நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாட்டுக்குச் செல்லப் போவதில்லை: அனில் அம்பானி

நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாட்டுக்குச் செல்லப் போவதில்லை: அனில் அம்பானி

2 mins read
9576cc1a-a30b-4b2f-8447-d0f90ee3c434
அனில் அம்பானி. - படம்: ஜன்சட்டா
Google News Preferred Icon

புதுடெல்லி: நீதிமன்றத்தின் அனுமதியின்றி இந்தியாவை விட்டு தாம் வெளியேறப் போவதில்லை எனத் தொழிலதிபர் அனில் அம்பானி தெரிவித்துள்ளார்.

எஸ்பிஐ உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் ரூ.31,580 கோடி கடன்பெற்று அதைத் திருப்பிச் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார் அனில் அம்பானி.

கடந்த 2013 முதல் 2017ஆம் ஆண்டு வரை அவர் வங்கிகளை அணுகி கடன் பெற்றுள்ளார். எனினும், அவ்வாறு பெற்ற தொகையைத் தவறான வகைகளில் அவர் முதலீடு செய்தார் எனப் புகார் எழுந்தது.

இதையடுத்து சிபிஐ, அமலாக்கத்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளன.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் பிப்ரவரி 4ஆம் தேதி நடைபெற்றது. அப்போது சிபிஐ, அமலாக்கத்துறையினர் விசாரணையைத் தேவையின்றி தாமதப்படுத்துவதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

வங்கி மோசடி உள்ளிட்ட பல்வேறு பொருளியல் மோசடிகளில் சிக்கும் தொழிலதிபர்கள் தொடர்பான சில வழக்குகளைக் குறிப்பிட்ட நீதிபதிகள், அந்தத் தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்றதைச் சுட்டிக்காட்டினர்.

அதேபோல், அனில் அம்பானியும் வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு வியாழக்கிழமை (பிப்ரவரி 19) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அனில் அம்பானி சார்பாக பிரமாணப் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தன் மீதான மோசடி வழக்கு விசாரணை தொடங்கியதில் இருந்து தாம் எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை என அனில் அம்பானி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஏதேனும் அவசரத் தேவை காரணமாகத் தாம் வெளிநாடு செல்ல வேண்டியிருந்தால் நீதிமன்றத்திடம் உரிய அனுமதி பெற்ற பிறகே அந்தப் பயணம் மேற்கொள்ளப்படும் எனவும் அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்