சினைப்பை நீர்க்கட்டியால் பத்தில் ஒருவர் பாதிப்பு

சினைப்பை நீர்க்கட்டியால் பத்தில் ஒருவர் பாதிப்பு

3 mins read
6f8a72bf-dc95-4e19-ae27-79fb53aa6cba
சினைப்பை நீர்க்கட்டி தோன்றும் பெண்களில் பத்தில் ஏழு பேர், அத்தகைய பாதிப்பு தங்களுக்கு இருப்பதையே அறிந்திருப்பதில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. - படம்: அப்போலோ
Google News Preferred Icon

தற்போது பெண்கள் பலரும் சினைப்பை நீர்க்கட்டியால் (Polycystic Ovary Syndrome) பாதிக்கப்படுகின்றனர்.

பெண்களை மட்டுமே பாதிக்கும் இந்நோய், ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படுகிறது. அந்த பாதிப்புள்ள பெண்களின் உடலில் இன்சுலின், ஆண்ட்ரோஜன் எனும் இரண்டு ஹார்மோன்கள் அதிக அளவில் சுரக்கும்.  

பொதுவாக, ஆண்ட்ரோஜன் ஆண்கள் உடலிலேயே அதிக அளவில் காணப்படும். 

உலகளவில் பெண்களில் 10 - 13 விழுக்காட்டினர் சினைப்பை நீர்க்கட்டியால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளது.

ஆயினும், சினைப்பை நீர்க்கட்டி தோன்றும் பெண்களில் பத்தில் ஏழு பேர், அத்தகைய பாதிப்பு தங்களுக்கு இருக்கிறது என்பதையே அறிந்திருக்கவில்லை என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர்ப் பெண்களில் ஏறக்குறைய 10 விழுக்காட்டினர் சினைப்பை நீர்க்கட்டியால் அவதியுறுகின்றனர்.

காரணம்

சினைப்பை நீர்க்கட்டி தோன்றுவதற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை. ஆனால், குடும்பத்தில் ஒருவர்க்கு அப்பிரச்சினை இருந்தால், மற்றவர்களும் அதனால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். 

ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த சுரக்கப்படும் ஒரு ஹார்மோன் இன்சுலின். 

சினைப்பை நீர்க்கட்டி இருப்பவரது உடல் இன்சுலினை எதிர்க்கும். அதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுதலாக இருக்கும். இதன் விளைவாக, உடல் எடை கூடுவதோடு, சினைப்பைகள் ‘டெஸ்டோஸ்டெரோன்’ (testosterone) ஹார்மோனை அதிகமாகச் சுரக்கும். 

சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்சினை உள்ள பெண்களுக்குப் பொதுவான அளவைவிட சற்றே கூடுதலாக டெஸ்டோஸ்டெரோன் இருக்கும். அது, கருமுட்டைகளின் வளர்ச்சியைத் தடுத்து, சீரான கருமுட்டை வெளிப்பாட்டைத் தடுக்கும். 

அறிகுறிகள்

சினைப்பை நீர்க்கட்டியைப் பொறுத்தமட்டில், ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையான அறிகுறிகளை எதிர்நோக்குவர். வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் அந்த அறிகுறிகளும் மாறலாம். 

அறிகுறிகளின் பட்டியல்:

- முறையற்ற மாதவிடாய் அல்லது மாதவிடாய் இல்லாமை (irregular menstruation)

- முகத்திலும் உடலிலும் அதிக முடி வளர்தல்

- முகத்தில் பருக்கள்

- முடி நரைத்தல், முடி கொட்டுதல்

- மன உளைச்சல்

- உடல் பருமன், உடல் எடை அதிகரித்தல்

குறிப்பாக, ரத்தத்தில் அதிக அளவில் டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோன் இருத்தல், முறையற்ற மாதவிடாய், மீயொலிச் சோதனையில் (அல்ட்ராசவுண்ட்) கண்டறியப்படும் பல கட்டிகள் உள்ள சினைப்பைகள் ஆகிய மூன்றில் இரண்டு இருந்தாலே, ஒருவர்க்குச் சினைப்பை நீர்க்கட்டி உள்ளதாக முடிவுசெய்யப்படும். 

பாதிப்புகள்

- Pixabay

சினைப்பை நீர்க்கட்டியால் கீழ்க்காணும் பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

- கருத்தரித்துள்ளபோது நீரிழிவு அல்லது உயர் இரத்த அழுத்தம் இருத்தல்

- உடல் எடை அதிகரித்தல், குறிப்பாக, இடுப்பு பகுதியைச் சுற்றி

- இதய நோய்

- தூக்கத்தில் மூச்சுத் திணறல்

- கருப்பைப் புற்றுநோய்

சினைப்பை நீர்க்கட்டி காரணமாக உடற்பருமன், தேவையற்ற முடி வளர்ச்சி, கருவுறாமை போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம்.

அதன் விளைவாக, மனப்பதற்றம், மன அழுத்தம், உணவருந்துவதில் பிரச்சினை போன்றவையும் தலைகாட்டலாம். 

தீர்வு

சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு கண்டறியப்படவில்லை. 

ஆனால், மருத்துவரை ஆலோசித்து சிகிச்சைகளை மேற்கொள்வது ஒருவரின் உடல்நலத்தை மேம்படுத்தி, கருவறுதலுக்கும் கைகொடுக்கும். கருப்பைப் புற்றுநோயால் அவதியுறும் வாய்ப்புகளைக் குறைத்து, இதயம் சார்ந்த நீண்டநாள் பாதிப்புகளையும் தடுக்கலாம். 

நலமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவது சினைப்பை நீர்க்கட்டி அறிகுறிகளின் தீவிரத்தன்மையைக் குறைக்க நல்லதொரு வழி. சீரான உடற்பயிற்சியும், சமச்சீர் உணவும், தீய பழக்கங்களைக் கைவிடுவதும் உடலுக்கு நன்மை பயக்கும். 

ஆகவே, சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்சினைக்கான அறிகுறிகள் தெரிந்தால் காலந்தாழ்த்தாமல் முன்கூட்டியே மருத்துவரைச் சந்தித்து ஆலோசிப்பது நன்மை தரும். 

குறிப்புச் சொற்கள்
உடல்நலம்பெண்கள்நோய்மருத்துவம்