2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனித்துப்போட்டியிடும் சூழல் உருவாகி வருகிறது.
மாநிலத்தின் இரண்டு முக்கிய அரசியல் அணிகளான திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணிகள் தற்போது உறுதியான கட்டமைப்புடன் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக உள்ளன. இதனால் விஜய் தனித்து விடப்பட்டுள்ளாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
2017ஆம் ஆண்டுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்து எந்த முக்கியக் கட்சியும் வெளியேறவில்லை. காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக போன்ற கட்சிகளுடன், இம்முறை மக்கள் நீதி மய்யமும் இணைந்திருக்கிறது. அதனால் திமுக கூட்டணி மிகப்பெரிய பலத்துடன் களமிறங்கத் தயாராக உள்ளது.
2024 தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் தனித்தனியாகப் போட்டியிட்டதால் ஏற்பட்ட வாக்குச் சிதறலை உணர்ந்து, மீண்டும் ஒன்றிணைந்தால் மட்டுமே பலம் என்ற புரிதல் உருவாகியுள்ளது.
பாமக, தேமுதிக, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் அதிமுக பக்கம் சாயும் சூழல் உள்ளது. பாஜக மேலிடம் (குறிப்பாக அமித் ஷா), ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவரத் தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டிலேயே, கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு, அதிகாரப் பகிர்வு அளிக்கத் தயார் என்று அழைப்பு விடுத்திருந்தார். விஜய்யின் அழைப்பிற்கு இதுவரை எந்த முக்கிய அரசியல் கட்சியும் அதிகாரபூர்வமாகப் பதிலளிக்கவில்லை.
இதனால் 2026 தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக–பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி (தனித்து) என மூன்று துருவங்கள் உருவாகி, விஜய் நான்காவது துருவமாகத் தனித்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விஜய்க்கு மக்கள் செல்வாக்கு, ரசிகர் கூட்டம் இருந்தாலும், கூட்டணிக் கட்சிகள் சேராதது அவரது அரசியல் பயணத்தில் பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது.
கரூரில் நடந்த பிரசாரத்தில் தேக்கம் அடைந்த தவெக கட்சியினர் புதுச்சேரி கூட்டத்திற்குப் பிறகு, மீண்டும் புதுத்தெம்புடன் பெருந்துறையில் திறந்தவெளிப் பிரசாரத்தில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே உள்ள மூங்கில்பாளையம் திறந்தவெளித் திடலில் வியாழக்கிழமை (டிசம்பர் 18) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை விஜய் கூட்டத்தில் பேச இருக்கிறார்.
கரூரில் நடந்த சம்பவத்தைக் கருத்தில்கொண்டு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக 84 நிபந்தனைகள் காவல் துறையில் இருந்து விதிக்கப்பட்டுள்ளன.
அந்த நிபந்தனைகளைக் கருத்தில்கொண்டு, நிகழ்ச்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “காவல்துறை விதித்த நிபந்தனைகளின்படி 40 கண்காணிப்பு கேமராக்கள், அவசரத் தேவைக்கு 40 வாக்கி-டாக்கிகள், 24 ஆம்புலன்ஸ்கள், 72 மருத்துவர்கள், 120 செவிலியர்கள் தயார் நிலையில் இருப்பார்கள். தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்படும். காவல்துறை தரப்பில் 1,500 போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். கூட்டத்திற்கு ‘பாஸ்’ முறை கிடையாது; பொதுமக்கள் வரலாம். 16 இடங்களில் நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன,” என்று தெரிவித்தார்.
அரசியல் தனிமை ஒருபுறம் இருக்க, களத்தில் இதுபோன்ற கடும் கட்டுப்பாடுகளுக்கு இடையே விஜய் மேற்கொள்ளும் இந்தப் பிரசாரப் பயணம், தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

