அளவுக்கு மிஞ்சிய மதுப் பழக்கமும் பக்கவாத பாதிப்பும்

அளவுக்கு மிஞ்சிய மதுப் பழக்கமும் பக்கவாத பாதிப்பும்

2 mins read
1574ab2f-640a-4251-94ae-587520f423d8
அதிகம் மது அருந்துவதால் பக்கவாத விளைவுகள் மோசமாக இருக்கும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

அதிகளவில் மது அருந்துவதால் முன்கூட்டியே மூளையில் ரத்தக் கசிவு ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

மது அருந்துவதற்கும் மூளையில் ரத்தக் கசிவு ஏற்படுவதற்கான தொடர்பு குறித்தும் அந்த ஆய்வு கவனம் செலுத்தியது. மூளையில் ரத்தக் கசிவு ஏற்படுவது கடுமையான பக்கவாத வகை என்பது மட்டுமின்றி, அது உயிர்க்கொல்லியும் கூட.

ஒரு நாளுக்கு மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட குவளை மது அருந்துவோருக்கு வழக்கத்தைவிட 11 ஆண்டுகள் முன்னதாகவே பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

அவர்களுக்கு மூளையில் அதிக ரத்தக் கசிவு ஏற்பட சாத்தியம் இருப்பதும் தெரியவந்துள்ளது.

அதிக அளவில் மது அருந்தினால் மூளையில் ரத்தக் கசிவு ஏற்படும் என்று நேரடியாகத் தொடர்புபடுத்துவதற்குப் பதிலாக, அது ரத்தக் குழாய்களைச் சேதமாக்குவதாகவும் இதய நோய் ஏற்பட சாத்தியம் இருப்பதாகவும் ஆய்வு குறிப்பிட்டது.

பக்கவாதத்தில் 85 விழுக்காடு அளவு, மூளையின் ரத்தக் குழாய்களில் ரத்தக் கட்டியால் அடைப்பு ஏற்படுவதன் காரணமாக அமைகின்றன. மது அருந்துவதற்கும் பக்கவாதத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்து கூடுதல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மூளையில் ரத்தக் குழாய் வெடிப்பதால் ரத்தக் கசிவு ஏற்படுகிறது.

அதிக அளவில் மது அருந்துவோருக்கு உயர் ரத்த அழுத்தமும் ரத்தத்தை உறைய வைக்கும் அணுக்களின் அளவும் அதிகமாக இருக்கும். இதனால் மூளையில் ரத்தக் கசிவு ஏற்படக்கூடும்.

அதிகம் மது அருந்துவோரின் மூளை, குறிப்பாக, அதன் வெண் திசு மூப்படையும் வாய்ப்பு மும்மடங்கு அதிகம்.

பக்கவாதத்திலிருந்து குணமடைந்த பிறகு 90 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் சுதந்திரமாக நடவடிக்கைகளில் ஈடுபட சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் தெரியவந்துள்ளது.

அதுபோல ஒரு நாளில் இரண்டு குவளைக்கும் அதிகம் மது அருந்துவோர், இளம் வயதிலேயே மூளையில் ரத்தக் கசிவு ஏற்படும் அபாயத்தை எதிர்நோக்குகின்றனர்..

மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டால், மருத்துவ சிகிச்சை மூலம் அதை உடைத்தாலும் அல்லது மருந்துகளைக் கொண்டு கரைத்தாலும், ரத்தக் கசிவைத் தீர்ப்பது கடினம்.

குறிப்பாக, உயர் ரத்த அழுத்தம், இரண்டாம் வகை நீரிழிவு, உடற்பருமன் உடையோர் பக்கவாதத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

குறிப்புச் சொற்கள்