இதய நலனைப் பேண வழிகாட்டும் உடல்நல உரை நிகழ்ச்சி

இதய நலனைப் பேண வழிகாட்டும் உடல்நல உரை நிகழ்ச்சி

2 mins read
b976efcf-4b14-40ff-874c-0954880c9401
மாரடைப்பு வராமல் காப்பது, மாரடைப்பு வந்தால் உயிரைக் காப்பது உள்ளிட்ட தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்பட்டன. - மக்கள் கழகம்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் அதிகரித்துவரும் மாரடைப்புப் பிரச்சினை பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் இதய நலம் தொடர்பில்  ‘ரெடி அட் ஹார்ட்’ என்ற நிகழ்ச்சி நடந்தேறியது.

மக்கள் கழகமும்  சிங்கப்பூர் இதய அறக்கட்டளையும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சி, சனிக்கிழமை (நவம்பர் 29) நடந்தேறியது. புக்கிட்  தீமா சமூக அவசரகால ஈடுபாட்டுக் குழுவும் இந்நிகழ்ச்சியில் ஈடுபட்டுள்ளது.

2050க்குள் மாரடைப்பு கிட்டத்தட்ட மும்மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் வாழ்க்கை முறை, உணவு, உணர்வு ஆகியவற்றில் தேவைப்படும் மாற்றங்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை இந்த நிகழ்ச்சி கற்பிக்கிறது.

மாரடைப்புக்கான எச்சரிக்கை அறிகுறிகளைக் கண்டறியவும், உடல்நலச் சீர்கேடுகளை நிர்வகிக்கவும்,   சிபிஆர், ஏஇடி முதலிய அவசரகால சிகிச்சை வழி  உயிர்பிழைக்கும் வாய்ப்புகளை எந்த அளவுக்கு மேம்படுத்த முடியும் என்பதையும் பங்கேற்பாளர்கள் அறிந்துகொண்டனர்.

உள்துறை, வெளியுறவு மூத்தத் துணை அமைச்சர் சிம் ஆன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார். “அவசரகால பதில் நடவடிக்கை முக்கியமானது என்றாலும் முன்தடுப்பே சாலச் சிறந்தது,” என்று திருவாட்டி சிம் ஆன் குறிப்பிட்டார்.

புக்கிட் தீமா சி2இ (C2E)  தலைவரான பாலசுப்ரமணியம் கிருஷ்ணா,72, அவசரகால தேவைக்காகத் தயாராக இருப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அத்துடன், ஒவ்வொரு வீட்டிலும் பயிற்சி பெற்ற உயிர்காப்பாளர் ஒருவராவது இருப்பது நல்லது என்று அவர் கூறினார்.

“தயக்கத்தைத் தகர்த்தெறிந்து உயிர்காக்கும் திறன்களைத் தொடர்ந்து வளர்த்து வாருங்கள். நெருக்கடியோ அவசரமே எங்கும் நிகழலாம். முதலுதவி, சிபிஆர்-ஏஇடி ஆகியவற்றைப் பயன்படுத்தி, சிங்கப்பூரர்கள் அவசரகாலத்திலும் திறம்படச் செயல்படுவது விரும்பத்தக்கதாகும்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்