சென்னையில் நான்கு சிங்கப்பூர் நூல்கள் வெளியீடு

சென்னையில் நான்கு சிங்கப்பூர் நூல்கள் வெளியீடு

3 mins read
05f1b4db-1c94-49ab-b6b1-964c2ab3eb64
சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் எம்.ஏ.முஸ்தபாவின் ‘சேஞ்ச் அலி’, ஷாநவாசின் ‘ருசிபேதம்’, பாலபாஸ்கரனின் ‘சிங்கப்பூர்-மலாயா தமிழ் இதழியல் 1875-1941’, ‘சொப்பனங்கள் நிஜமாகும் சொர்ண பூமி’ ஆகிய நூல்கள் வெளியீடு கண்டன. - படம்: ஷாநவாஸ்
multi-img1 of 2

சென்னை கவிக்கோ மன்றத்தில் ஜனவரி 4 ஞாயிற்றுக்கிழமையன்று நான்கு சிங்கப்பூர் நூல்கள் வெளியிடப்பட்டன.

எம்.ஏ.முஸ்தபா எழுதிய ‘சேஞ்ச் அலி’, ‌‌‌ஷாநவாசின் ‘ருசிபேதம்’, பாலபாஸ்கரனின் ‘சிங்கப்பூர்-மலாயா தமிழ் இதழியல் 1875-1941’, ‘சொப்பனங்கள் நிஜமாகும் சொர்ண பூமி’ ஆகியவையே அந்நூல்கள்.

இந்நிகழ்ச்சியை ‘தி சிராங்கூன் டைம்ஸ்’, ‘யாவரும் பப்ளிஷர்ஸ்’ இணைந்து, சிங்கப்பூர் ரஹ்மத் முஸ்தபா அறநிறுவனத்தின் ஆதரவில் ஏற்பாடுசெய்தன. தமிழ்நாடு தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவர் ம.இராசேந்திரன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

எம்.ஏ.முஸ்தபா எழுதிய ‘சேஞ்ச் அலி’ நூல் வெளியீட்டு நிகழ்வு.
எம்.ஏ.முஸ்தபா எழுதிய ‘சேஞ்ச் அலி’ நூல் வெளியீட்டு நிகழ்வு. - படம்: ஷாநவாஸ்

“நாணய மாற்று வரலாறாக உலகின் எந்த மொழியிலும் வராத நூலை வழங்கியதற்குத் திரு முஸ்தபாவைப் பாராட்டுகிறேன்,” என்றார் திரு இராசேந்திரன். உலக நாணயங்களை மாற்ற ஒரு சிறு சந்துக்குள் செல்வதுபோல, சிறிய சந்திலுள்ள கவிக்கோ மன்றத்தில் இவ்வளவு பெரிய நூலை வெளியிட்டது ஏற்புடையதே என அவர் கூறினார்.

“இப்புத்தகத்தைப் படித்தபோது, சிங்கப்பூர், மலேசியாவில் இருப்பவர்களுக்கு நாணயம் எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருக்கிறது என்பது உள்ளீடாகத் தெரிகிறது. இது ஒரு தகவல் புத்தகம், ஆவணம் மட்டுமன்று, வரலாற்றையும் உலகெங்கும் மக்கள் வாழும் முறையையும் புரிந்துகொள்ள வழிவகுப்பதாகும். திரு முஸ்தபாவின் நினைவாற்றல் எனக்கு வியப்பாக உள்ளது,” என்றார் ஆய்வுரை வழங்கிய பொருளியல் அறிஞர் முனைவர் சோம. வள்ளியப்பன்.

அமெரிக்க டாலர் வலுவாக இருப்பதற்கு என்னென்ன செய்கிறார்கள், அதற்கான தொடக்கப் புள்ளி எங்குள்ளது என்பதை ‘சேஞ்ச் அலி’ நூல் விளக்குவதாகத் தமிழ்நாடு திட்டக் குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் குறிப்பிட்டார்.

காலஞ்சென்ற சிங்கப்பூர் வரலாற்று ஆய்வாளர் பாலபாஸ்கரன் எழுதிய நூலான ‘சொப்பனங்கள் நிஜமாகும் சொர்ண பூமி’யை எழுத்தாளர் சுனில் கிரு‌ஷ்ணனும், ‘சிங்கப்பூர்-மலாயா தமிழ் இதழியல்: 1875-1941’ நூலை வரலாற்றாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதியும் அறிமுகப்படுத்தினர்.

“பாலபாஸ்கரன் சிங்கப்பூரின் இருண்ட தொடக்கம் குறித்து சித்திரம் அளிக்கிறார். பாலபாஸ்கரன் சித்தரிக்கும் ராஃபிள்ஸ் வாழ்க்கை ஒரு நாவலுக்குரியது,” என்றார் திரு சுனில் கிரு‌ஷ்ணன்.

காலஞ்சென்ற சிங்கப்பூர் வரலாற்று ஆய்வாளர் பாலபாஸ்கரன் எழுதிய இரு நூல்கள் வெளியீடு கண்டன.
காலஞ்சென்ற சிங்கப்பூர் வரலாற்று ஆய்வாளர் பாலபாஸ்கரன் எழுதிய இரு நூல்கள் வெளியீடு கண்டன. - படம்: ஷாநவாஸ்

லிட்டில் இந்தியா ஆர்க்கேட் இந்து மக்களின் முதல் இடுகாடாகப் பயன்பட்டிருக்கலாம், வீராசாமி நாயுடு தைப்பூசத்திற்கு பதிலாகத் தீபாவளிக்கு பொது விடுமுறை வேண்டுமெனப் போராடியது போன்றவற்றைத் திரு பாலபாஸ்கரன் சான்றுகளோடுப் பகிர்ந்ததைப் பாராட்டினார் திரு சுனில் கிரு‌ஷ்ணன்.

திரு பாலபாஸ்கரனின் ‘சிங்கப்பூர்-மலாயா தமிழ் இதழியல்: 1875-1941’ நூல்.
திரு பாலபாஸ்கரனின் ‘சிங்கப்பூர்-மலாயா தமிழ் இதழியல்: 1875-1941’ நூல். - படம்: ஷாநவாஸ்

“திரு பாலபாஸ்கரனுக்கு இரு மொழிகளிலும் எழுத்து வன்மை உண்டு. அவர் எந்த இடத்திலும் விமர்சனங்களை முன்வைக்கத் தயங்கவில்லை. எடுத்துக்காட்டாக, தமிழ் இதழ்களின் எண்ணிக்கைப் பெருக்கம் அவை நெடுங்காலம் நடக்கவில்லை என்பதற்கான அளவுகோல் என்கிறார்,” என்றார் திரு வேங்கடாசலபதி.

‘தி சிராங்கூன் டைம்ஸ்’ ஆசிரியர் ஷாநவாஸ் எழுதியது ‘ருசிபேதம்’ நூல்.

“13ஆம் நூற்றாண்டு முதல், நுகர்வுப் பண்பாட்டில் புதிய அசைவியக்கமாக மாறிவரும் உணவுப் பயன்பாடு, கலாசாரம் பற்றிய நூல். சீன, அரேபிய, ஐரோப்பிய உணவுக் கலாசாரம் தொடங்கிய புள்ளியில் சிங்கப்பூர், மலேசிய உணவுகள் தொடரும் சுவை விருந்தே ருசிபேதம்,” என்றார் அவர்.

“திரு ஷாநவாஸ், தமிழகத்தில் அதிகமாக விற்பனையாகக்கூடிய துறை சார்ந்து எழுதியுள்ளார். பெரும்பாலான சமையல் நூல்கள் சமையல் குறிப்புகளே; ஆனால் ஷாநவாசின் நூலானது உணவின் பண்பாடு, அரசியல், சமூக வரலாறு,” என்றார் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன்.

“எழுத்தாளர் ஷாநவாஸ் எழுதிய உணவுகட்டுரைகள் இலக்கியத்தில் நாக்கை குறிவைத்து சுடச்சுட எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. ஒரு மேசையில் காப்பியையும் ரொட்டியையும் பரிமாறியபடியே அதன் வரலாற்றை எந்த அலுப்பும் தட்டாமல் கதை சொல்வதே அவரது எழுத்தின் வலிமை,” என்றார் எழுத்தாளர் ரியாஸ்.

“இந்த நான்கு நூல்களிலும் முதன்மைப் புள்ளியாக நான் கருதுவது வரலாற்றைத்தான். வரலாறு என்பது ஒரு வியூகம். அதை எப்படிக் கையாள்வது என்பதில் திரு லீ குவான் யூவுக்குத் தீர்க்கமான பார்வை இருந்தது. ஒவ்வொருவருக்கும் அவரவர் வரலாறு, பண்பாட்டு வேர்கள் முக்கியம். அது தாய்மொழியுடன்தான் உள்ளது என அவர் கருதினார்,” என்றார் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர் சமஸ்.

“தமிழகத்துக்கும் தென்கிழக்காசியாவுக்கும் இடையேயான தொடர்பு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேலானது. ஆனால், நம் வரலாறு இன்றும் மேற்கத்திய பார்வையிலேயே உள்ளது,” என்றும் திரு கோம்பை அன்வர் வருந்தினார்.

சிங்கப்பூர், மலேசிய எழுத்தாளர்கள் எழுதும் நூல்கள் தமிழ்நாட்டில் அதிகம் வாசிக்கப்படாத குறை தொடர்ந்து நிலவுவதாகவும், இவ்வேளையில் இந்நிகழ்ச்சி முக்கியத்துவம் வகிப்பதாகவும் திரு ஆ.இரா. வேங்கடாசலபதி குறிப்பிட்டார்ர்.

திரு ஷாநவாஸ் வரவேற்புரையும் ‘யாவரும் பப்ளிஷர்ஸ்’ பதிப்பாளரும் எழுத்தாளருமான திரு ஜீவ கரிகாலன் நன்றியுரையும் ஆற்றினர்.

நிகழ்ச்சியின் காணொளிகளை https://youtu.be/C9GHjj82iK0 தளத்தில் காணலாம்.

வெளியீடு கண்ட நூல்களைச் சென்னைப் புத்தகக் காட்சியிலும் வாங்கலாம்.

குறிப்புச் சொற்கள்