நல்வாழ்விற்கு அடித்தளமாகும் சத்தான காலை உணவு

நல்வாழ்விற்கு அடித்தளமாகும் சத்தான காலை உணவு

3 mins read
913e9abf-99fd-42ef-ae4e-6cd541b1c7fc
பொதுவாக, இரவு முழுவதும் நாம் இருக்கும் நீண்ட நேர விரதத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நேரத்தைக் காலை உணவு குறிக்கிறது. - படம்: ஃபிரீபிக்

‘காலை உணவுதான் ஒரு நாளின் மிக முக்கியமான உணவு’ என்பது நீண்டகாலமாக நிலைத்திருக்கும் உணவுமுறை அறிவுரைகளில் ஒன்று.

இருப்பினும், உடல் எடையைக் குறைப்பதிலும் வளர்சிதை மாற்றத்தைச் சீராக்குவதிலும் காலை உணவின் பங்கு குறித்து நிபுணர்கள் தொடர்ந்து விவாதித்து வருகின்றனர்.

பொதுவாக, இரவு முழுவதும் நாம் இருக்கும் நீண்ட நேர விரதத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நேரத்தைக் காலை உணவு குறிக்கிறது.

இரவு தூக்கத்தின்போது ஒருவரின் உடல் பழுதுபார்க்கும் பணிகளைச் செய்வதால், காலையில் எழும்போது ரத்தத்தில் சர்க்கரை (glucose) அளவு குறைவாக இருக்கும்.

சத்தான காலை உணவு, மூளைக்கும் தசைகளுக்கும் தேவையான உடனடி ஆற்றலை வழங்குகிறது.

மேலும், தூக்கத்திலிருந்து விழித்த பிறகு உணவருந்துவது, உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டிவிடுகிறது.

பல பெரிய அளவிலான ஆய்வுகள், காலை உணவை நிறைவாக உட்கொள்பவர்களுக்கு உடல் எடைக் குறியீட்டெண் (BMI) குறைவாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

காலையில் அதிக கலோரி கொண்ட உணவையும், இரவில் குறைந்த கலோரி கொண்ட உணவையும் உட்கொள்பவர்கள், நாள் முழுவதும் சீரான பசி உணர்வைப் பெறுகிறார்கள். இதனால், மாலையில் நொறுக்குத்தீனிகளை நாடும் பழக்கம் குறைகிறது.

என்ன சாப்பிடுகிறோம் என்பதுடன், எப்போது சாப்பிடுகிறோம் என்பதும் மிக முக்கியம். ஒருவரின் உடலின் இன்சுலின் உணர்திறன் காலையில் மிக அதிகமாகவும் மாலையில் குறைவாகவும் இருக்கும்.

அதாவது, காலையில் சாப்பிடும் உணவை உடல் ஆற்றலாக மாற்றும் திறன் அதிகம். ஆனால், அதே உணவை இரவு தாமதமாகச் சாப்பிடும்போது அது கொழுப்பாக மாற வாய்ப்பு அதிகம்.

காலை உணவைத் தவிர்ப்பதைவிட, தொடர்ச்சியாக இரவு தாமதமாகச் சாப்பிடும் பழக்கம் வளர்சிதை மாற்ற நோய்களுக்கும் நீரிழிவு நோய்க்கும் வழிவகுக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

அதே நேரம், பிரபலமாகி வரும் இடைவேளை விரதத்தில் (எடுத்துக்காட்டாக, 16:8 முறை), பலர் காலை உணவைத் தவிர்த்துவிட்டு நண்பகலில் நாளின் முதல் உணவை உட்கொள்கின்றனர்.

இது ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் இதய நலத்தை மேம்படுத்தவும் சிலருக்கு உதவுகிறது.

காலையில் பசி உணர்வே இல்லாதவர்களுக்கு இது சிறந்த முறை. ஆனால், காலை உணவைத் தவிர்த்துவிட்டு நண்பகலில் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் பலன் கிடைக்காது. குறிப்பாக, மாணவர்களுக்கும் வேலைக்குச் செல்பவர்களுக்கும் காலை உணவு மிக அவசியம்.

சத்தான காலை உணவு, கவனச் சிதறலைக் குறைத்து, நினைவாற்றல், அறிவாற்றல் திறனை மேம்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

காலை உணவைத் தவிர்ப்பது சிலருக்கு எரிச்சலையும் சோர்வையும் உண்டாக்கலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும், காலை உணவை உண்டால் எடை குறையும் என்பது உண்மையன்று. ஒருவரின் ஒட்டுமொத்த கலோரி அளவும் வாழ்க்கைமுறையும்தான் எடையைத் தீர்மானிக்கின்றன.

பசியில்லாதபோதும் கட்டாயப்படுத்தி காலை உணவு உண்பது எடைக் குறைப்பிற்கு உதவாது என்று அண்மை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

புரதம் (முட்டை, பயறு வகைகள், பன்னீர்), நார்ச்சத்து (ஓட்ஸ், கம்பு, கேழ்வரகு, காய்கறிகள்), கால்சியம், வைட்டமின்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் அடங்கிய ஒரு சமச்சீரான காலை உணவு, இரவு ஓய்வுக்குப் பிந்தைய உடல் செயல்பாடுகளுக்குத் தேவையான ஆதரவை வழங்குகிறது.

நீரிழிவு நோயாளிகள் கஞ்சிக்குப் பதிலாக, குறைந்த கிளைசீமிக் குறியீட்டெண் கொண்ட உணவு வகைகளான முழுத் தானியங்களில் தயாரித்த இட்லி போன்ற ஆவியில் வெந்த உணவுகளைக் காய்கறிகளுடன் சேர்த்து உண்பது சிறந்தது.

காலை உணவு என்பது அனைவருக்கும் கட்டாயமானதன்று என்றாலும், காலையில் பசியுடன் எழுபவர்களுக்கு அது மிகவும் பயனுள்ளது.

எந்த ஒரு குறிப்பிட்ட வேளையில் உட்கொள்ளப்படும் உணவின் தன்மையைவிட நாள் முழுவதும் சீரான, சத்தான உணவுகளை உட்கொள்ளும் பழக்கவழக்கத்தைப் பின்பற்றுவதே நீண்டகால நலத்திற்கு மிக முக்கியமானது.

குறிப்புச் சொற்கள்