கண்ணான வரிகளுடன் கவியரசுக்கு அரியணை

கவியரசு கண்ணதாசனின் கவித்துவத்தின் மகத்துவத்தைப் போற்றிய நிகழ்ச்சி

கண்ணான வரிகளுடன் கவியரசுக்கு அரியணை

4 mins read
f4d10d01-8684-40ad-9bde-10daa74cd281
பெரியவர்களுக்கான பாட்டுத் திறன் போட்டியில் மூன்றாம் நிலையைப் பிடித்த இளையர் சுந்தரவடிவேலு விஜய். - படம்: தமிழ் பசங்க ஃபோட்டோகிராஃபி
Google News Preferred Icon
Watch on YouTube

நெஞ்சில் ஈரமும் உரமும் விதைக்கும் கவியரசு கண்ணதாசனை அரியணையில் ஏற்றினர் அவரது சிங்கப்பூர் ரசிகர்கள்.

தம் பாடல்வரிகள் தலைமுறைகள் தாண்டி, இளையோர், பெரியோர் குரலில் ஒலிப்பதைக் கவியரசு கேட்டிருந்தால் அந்த நெகிழ்ச்சியில் என்ன வரிகள் எழுதியிருப்பார் எனக் கற்பனை செய்வதிலும் ஒரு தனிமகிழ்ச்சியுள்ளது.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஏற்பாட்டில் 27வது கவியரசு கண்ணதாசன் விழா, நவம்பர் 15ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்றது.

“ஆண்டுக்கு ஆண்டு பாடல் போட்டிகளில் பங்கேற்போரின் எண்ணிக்கை அதிகரித்துவருவதில் மகிழ்கிறோம்,” என்றார் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் சு.முத்துமாணிக்கம்.

‘கண்ணிலே நீர் எதற்கு? காலம் எல்லாம் அழுவதற்கு’ எனக் கண்ணதாசனின் மனதுக்கு நெருக்கமான வரிகளை உதாரணங்காட்டி, கவியரசுக்காக ஆண்டுதோறும் விழா நடத்துவதில் கழகம் பெருமைகொள்வதாக அவர் கூறினார்.

சிறப்பு விருந்தினரான முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், கண்ணதாசனின் அற்புதமான பாடல் வரிகளை மேற்கோள் காட்டி, இவை வெறும் பாடல்கள் மட்டுமல்ல, வாழ்க்கைத் தத்துவங்களை எளிமையாக விளக்கும் கவிதைகள் என்று கூறினார். கண்ணதாசனை ‘என்றும் வாழ்பவர்’ என்று அவர் போற்றினார்.

கவியரசுக்கு, ‘கண்ணதாசனுக்குள் கம்பன்’ எனும் தலைப்பில் கவிதாஞ்சலி வழங்கினார் ஜோகூர் தமிழ் இலக்கிய கழகத் தலைவர் முனைவர் தமிழ்மணி சி.வடிவேலு.
கவியரசுக்கு, ‘கண்ணதாசனுக்குள் கம்பன்’ எனும் தலைப்பில் கவிதாஞ்சலி வழங்கினார் ஜோகூர் தமிழ் இலக்கிய கழகத் தலைவர் முனைவர் தமிழ்மணி சி.வடிவேலு. - படம்: தமிழ் பசங்க ஃபோட்டோகிராஃபி

‘கண்ணதாசனுள் கம்பன்’ எனும் தலைப்பில் கவியரசுக்குக் கவிதாஞ்சலி செலுத்தினார் ஜோகூர் தமிழ் இலக்கியக் கழகத் தலைவர் முனைவர் தமிழ்மணி சி.வடிவேலு.

“கண்ணனுக்கு மட்டும் தான் தாசன் இல்லை என்பதைக் கண்ணதாசன் உணர்த்துகின்ற கானங்கள் பல உள்ளன; மன்னனாகக் கவிவானில் வீற்றிருந்த கம்பனின் மணக்கின்ற ராமாயணம் என்ற காவியத்தினுள் பொன்னிகர்த்தும் விருத்தங்கள் பூந்தென்றல் போலவாம்,” என்று அவர் கவிதாஞ்சலியைத் தொடங்கினார்.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் தலைவர் சுப. அருணாசலம் நினைவுப் பாடல் எழுதும் போட்டியில், ‘மணிவிழா காணும் சிங்கப்பூர்’ என்னும் தலைப்பில் வெற்றிபெற்றார் தமிழாசிரியர் கணேஷ் குமார் பொன்னழகு. அவரது பாடலுக்குப் பின்னணி இசையும் காணொளியும் உருவாக்கினார் இசைக்கவி பி.மதியழகன். கவிஞர் மா.அன்பழகன், முனைவர் தேன்மொழி ஆகியோர் முறையே இரண்டாம், மூன்றாம் நிலைகளைப் பிடித்தனர்.

பாடல் போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் முதல் நிலையைப் பிடித்தார் ஆறுமுகம் சேதுமாதவன், 13. இரண்டாம் நிலையில் அபராஜித் வெங்கட்ராமன், 9, மூன்றாம் நிலையில் சம்ரிதி சஞ்ஜீபன், 11, ஆகியோர் வெற்றிபெற்றனர்.

மூன்றாம் நிலையில் சம்ரிதி சஞ்ஜீபன், 11,
மூன்றாம் நிலையில் சம்ரிதி சஞ்ஜீபன், 11, - படம்: தமிழ் பசங்க ஃபோட்டோகிராஃபி
இரண்டாம் நிலையில் அபராஜித் வெங்கட்ராமன், 9.
இரண்டாம் நிலையில் அபராஜித் வெங்கட்ராமன், 9. - படம்: தமிழ் பசங்க ஃபோட்டோகிராஃபி
 முதல் நிலையைப் பிடித்தார் ஆறுமுகம் சேதுமாதவன், 13.
 முதல் நிலையைப் பிடித்தார் ஆறுமுகம் சேதுமாதவன், 13. - படம்: தமிழ் பசங்க ஃபோட்டோகிராஃபி

14 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் மூன்றாம் நிலையில் சுந்தரவடிவேலு விஜய், இரண்டாம் நிலையில் செளமியா அலூர், முதல் நிலையில் செளந்தர்யா ராமராஜன் வென்றனர்.

‘ஏட்டிலும் பாட்டிலும் கண்ணதாசன்’

‘ஏட்டிலும் பாட்டிலும் கண்ணதாசன்’ எனச் சிறப்புரையாற்றிய முனைவர் மன்னை க. இராஜகோபாலன்.
‘ஏட்டிலும் பாட்டிலும் கண்ணதாசன்’ எனச் சிறப்புரையாற்றிய முனைவர் மன்னை க. இராஜகோபாலன். - படம்: தமிழ் பசங்க ஃபோட்டோகிராஃபி

“காட்டிலே தேனீக்கள், கூட்டிலே வைத்திருந்த தேனைத் தன் பாட்டிலே வைத்துக் குழைத்துக் கொடுத்தவன் கண்ணதாசன்,” என்றார் ‘ஏட்டிலும் பாட்டிலும் கண்ணதாசன்’ எனச் சிறப்புரையாற்றிய முனைவர் மன்னை க. இராஜகோபாலன்.

வள்ளுவன், திருநாவுக்கரசர், பாரதிதாசன் என தன்முன் தோன்றியோரின் வரிகளில் பொதிந்துள்ள அதே கருத்தைக் கண்ணதாசன் எளிதில் புரியும்படி மக்களுக்குக் கொண்டுசென்றதை எடுத்துரைத்தார் முனைவர் இராஜகோபாலன்.

தன்னையறிதல் என்பதே வாழ்வின் அடிப்படை என்பதைக் கண்ணதாசன் 50க்கும் மேற்பட்ட பாடல்களில் கூறியதை அவர் சுட்டினார். “கண்ணதாசன் பெரிய திரைப்படத் தயாரிப்பாளர், கதை, வசன எழுத்தாளர்; அதைத் தாண்டித் தம் தொழில் கவிஞர் என்பதை அவர் நினைவில் வைத்திருந்தார்,” என அவர் கூறினார்.

வீரம் செறிந்த தமிழ்ச் சமூகத்தைப் பற்றிப் பாடியதற்கு ‘அச்சம் என்பது மடமையடா’ பாடலை அவர் உதாரணமாகச் சுட்டினார்.

“நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு” என வள்ளுவர் கூறியதை ‘வீடுவரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?’ என்ற எளிய வரிகளில் கண்ணதாசன் உணர்த்தினார்.

“ஏழு தலைமுறை சொத்து சேர்ப்பவர், கண்ணதாசன் பாடலைக் கேட்கும்போது தன்னைச் சரிசெய்துகொள்வதற்கு வாய்ப்பாக அமைகிறது,” என்றார் அவர்.

‘கண்ணதாசன் என்றொரு காலக்கணிதம்’

‘கண்ணதாசன் என்றொரு காலக்கணிதம்’ தலைப்பில் உரையாற்றிய திருவாட்டி ஸ்வர்ணலதா ஆவுடையப்பன்.
‘கண்ணதாசன் என்றொரு காலக்கணிதம்’ தலைப்பில் உரையாற்றிய திருவாட்டி ஸ்வர்ணலதா ஆவுடையப்பன். - படம்: தமிழ் பசங்க ஃபோட்டோகிராஃபி

‘கண்ணதாசன் என்றொரு காலக்கணிதம்’ என்னும் தலைப்பில் உரையாற்றினார் பட்டிமன்றப் பேச்சாளர், மாணவப் பயிற்றுநர், நூல் விமர்சகர் எனப் பன்முகம் கொண்ட திருவாட்டி ஸ்வர்ணலதா ஆவுடையப்பன்.

“கதிர் வெடித்துப் பிழம்பு விழ, கடல் குதித்துச் சூடாற்ற, முதுமைமிகு நிலப்பரப்பின் முதற்பிறப்புத் தோன்றிவிட என உலகம் தோன்றியதற்கான ‘பிக் பேங்’ வாதத்தைப் படிக்காதவனும் புரிந்துகொள்ளும்படி எளிமையாக்கி, தேன்தமிழுடன் கலந்துதரும் வல்லமை கவியரசு ஒருவருக்கே உள்ளது,” எனப் பாராட்டினார் திருவாட்டி ஸ்வர்ணலதா.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணதாசன் கூறிய பல கருத்துகள் இன்று உண்மையாகியுள்ளதைச் சுட்டி, “கடந்த காலத்தை ஆய்வுசெய்வதும் எதிர்காலத்தின் போக்கைக் கணிப்பதும்தான் காலக்கணிதம். அதில் கவியரசு கைதேர்ந்த வல்லவர்,” என்றார் திருவாட்டி ஸ்வர்ணலதா.

‘தமிழின்றி வேறில்லை’

‘தமிழின்றி வேறில்லை’ சிற்றுரையாற்றிய சுபா‌ஷினி கலைக்கண்ணன்.
‘தமிழின்றி வேறில்லை’ சிற்றுரையாற்றிய சுபா‌ஷினி கலைக்கண்ணன். - படம்: தமிழ் பசங்க ஃபோட்டோகிராஃபி

‘தமிழின்றி வேறில்லை’ என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார் 2022ல் இதே மேடையில் கண்ணதாசன் விருதை வென்ற சுபாஷினி கலைக்கண்ணன்.

“தமிழல்லால் வேறில்லை. வாழ்வில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் அவர் கூறிய வார்த்தைகள்.

“அவருக்கு அப்போது பணமில்லை, உணவில்லை, உறைவிடமில்லை - ஒரு கடற்கரையோரம் பட்டினியும் பசியுமாக இருந்தபோது, காவலர் அவரை எழுப்பி பணம் கேட்டபோது ‘தமிழல்லால் எனக்கு வேறில்லை’ என்பதையே அவர் உரைத்தார்,” என நினைவுகூர்ந்தார் சுபாஷினி.

“என் வாழ்வில் கடினமான நிலைகளைக் கடந்துசெல்லும்போது ஓர் உறவாக என்னுடன் நிற்பது அவரது வார்த்தைகள்தான்,” என்றும் அவர் சொன்னார்.

கண்ணதாசன், ‘வனவாசம்’ எனும் தன்வரலாற்று நூலில், கவியரசாக உலகுக்கு அறிமுகமானபின்பும் தம் வாழ்வில் நடந்த சம்பவங்களைப் பற்றிப் பேசியது அவரது தன்னம்பிக்கையின் உச்சத்தைக் காட்டியதாகப் பாராட்டினார் சுபாஷினி.

மகாபாரதத்தை, ராமாயணத்தை சில வரிகளிலேயே பாமரரும் புரிந்துகொள்ளும்படி எளிமையாகச் சுருக்கியதையும் சுட்டிப் பேசிய சுபாஷினி, “அவர் கட்டளையிட்டால் சொற்கள் வந்து விழும் அவருக்கு சேவகம் செய்ய. அவர் உண்மையிலேயே காலத்தை வென்றவர்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்