சிங்கப்பூரின் சிறப்புகளைக் காட்டும் ஓவியக் கண்காட்சி

சிங்கப்பூரின் சிறப்புகளைக் காட்டும் ஓவியக் கண்காட்சி

2 mins read
a3cbabb3-92c8-4833-94cf-d76e13c49e26
சிங்கப்பூரின் சிறப்புகளை வெளிப்படுத்தும் ஓவியக் கண்காட்சியை அமைத்துள்ள ஆரியன் அரோரா. - படம்: ரவி சிங்காரம்
Google News Preferred Icon

தொடக்கத்தில் தனக்கு அந்நிய நாடாகத் திகழ்ந்த சிங்கப்பூர் இன்று மனத்துக்கு நெருக்கமான, சொந்த நாடாக மாறிய பயணத்தைக் கலைமூலம் பகிர்கிறார் இளம் ஓவியர் ஆரியன் அரோரா, 26.

அவருடைய பார்வையில் சிங்கப்பூரின் சிறப்பு அம்சங்களைச் சித்திரிக்கும் ஓவியக் கண்காட்சி, மே 17 முதல் 24ஆம் தேதிவரை, கெப்பல் சாலையிலுள்ள ‘இன்ஸ்டிங்’ கலைக்கூடத்தில் இடம்பெறுகிறது.

‘பனி இல்லாத பருவங்கள்’ என்ற கருப்பொருளைக் கொண்டது இக்கண்காட்சி.

ஏன் இந்தத் தலைப்பு?

“சிங்கப்பூரில் இயற்கை சார்ந்த நான்கு பருவங்கள் இல்லாவிட்டாலும் மற்ற நாடுகளில் காணமுடியாத பல அம்சங்களையும் இங்கு கண்டேன். அதனால் இக்கண்காட்சி சிங்கப்பூருக்கான என்னுடைய சமர்ப்பணமாகும்,” என்கிறார் ஆரியன்.

‘ஓல்ட் சாங்கீ’ உணவுக் கடையில் இலவச உணவைப் பெற வரிசையில் ஒழுங்குடன் நிற்கும் மக்கள், எம்ஆர்டி நிலையத்தில் மெல்லிழைத்தாள் விற்பவர், காப்பிக்கடையில் காப்பி கலந்து கொடுக்கும் கடைக்காரர், சிங்கப்பூரைக் கட்டியமைக்கும் வெளிநாட்டு ஊழியர் போன்றோரைத் தன் ஓவியங்களில் சித்திரிக்கிறார் ஆரியன்.

எட்டு ஆண்டுகளுக்குமுன் சிங்கப்பூருக்கு வந்து லசால் கலைக் கல்லூரியில் படித்த அவர், அதைத் தொடர்ந்து பல கலைப் படைப்புகளைப் படைத்துள்ளார்.

சிங்கப்பூர் அறிவாலயம் (Singapore Discovery Centre), ‘மச்சான்ஸ் கிச்சன்’ உணவகம், சிங்கப்பூரிலுள்ள கூகல் தலைமையகம், ‘யாரனா’ உணவகம் எனப் பல இடங்களில் அவற்றைக் காணலாம்.

இக்கண்காட்சியில் உள்ள ஓவியங்கள் அனைத்தும் கறுப்பு, வெள்ளையில் படைக்கப்பட்டவை.

பார்வையில் குறைபாடு இருந்தாலும் தான் கறுப்பு வெள்ளையில் ஓவியம் தீட்டுவதற்கு அது காரணமன்று என்கிறார் ஆரியன்.

“வாழ்வில் அனைத்தும் கறுப்பு, வெள்ளையெனப் பலரும் என்னிடம் கூறியுள்ளனர். நான் இரண்டுக்கும் இடையே உள்ளேன். எனக்குச் சரியென்பது மற்றொருவருக்குத் தவறாக இருக்கலாம் என்பதை உணர்ந்துள்ளேன். அதனால் நான் கறுப்பு, வெள்ளை சார்ந்த ஓவியங்களை வரைகிறேன்,” என்றார் ஆரியன்.

இவரது ஓவியங்களில் மனிதர்களுக்கு முகங்கள் இல்லை. முகமூடி அணிந்திருப்பதுபோல இருக்கும்.

“நாம் ஒவ்வொருவரும் கணவர், மகன், நண்பர் இப்படி பலதரப்பட்ட முகமூடிகளை அணிந்துள்ளோம். அதனால்தான் முகமூடி அணிந்த மனிதர்களையே வரைகிறேன்,” என்றார் ஆரியன்.

கேள்விகளுக்கு விடையளிக்க ஓவியக்கலை வாய்ப்பளித்தது

“நான் சிறுவனாக இருந்தபோது எது சரி? எது தவறு? என்பது குறித்து எனக்குள்ளே பல கேள்விகள் எழுந்தன. சொற்களால் விவரிக்க முடியாததை என்னால் ஓவியத்தில் சொல்ல முடிகிறது,” என்றார் ஆரியன்.

பெற்றோரும் நிறுவனமும் தனக்குக் கொடுத்த ஆதரவால்தான் கலைத்துறையில் முழுநேரமாகப் பணியாற்ற முடிவதாக அவர் சொன்னார்.

இக்கண்காட்சியில் தம் மகனின் படைப்பைக் காண ஆரியனின் பெற்றோர் வர்னிகா, பவன் அரோரா இருவரும் இந்தியாவிலிருந்து வந்திருந்தனர்.

“தொடக்கத்தில் அவர் ஓவியராக வாழ்க்கைத் தொழிலைத் தேர்ந்தெடுத்தபோது அச்சப்பட்டோம். ஆனால் அவருடைய நம்பிக்கையைக் கண்டதும் முழுமனத்தோடு ஆதரித்தோம். அவர் இந்நிலைக்கு முன்னேறியுள்ளதைக் காணும்போது மிகவும் பெருமையாக உள்ளது,” என்றார் தாயார் வர்னிகா.

குறிப்புச் சொற்கள்