விழிப்புணர்வுடன் வாழ்ந்து மனக் குழப்பங்களைக் கையாள, நமது அன்றாடப் பழக்கவழக்கங்களைக் கவனமாக வடிவமைப்பது அவசியமாகிறது.
வெளிச்சூழலை மாற்றியமைப்பதற்கே கவனம் தேவைப்படும்போது, நம் மன உணர்வுகளைப் புரிந்துகொள்வதற்குக் கூடுதல் மதிநுட்பம் தேவை என்பது விழிப்புநிலை வல்லுநர் கு.கதிரேசனின் நிலைப்பாடு.
“வழிகாட்டியை நாம் கவனத்துடன் தேர்ந்தெடுத்தால் அவரால் நம் வழி சிறப்பாக அமையும்,” என்று டாக்டர் கதிரேசன் தெரிவித்தார்.
தன் முதுகு தனக்குத் தெரியாது என்ற பழமொழிக்கு ஏற்ப, நம் கவனத்துக்கு வராமலேயே நம்மிடம் குடிகொண்டுள்ள பழக்கவழக்கங்களைச் சுட்டிக்காட்ட முறையான ஆலோசனை தேவை என அவர் குறிப்பிட்டார்.
ஆழமாகப் பதிந்திருக்கும் எண்ணப்போக்குகளால் வெளிப்புற உதவியின்றி இவற்றை நம்மால் இனங்காண முடியாது என்று டாக்டர் கதிரேசன் கூறுகிறார்.
“கண்ணாடி இல்லாமல் உங்கள் சொந்த முகத்தை உங்களால் ஒருபோதும் பார்க்க முடியாது. நாம் யார் என்பதைக் கண்டறிய, நம்பகமான வழிகாட்டி ஒருவர் அந்த முக்கியமான கண்ணாடியாகச் செயல்பட்டு, நமது அக உலகில் மறைக்கப்பட்ட பரிமாணங்களைப் பிரதிபலிக்கிறார்; அதன் மூலம் மட்டுமே நம்மால் அவற்றைக் கையாள முடிகிறது,” என்று அவர் கூறுகிறார்.
மனநலம், உணர்வு சார்ந்த மேம்பாட்டுத் துறையில் முனைவர் பட்டப்படிப்பையும் சிறப்புச் சான்றிதழ்களையும் கொண்டுள்ள டாக்டர் கதிரேசன், 2015ல் ‘சென்டர் ஃபார் மைன்ட்புல்னஸ்’ (Centre for Mindfullness) எனப்படும் விழிப்புணர்வுப் பயிற்சி நிலையத்தை நிறுவினார்.
அனைத்தையும் அறிந்த தனித்துவமான ஆசான் என்ற பாரம்பரியக் கருத்திலிருந்து விலகி, வழிகாட்டுதலுக்கான தற்கால அணுகுமுறையை டாக்டர் கதிரேசன் பரிந்துரைக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
துடிப்பான, சமநிலை பேணும் வாழ்க்கைக்கு, பெரும்பாலும் பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களின் கூட்டு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.
வழிகாட்டிக்கான அடிப்படைப் பண்புகள்
தனித்துவமிக்க வழிகாட்டியை வரையறுக்கும் அடையாளங்களைக் குறிப்பிட்ட டாக்டர் கதிரேசன், இந்தக் குறிப்புகள் ‘விவேக சூடாமணி’ போன்ற பண்டைய நூல்களில் காணப்படுவதாகக் கூறுகிறார்.
உண்மையான வழிகாட்டி என்பவர் சான்றுகள் மற்றும் நிறுவப்பட்ட இலக்கியங்களின் அடிப்படையில் ஆழமாக வேரூன்றியிருக்க வேண்டும். இதில் ஏட்டுக்கல்வி மட்டுமன்றி அனுபவக் கல்வியும் அடங்கும் என்று டாக்டர் கதிரேசன் கூறினார்.
அடுத்து, அவர் பகுத்தறிந்து செயல்படும் திறன் கொண்டிருக்க வேண்டும்.
இறுதியாக, தம் வாழ்க்கையில் போராட்டங்களை எதிர்கொண்டு படிப்பினைகளைக் கற்றவர்களாக இத்தகைய வழிகாட்டிகள் திகழ்வது சிறப்பு என்றார் டாக்டர் கதிரேசன்.
தமது சொந்த மனத்தையும் நிலையையும் சரிசெய்யாத ஒருவரை வழிகாட்டியாக ஏற்கப் பிறர் தயங்குவர் என்றும் அவர் கூறினார்.
“தவறுகளைத் திருத்துவதற்கான விருப்பமும் உழைப்பும் இல்லாதவர்கள் தங்களைப் பெரியவர்களாகக் காட்டிக்கொள்ள நினைத்து வழிகாட்டிகளாக நடந்துகொள்ள முற்படுவர். அத்தகையோர் தரும் வழிகாட்டுதல் உண்மையிலேயே வளர்ச்சியை முடக்குகிறது,” என்றும் அவர் கூறினார்.

