சிங்கப்பூர் செட்டியார்கள் கோயில் குழுமம், ஒவ்வோர் ஆண்டும் கல்வியில் சிறப்புத் தேர்ச்சி காணும் அனைத்து இன, சமயங்களைச் சேர்ந்த மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குக் கல்வி உதவி நிதி வழங்கி வருகிறது.
அவ்வகையில் அண்மையில் 285 மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி $100,000 நிதியை இக்குழுமத்தினர் வழங்கினர்.
கல்வியில் சிறப்பாக விளங்கும் மாணவர்களையும், நிதி ஆதரவு தேவைப்படும் மாணவர்களையும் அங்கீகரிக்கும் வகையில் தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் வரை அந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை (ஜன. 7) மாலை, கிரேத்தா ஆயர் மக்கள் அரங்கத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியில், மூத்த அமைச்சரும், தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அமைச்சர், “நம்மைச் சுற்றி உலகில் பல மோசமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இனம், சமயம், அடையாளம் எனும் பெயரில் பல துரதிர்ஷ்ட நிகழ்வுகள் நிகழ்கின்றன.
“ஆனால், சிங்கப்பூரில் பல இனங்களையும், சமயங்களையும் சேர்ந்த மக்கள் இருந்தாலும் ஒருவருக்கொருவர் அரவணைத்து, தேவைப்படும் நேரங்களில் தோள் கொடுத்துக் கொள்கிறார்கள். அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இந்த கல்வி உதவி நிதி வழங்கும் விழா,” என்று பாராட்டினார்.
ஸீஷான் தொடக்கப்பள்ளியில் தொடக்கநிலை நான்காம் வகுப்பில் பயிலும் மாணவி ஆண்ட்ரியா எலிசபெத் ராஜு, தனக்குக் கிடைத்துள்ள தொகையை வைத்துப் புத்தகம் வாங்கவிருப்பதாகக் கூறினார்.
மேலும், “எனக்கு இந்த உதவி நிதி கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி. மேன்மேலும் நான் கல்வியில் சிறப்பாகச் செய்ய வேண்டுமென்ற ஊக்கம் கிடைத்துள்ளது,” என்று அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
உயர்நிலைப் பள்ளிப் பிரிவில் உதவி நிதி பெற்றுகொண்ட மாணவி தர்ஷிகா வியன் கணேஷ், 12, ஜூரோங் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலை ஒன்றாம் வகுப்பில் பயில்கிறார்.
இந்த உதவித்தொகையைப் பள்ளிக்குத் தேவையான பொருள்களை வாங்கவும், வீட்டுச் செலவுகளுக்குப் பயன்படுத்தவும் தயாராக இருக்கும் அவர், “இதற்கு முன்பும் பலமுறை கல்வி உதவி நிதிகளைப் பெற்றுள்ளேன்.
“ஆனால், இப்போது கிடைத்துள்ள தொகையின் மதிப்பு அதிகம். இதன் மூலம் வீட்டின் நிதிச் சுமையை என்னால் குறைக்க முடியும்,” என்று கூறினார்.
தர்ஷிகாவின் தாயார் லதா சிங்காரவேலு, 42, “நான் தற்போது வேலைக்குச் செல்வதில்லை. அதனால் என் மகள் பெற்றிருக்கும் உதவித்தொகையை அவருடைய கல்விச் செலவுகளுக்கு ஒதுக்கி வைக்க முடியும்.
தமிழ்ப் பாடத்தில் சிறப்பாகத் தேர்ச்சி கண்டு என் மகள் கல்வி உதவி நிதி பெற்றது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது,” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

