மனிதம் முதல் தெய்வம் வரை: சிங்கப்பூரில் பெரியாச்சி அம்மன் நாடகம்

மனிதம் முதல் தெய்வம் வரை: சிங்கப்பூரில் பெரியாச்சி அம்மன் நாடகம்

2 mins read
0205769a-f885-4ac1-a003-98e7d4901450
மேடையேற்றப்பட்ட ‘அன்னை பெரியாச்சி’ நாடகத்தின் உச்சகட்டம். - படம்: கந்தன் ஜெய்

மருத்துவச்சியாக இருந்து தெய்வீகப் பாதுகாவலராக மாறிய பெரியாச்சி அம்மனின் கதையைச் சித்தரிக்கும் நாடகம் சிங்கப்பூரில் நடந்தேறியது.

‘அன்னை பெரியாச்சி’ நாடகத்தை கோலாலம்பூரைச் சேர்ந்த கிரியாலட்சுமி குருகுலமும் மேவரிக் நிகழ்ச்சி, தயாரிப்பு நிறுவனமும் இணைந்து வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) சிராங்கூன் சாலையில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் மண்டபத்தில் மேடையேற்றினர்.

கிரியாலட்சுமி குருகுலத்தைச் சேர்ந்த 7 முதல் 25 வயது வரையுள்ள மாணவர்கள் ஆடல் பாடலுடன் விறுவிறுப்பான படைப்பாக நாடகத்தை அரங்கேற்றினர்.

கிரியாலட்சுமி குருகுலத்தைச் சேர்ந்த மாணவர்கள் தாள வாத்தியங்களுடன் மேடையேற்றிய கச்சேரி.
கிரியாலட்சுமி குருகுலத்தைச் சேர்ந்த மாணவர்கள் தாள வாத்தியங்களுடன் மேடையேற்றிய கச்சேரி. - படம்: கந்தன் ஜெய்

பெரியாச்சி அம்மன் கருவுற்ற பெண்களுக்கும் குழந்தை சார்ந்த தேவைகளுக்கும் உதவிய மருத்துவச்சியாக மக்களிடையே வாழ்ந்ததாக நம்பப்படும் ஒரு பெண்ணை மையமாகக்கொண்டு நாடகம் நிகழ்த்தப்பட்டது.

“தற்போதைய தலைமுறையினர் பெரியாச்சியை தெய்வமாக மட்டுமே அறிவார்கள். ஆனால். அவர் எப்படி உருவானார் என்பது பலருக்கும் தெரியாது என்பதால் இந்த முயற்சியை மேற்கொண்டோம்,” என மேவரிக் நிகழ்ச்சி, தயாரிப்பு நிறுவனத்தின் இணை இயக்குநர் குருபரன் ராதன், 36, கூறினார்.

“மக்களிடம் அரிய தகவல்களைக் கொண்டுசேர்க்கும் நோக்கத்தில் ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் வசனங்களை வழங்கினோம்,” என்றார் குருபரன்.

கார்குழலி கதாபாத்திரத்தில் நடித்த படைப்பாக்க இயக்குநர் அஞ்சலி ஷக்தி, 23.
கார்குழலி கதாபாத்திரத்தில் நடித்த படைப்பாக்க இயக்குநர் அஞ்சலி ஷக்தி, 23. - படம்: கந்தன் ஜெய்

கார்குழலி கதாபாத்திரத்தில் நடித்த படைப்பாக்க இயக்குநர் அஞ்சலி ஷக்தி, 23, மாணவர்கள் மேடையில் தங்கள் சிறந்த பங்களிப்பை வழங்கி, தங்களை முழுமையாக வெளிப்படுத்தியதைக் கண்டு பெருமைப்படுவதாகத் தெரிவித்தார்.

இந்தத் தயாரிப்பு, தனது ஆன்மிக வேர்களையும் மரபையும் மறுமுறை உணர்வதற்கான ஓர் அழைப்பாகவும், மாணவர்களின் வளர்ச்சிக்கு ஒரு தளமாகவும் அமைந்ததாக அவர் கருதுகிறார்.

பெரியாச்சி அம்மனாக நடித்தார் கெவீனா அகிலேஷா ஸ்கேடியாங்க், 18.
பெரியாச்சி அம்மனாக நடித்தார் கெவீனா அகிலேஷா ஸ்கேடியாங்க், 18. - படம்: கந்தன் ஜெய்

திறமையான மருத்துவச்சியாக மாறிய பெரியாச்சி அம்மன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார் கெவீனா அகிலேஷா ஸ்கேடியாங்க், 18.

பெரியாச்சி தனது மருத்துவத் திறனைப் பயன்படுத்தி சிகிச்சை செய்ததையும், தான் காக்க வேண்டிய குழந்தையைக் காப்பாற்ற இரு அரச குடும்பத்தினரைக் கொன்ற கதையையும் கெவீனா விவரித்தார்.

“பெரியாச்சி என்பவர் ஒரு மனிதராகச் செய்த தியாகங்களை இது விளங்க வைக்கும்,” என்று கெவீனா தமது கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் பற்றிக் கூறினார்.

பெரியாச்சி அம்மனின் கதையை இளைய தலைமுறைக்குத் தெரியப்படுத்திய கலைஞர்கள்.
பெரியாச்சி அம்மனின் கதையை இளைய தலைமுறைக்குத் தெரியப்படுத்திய கலைஞர்கள். - படம்: கந்தன் ஜெய்

பார்வையாளரான வித்யாலட்சுமி, 27, கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூர் வந்து இளைய தலைமுறைக்கு இக்கதையைச் சொன்ன கலைஞர்களின் முயற்சியைப் பாராட்டியதுடன் இது ஒரு ஊக்கமளிக்கும் நிகழ்வாக இருந்ததாகக் கூறினார்.

ஒருநாள் மட்டுமே சிங்கப்பூரில் ஒத்திகை பார்த்திருந்தாலும் இவ்வளவு பெரிய படைப்பை வழங்கிய கலைஞர்களின் உழைப்பை வியந்து பாராட்டினார் சிவசங்கரி, 27.

வரலாற்றுக்கும் புராணத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்த இந்த நிகழ்வு, பெரியாச்சி அம்மன் பற்றிய ஒரு புரிதலைத் தந்தது எனலாம்.

குறிப்புச் சொற்கள்