சிபிஐ பிடியில் விஜய் - கரூர் சம்பவத்திற்காக 2 நாள்கள் விசாரணை நடத்தத் திட்டம்

சிபிஐ பிடியில் விஜய் - கரூர் சம்பவத்திற்காக 2 நாள்கள் விசாரணை நடத்தத் திட்டம்

2 mins read
0d4ab67c-00e9-4cd2-a8bf-e9af7402691e
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். - படம்: தினமணி
Google News Preferred Icon

புதுடெல்லி: கரூர் பிரசாரக் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணைக்காக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை நேரில் முன்னிலையானார்.

கரூர் மாவட்டம், வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக, கடந்த டிசம்பர் மாதம் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் வைத்து தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், கரூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளிடமும் 3 நாள்கள் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, திங்கட்கிழமை (டிசம்பர் 12) முன்னிலையாகுமாறு விஜய்க்கு சிபிஐ தரப்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.

அதன்படி, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்ற விஜய், திங்கள் காலை 11 மணியளவில் சிபிஐ அதிகாரிகள் முன்பு விசாரணைக்காக முன்னிலையானார். அவருடன் நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்டோரும் சென்றுள்ளனர்.

விஜய்யிடம் தொடர்ந்து இரண்டு நாள்கள் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, “சம்பவத்தன்று கூட்டத்திற்குத் தாமதமாகப் புறப்பட்டது ஏன்?” என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கேள்விகளை அதிகாரிகள் எழுப்ப உள்ளனர். சுமார் 20 மணி நேரம் வரை இந்த விசாரணை நீடிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே, டெல்லியில் விஜய்க்குப் போதிய பாதுகாப்பு வழங்கக் கோரி தவெக சார்பில் டெல்லி காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. அதனையேற்று, மத்திய அரசின் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு நடைமுறைகளின் அடிப்படையில், டெல்லி விமான நிலையத்தில் இருந்து விஜய் செல்லும் அனைத்துப் பகுதிகளிலும் காவல்துறையினர் முழுப் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்