ஏழு பெருங்கடல் சவாலை வென்று உலகச் சாதனை படைத்த இளம் இந்தியர்

ஏழு பெருங்கடல் சவாலை வென்று உலகச் சாதனை படைத்த இளம் இந்தியர்

2 mins read
a028eba2-a412-4240-af62-200664097d31
இந்தியாவைச் சேர்ந்த ரோஹன் மோர், பிரபாத் கோலி ஆகியவர்களைவிட இளையவரான அன்ஷுமான், மூன்றாவது இந்தியராகச் சாதித்துக் காட்டியுள்ளார். - படம்: லோக்கல் சமோசா
Google News Preferred Icon

மும்பை: உலகின் ஆகக் கடினமான, சவாலாகக் கருதப்படும் ‘ஏழு பெருங்கடல்’ சவாலை ஏற்று வெற்றிபெற்ற உலகின் மிக இள வயது நீச்சல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இந்தியாவின் நவி மும்பையைச் சேர்ந்த அன்ஷுமான் ஜிங்ரான்.

21 வயதான அவர், கடந்த ஜூன் 30ஆம் தேதி ஜப்பானின் ஆபத்தான ‘சுகாரு’ (Tsugaru) நீரிணையில் நீந்தி, அதனைக் கடந்ததை அடுத்து, அவரது சவால் பயணம் முடிவுக்கு வந்தது.

இந்தியாவைச் சேர்ந்த ரோஹன் மோர், பிரபாத் கோலி ஆகிய இருவரும் ஏற்கெனவே அந்தச் சாதனையைப் புரிந்துள்ளனர்.

எனினும், அவர்களைவிட இளையவரான அன்ஷுமான், மூன்றாவது இந்தியராகச் சாதித்துக் காட்டியுள்ளார்.

தமக்கு இந்த வெற்றி எளிதில் கிடைத்துவிடவில்லை என்று கூறியுள்ளார் அன்ஷுமான்.

அண்மையில், ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, அவரது பயணம் தாமதமானது. எனினும், சுகாரு நீரிணை நீச்சல் சங்கம் அனுமதி அளித்த பின்னர், அதிகாலை வேளையில் கடலில் நீந்தத் தொடங்கியதாக அவர் தெரிவித்தார்.

ஏறக்குறைய 12 மணி நேரம் 39 நிமிடங்கள் இடைவிடாது நீந்திய பிறகே வெற்றி அவரது வசமானது.

“ஜப்பான் கடற்பகுதியில் கடும் பனிமூட்டம், எதிர்பாராத வானிலை மாற்றங்களால் ஐம்பது கிலோ மீட்டர் தூரம் நீந்த வேண்டியிருந்தது. இதனால், மேலும் கடும் உடல் நடுக்கம், ‘ஹைபோதெர்மியா’ (உடல் வெப்பநிலை ஆபத்தான அளவுக்குக் குறைதல்) ஆகிய பாதிப்புகளையும் கடந்து இலக்கை அடைந்தேன்,” என்று கூறியுள்ளார் அன்ஷுமான்.

கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவரான தமக்குப் பயிற்சியாளர் ருதுஜா உதேசி, தாய் கிரண் ஜிங்ரான் ஆகியோர் முழு ஆதரவாக இருந்து வழிநடத்துவதாக அன்ஷுமான் தெரிவித்துள்ளார்.

மலையேறுபவர்களுக்கு ‘எவரெஸ்ட்’ சிகரத்தின் உச்சியைத் தொடுவது எந்த அளவுக்கு பெருமைக்குரிய செயலோ, அதேபோல் நீச்சல் வீரர்களுக்கு ஏழு பெருங்கடல்களைக் கடப்பது லட்சியமாக இருக்கும்.

இந்தியா, இலங்கையை இணைக்கும் ‘பாக்’ நீரிணை உட்பட ஏற்கெனவே பத்து முக்கியமான கடல் வழிகளைக் கடந்துள்ள அன்ஷுமானின் இந்த உலகச் சாதனை அவருக்குப் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்