குழு உரையாடலில் இணையும் புதியவர்களுக்கு உதவ வாட்ஸ்அப்பில் புதிய வசதி

குழு உரையாடலில் இணையும் புதியவர்களுக்கு உதவ வாட்ஸ்அப்பில் புதிய வசதி

1 mins read
3d7087f1-6fc6-4305-8b0b-7e2a8a93538a
பயனர்கள் பலரின் கோரிக்கையை ஏற்று புதிய வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. - படம்: பிக்சாபே

வாட்ஸ்அப் குழு உரையாடலில் (group chat) புதியவர்கள் உறுப்பினர்களாக இணையும்போது, அதற்குமுன் அங்குப் பேசப்பட்டவை குறித்து எதுவும் தெரியாது.

இந்நிலையில், முன்னர் எதனைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர் என்பதை அவர்களும் அறிந்துகொள்ளும் வகையில், குழு உரையாடல் வரலாறு (group chat history) எனும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனால், குழுவில் இணையும் புதியவர்கள் அங்குப் பகிரப்பட்ட அண்மைச் செய்திகளை அறிந்துகொள்ளலாம். இதன்மூலம், அங்கு இடம்பெற்றுவரும் உரையாடல் குறித்து அவர்களும் அறிந்துகொண்டு, பங்கேற்க வழிவகை ஏற்படுகிறது.

பயனர்கள் பலரின் கோரிக்கையை ஏற்று இவ்வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், திரைச்சுடுவை (screenshot) அல்லது குழுவில் பகிரப்பட்ட செய்திகளை எடுத்து, புதியவர்களுக்குத் தனியாக அனுப்ப வேண்டியதிராது.

புதியவர் ஒருவரைக் குழுவில் சேர்க்கும்போது, அக்குழுவின் நிர்வாகி (admin) அவருடன் கடைசி 25 முதல் 100 குறுஞ்செய்திகள் வரை பகிர்ந்துகொள்ளலாம். விருப்பமில்லை எனில், புதியவருடன் அண்மைக் குறுஞ்செய்திகளைப் பகிராமலும் இருக்கலாம்.

புதிய உறுப்பினருடன் அண்மைக் குறுஞ்செய்திகள் பகிரப்பட்டால் அதுபற்றி அக்குழுவிலுள்ள எல்லா உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படும். நேரமும் அனுப்பியவரைப் பற்றிய விவரமும் அதில் இடம்பெற்றிருக்கும். வழக்கமான குறுஞ்செய்திகளிலிருந்து அது தனித்து, தெளிவாகத் தெரியும்.

குறிப்புச் சொற்கள்