புதுடெல்லி: தமது விண்வெளிப் பயணம் இந்தியாவில் ககன்யான் திட்டத்திற்கு நிச்சயம் உதவும் எனத் தாம் நம்புவதாக இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தெரிவித்துள்ளார்.
அனைத்துலக விண்வெளி நிலையத்துக்குச் சென்று திரும்பிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்த அவர், டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, ககன்யான் திட்டம் இந்தியாவின் மிகப்பெரிய பணிகளில் ஒன்று என்றும் சுக்லாவின் விண்வெளி அனுபவம் இத்திட்டத்தின் வெற்றிக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்றையும் மோடி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
இருவருக்கும் இடையேயான உரையாடலின்போது, ககன்யான் உட்பட இந்தியாவின் எதிர்கால விண்வெளிப் பயணத் திட்டங்களுக்கு உதவ தனது கற்றல், பயிற்சி, விண்வெளி அனுபவம் ஆகியவற்றை ஆவணப்படுத்துமாறு பிரதமர் மோடி தம்மிடம் கேட்டுக்கொண்டதாக சுக்லா தெரிவித்தார்.
“உங்கள் அனுபவம் மதிப்புமிக்கது என்று பிரதமர் மோடி கூறினார். எனது அனுபவங்களையும் அறிவையும் அனைவருடனும் பகிர்ந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி,” என்றார் அவர்.

