'கே-பாப்' பாடல்கள், தரத்தில் அமெரிக்காவின் 'ஹாலிவுட்' திரைப்படங்களுக்கு நிகரானவையாக உருவெடுத்துள்ள தென்கொரியத் திரைப்படங்கள்... பொதுவாக தென்கொரியத் தலைநகர் சோலைப் பற்றிப் பேசும்போது இவைதான் நினைவுக்கு வரும்.
ஆனால் கேளிக்கைக்குப் பிரபலமான சோல் இப்போது ஓவியக் கலையிலும் முத்திரை பதித்து வருகிறது. குறிப்பாக நவீன ஓவியப் படைப்புகள் இந்நகரில் பிரபலமாகி வருகின்றன.
சோலில் உள்ள பெரோட்டின், பேஸ் ஆகிய பிரபல காட்சியகங்கள் விரிவுபடுத்தப்படும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது. ஓவிய நகராக சோல் வளர்ந்து வருவதற்கு இது சான்றாகக் கருதப்படுகிறது.
பிரெஞ்சு காட்சியகமான பெரோட்டினின் சோல் கிளையின் விரிவுபடுத்தப்படும் பகுதியுடைய பரப்பளவு 250 சதுர மீட்டருக்கும் அதிகம். உலகளவில் பிரபலமான சோலின் கங்னம் பகுதியில் அது அமைகிறது.
வரும் செப்டம்பர் மாதம் அப்பகுதி திறக்கப்படும். பெரோட்டின் காட்சியகத்தின் சோல் கிளை 2016ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
அமெரிக்காவின் பேஸ் காட்சியகத்தின் கிளை 2017ஆம் ஆண்டு இந்நகரில் திறக்கப்பட்டது. இப்போது 789 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட அதுவும் விரிவுபடுத்தப்படுகிறது.
புதுப்பிக்கப்பட்ட அந்தக் காட்சியகத்தில் சிற்றுண்டி அறை, புத்தகக் கடை ஆகியவை அமைந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேஸ் காட்சியகத்தின் புத்தகங்களை ஓவியப் பிரியர்கள் அந்தக் கடையில் வாங்கிக்கொள்ளலாம்.
பொதுவாகவே ஓவியப் படைப்புகளுக்கு சோலில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. மேற்கத்திய நாடுகளின் பல காட்சியகங்கள் கடந்த சில ஆண்டுகளாக இந்நகரில் திறக்கப்பட்டன.
சென்ற ஆண்டு நடைபெற்ற 'கேஐஏஎஃப்' எனும் தென்கொரிய ஓவிய விழா அமோக வெற்றி கண்டது. 88,000 பேர் அதற்கு வருகை தந்தனர்.
இந்த எண்ணிக்கை, ஐந்தாண்டுகளுக்கு முன்பு பதிவானதைவிட 25,000 அதிகம்.
மேலும், சென்ற ஆண்டின் ஓவிய விழாவில் இடம்பெற்ற விற்பனைகளின் மொத்த மதிப்பு 65 பில்லியன் வொன் (சுமார் 70 மில்லியன் வெள்ளி).
அந்த விழா ஐந்து நாள்களுக்கு நடைபெற்றது.
அதோடு, பல 'கே-பாப்' நட்சத்திரங்கள்கூட ஓவியப் பிரியர்கள் என்று சொல்லப்படுகிறது.
திரையுலகம், இசை ஆகியவற்றில் 'ஹாலிவுட்டுக்கு' போட்டியாக இருக்கும் தென்கொரியா இப்போது ஓவியக் கலையிலும் மேற்கத்திய நாடுகளுக்கு சவால் விடுப்பது போல் தெரிகிறது என்று மலாய் மெயில் நாளிதழில் வெளியான கட்டுரையில் தெரியவந்துள்ளது.

