துணை அதிபர் தேர்தல்: இண்டியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்

துணை அதிபர் தேர்தல்: இண்டியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்

2 mins read
34a8a219-19d9-4a08-8d64-cc4361676e59
இந்தியா கூட்டணி சார்பில் வேட்பு மனுவைத்தாக்கல் செய்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி  சுதர்சன் ரெட்டி. - படம்: இந்து தமிழ் திசை இணையம்
Google News Preferred Icon

புதுடெல்லி: துணை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரான சுதர்சன் ரெட்டி இன்று (ஆகஸ்ட் 21) வேட்புமனு தாக்கல் செய்தார்.

இவர், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவார்.

காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின பிரமுகர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

வேட்புமனுத் தாக்கலுக்கு முன்பு பேசிய சுதர்சன் ரெட்டி, “போதிய எண்ணிக்கை உள்ளதா என்ற கேள்வி தொடர்கிறது. எனினும், நம்பிக்கை உள்ளது. நான் எந்த அரசியல் கட்சியையும் சாராதவன். எனவே, அனைவரும் எனக்கு ஆதரவு அளிக்க முடியும் என நம்புகிறேன். நேற்றே (புதன்கிழமை) ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திவிட்டேன். இது ஒரு சித்தாந்தப் போர்,” என்று தெரிவித்திருந்தார்.

துணை அதிபர் பதவிக்​கான வேட்​புமனு தாக்​கல் கடந்த 7ஆம் தேதி தொடங்​கியது. 21ஆம் தேதிக்​குள் மனுக்​களை தாக்​கல் செய்ய வேண்​டும். மனுக்​கள் பரிசீலனை 22ஆம் தேதி நடை​பெறும். வேட்பு மனுக்​களை திரும்பப் பெற ஆகஸ்ட் 25ஆம் தேதி கடைசி நாள்.

ஒரு வேட்​பாளரை குறைந்​த​பட்​சம் 20 எம்​.பி.க்​கள் முன்​மொழிய வேண்​டும். மக்​களவை, மாநிலங்​களவை எம்​.பி.க்​கள் மட்​டுமே தேர்​தலில் வாக்​களிக்க முடி​யும்.

இத்தேர்தலில் 782 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்​ளனர். தேர்​தலில் வெற்றி பெற 50 விழுக்காடு எம்​.பி.க்​களின் ஆதரவு தேவை. இதன்​படி, 391 எம்​.பி.க்​களின் ஆதரவை பெறும் வேட்​பாளர், புதிய துணை அதிபர் பதவிக்குத் தேர்வு ஆவார்.

நாடாளு​மன்​றத்​தில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக்கு 422 எம்​.பி.க்​களும், எதிர்க்கட்சிகளின் இண்​டியா கூட்​ட​ணிக்கு 312 எம்​.பி.க்​களும் உள்​ளனர். ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பெரும்பான்மை பலம் இருப்​ப​தால், அந்தக் கூட்டணியின் வேட்​பாளர் சி.பி.​ராதாகிருஷ்ணன் வெற்றி அடைவாரென பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்