வருமானத்தை மறைத்த மனைவி; ஜீவனாம்ச உத்தரவு ரத்து!

2 mins read
f27c951d-398b-4c07-82b0-f876af95726b
அலகாபாத் உயர்நீதிமன்றம். - படம்: இந்து தமிழ் திசை

பிரயாக்ராஜ்: “சொந்தமாகச் சம்பாதிக்கும் மற்றும் பிரிந்து வாழும் மனைவிக்கு மணமுறிவு வாழ்க்கைச் செலவினத் தொகை வழங்க வேண்டும்,” என்ற கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. வருமானம் ஈட்டும் அந்தப் பெண், தனது உண்மையான சம்பள விவரத்தை நீதிமன்றத்தில் மறைத்துவிட்டதாக உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், கவுதம புத்த நகரில் உள்ள குடும்ப நல நீதிமன்றம், கடந்த பிப்ரவரி மாதம் அங்கித் ஷா என்பவர் தனது பிரிந்து வாழும் மனைவிக்கு மணமுறிவு வாழ்க்கைச் செலவினத் தொகை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து அங்கித் ஷா அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அங்கித் ஷா தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், “வருமானம் ஈட்டுவதைக் குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் மனைவி மறைத்துவிட்டார். பின்னர் குறுக்கு விசாரணையின்போதுதான் அதை ஒப்புக்கொண்டார். இதன் மூலம் அவர் நேர்மையாக நீதிமன்றத்தை அணுகவில்லை,” என்று வாதிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மதன் பால் சிங், குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார். அவர் தனது தீர்ப்பில், “சம்பந்தப்பட்ட அந்தப் பெண் முதுகலை பட்டப்படிப்புடன் ‘வெப் டிசைனிங்’ முடித்துள்ளார். குறுக்கு விசாரணையில் அவர் மாதம் ரூ.36,000 சம்பாதிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். குழந்தையோ அல்லது வேறு எந்தப் பொறுப்பும் இல்லாத அவருக்கு, இந்தத் தொகை குறைவானது எனக் கூற முடியாது. அதே சமயம், மனுதாரரான கணவருக்குத் தனது வயதான பெற்றோரைப் பராமரிக்கும் பொறுப்பும், இதர சமூகக் கடமைகளும் உள்ளன.

“அந்தப் பெண் சம்பாதிப்பவர் என்பதாலும் தன்னைத்தானே பராமரித்துக் கொள்ளும் திறன் கொண்டவர் என்பதாலும் தனது கணவரிடமிருந்து மணமுறிவு வாழ்க்கைச் செலவினத் தொகை பெறத் தகுதியற்றவர் ஆகிறார்.

மேலும், உண்மைக்கு மதிப்பளிக்காத, முக்கிய உண்மைகளை மறைப்பவர்களின் வழக்குகள் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்,” என்று நீதிபதி தனது உத்தரவில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்