லுநர்கள் பதவி உயர்வு பெறுகின்றனர்.

தலைமைத்துவப் பண்பு

நிறுவனத்தின் பொது இலக்குகளை அடைய மற்றவர்களை ஊக்குவிப்பதும் உடன் இட்டுச் செல்வதும் தலைமைத்துவப் பண்புகளாகக் கருதப்படுகின்றன.

பணிக்கு பொறுப்பேற்கவும் உடன் பணியாற்றுபவர்களை வழிநடத்தவும் முன்வருபவர்களுக்கு பணியிடத்தில் அதிக மதிப்பிருப்பதாகக் கருதப்படுகிறது. ஊழியர்கள் தொழிலில் வளரவும் சம்பள உயர்வு பெறவும் இந்த தலைமைத்துவப் பண்பு பெரும் பங்காற்றுகிறது.

உணர்வுசார் நுண்ணறிவு

சிங்கப்பூரின் உயர் அழுத்த சூழலில், ‘இமோஷனல் இன்டெலிஜென்ஸ்’ அதிகம் விரும்பப்படும் திறனாக இருக்கிறது. உணர்வுகளை திறம்பட நிர்வகிக்கவும் பிறரின் பிரச்சினைகளை அணுகவும் திறன்பெற்ற ஊழியர்கள் நிறுவனங்களுக்குச் சொத்தாக கருதப்படுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
ஊழியர்அறிவுவளர்ச்சி