பெங்களூரு கூட்டநெரிசலுக்கு விராத் கோஹ்லியும் காரணம்: கர்நாடக அரசு

பெங்களூரு கூட்டநெரிசலுக்கு விராத் கோஹ்லியும் காரணம்: கர்நாடக அரசு

2 mins read
57c8f9de-5106-4765-800b-f804b9834421
விராத் கோஹ்லி சமூக ஊடகங்கள் மூலம் ரசிகர்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இந்த ஆண்டு வெற்றி பெற்ற ஆர்சிபி அணிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின்போது, பெங்களூரில் ஏற்பட்ட கூட்டநெரிசலுக்கு ஆர்சிபி அணியின் நிர்வாகம்தான் காரணம் என கர்நாடக மாநில அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும், ஆர்சிபி அணியின் முக்கியமான வீரரான விராத் கோஹ்லி காணொளி மூலம் ரசிகர்களுக்கு விடுத்த அழைப்பும் பலர் உயிரிழந்த துயரச் சம்பவத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 4ஆம் தேதி, பெங்களூரு சின்னசாமி திடலில், ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

அப்போது, திடலுக்கு வெளியே ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட நெரிசல் காரணமாக 11 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

இதையடுத்து அரசு, காவல்துறை அதிகாரிகள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில், கூட்டநெரிசலுக்கும் உயிரிழப்புகளுக்கும் ஆர்சிபி அணி நிர்வாகமும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் செய்த தவறுகள்தான் காரணம் என பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கர்நாடக அரசு குறிப்பிட்டுள்ளது.

“வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டபோது, அந்த நிகழ்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனினும், விராத் கோஹ்லி சமூக ஊடகங்கள் மூலம் ரசிகர்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். மேலும், இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் என்றும் விளம்பரம் செய்யப்பட்டது.

“பின்னர், சிறப்பு நுழைவு அட்டை இருந்தால் மட்டுமே திடலுக்குள் அனுமதிக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்ததால் குழப்பம் ஏற்பட்டது. இதனால்தான் ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு திடலுக்குள் செல்ல முயன்றனர்.

“ஆர்சிபி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான டிஎன்ஏ, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் இடையே முறையான ஒருங்கிணைப்பு இல்லாததால் இந்த அசம்பாவிதம் நடந்தது,” என்று கர்நாடக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
பெங்களூருகிரிக்கெட்வெற்றிகூட்ட நெரிசல்மரணம்கர்நாடகாமாநில அரசுஉயர் நீதிமன்றம்