கோவில் நிலத்தில் கட்டிய 2,036 வீடுகளின் விலை பூஜ்ஜியம்

கோவில் நிலத்தை விற்று ரூ.2,500 கோடி மோசடி

கோவில் நிலத்தில் கட்டிய 2,036 வீடுகளின் விலை பூஜ்ஜியம்

2 mins read
2aaa9e72-e6c2-4322-a5ad-3b1c37bfec4f
பாதிக்கப்பட்ட குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் கணபதி சுரேஷ் தலைமையில் குடியிருப்பாளர்கள் சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். - படம்: ஒன் இந்தியா
Google News Preferred Icon

சென்னை: சென்னை கொரட்டூரில் மடத்திற்குச் சொந்தமான கோவில் நிலத்தில் சட்டவிரோதமாக 2,036 அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டி விற்று தனியார் சொத்து மேம்பாட்டு நிறுவனம் ரூ.2,500 கோடி மோசடி செய்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கொரட்டூர் பகுதியில் ‘அலையன்ஸ்’ என்ற பிரபல தனியார் கட்டுமான நிறுவனம், ‘ஆர்கிட் ஸ்பிரிங்ஸ்’ என்ற பெயரில் பிரம்மாண்டமான அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டத்தைச் செயல்படுத்தியது.

கிட்டத்தட்ட15.45 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்தக் குடியிருப்பின் 2,036 வீடுகள் 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் குடியிருப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

அந்த இடம் ‘கரபத்ர சிவப்பிரகாச சுவாமிகள் மடத்திற்கு’ச் சொந்தமான இடமாகும். அது தொடர்பான வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், அண்மையில் பூந்தமல்லி நீதிமன்றம் அந்த இடம் கோவிலுக்குச் சொந்தமானதுதான் எனத் தீர்ப்பளித்தது.

நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, பதிவுத்துறையானது நிலத்தின் சந்தை மதிப்பை ‘பூஜ்ஜியம்’ என அறிவித்துவிட்டது. இதனால் தங்கள் வாழ்நாள் சேமிப்பு, வங்கிக் கடன், மாதத் தவணை மூலம் கோடிக்கணக்கில் செலவு செய்து வீடு வாங்கிய மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

இதனால் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விற்கவோ, வேறு யாருக்கும் பத்திரப்பதிவு செய்யவோ முடியாது. பிள்ளைகளின் கல்விக்கடன் அல்லது அவசரத் தேவைகளுக்கு வீட்டை அடமானம் வைத்து வங்கிக் கடன் பெற முடியாது.

கடந்த ஆறு ஆண்டுகளாகக் கட்டுமான நிறுவனம் மூலப்பத்திரத்தை வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.

பாதிக்கப்பட்ட குடியிருப்போர் நலச்சங்கம் காவல்துறையிடம் அளித்ததது.

அதில், “கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் மனோஜ், சுனில் ரெட்டி, சந்திரசேகர் ரெட்டி ஆகியோர் நிலம் தொடர்பான வழக்கு விவரங்களை எங்களிடம் மறைத்துவிட்டனர். தற்போது வழக்குத் தீர்ப்பு வந்த பிறகும் அவர்கள் மேல்முறையீடு செய்யாமல் காலம் தாழ்த்துகின்றனர்.

“எங்களை ஏமாற்றி ரூ.2,500 கோடி சம்பாதித்துவிட்டு, எங்களை நடுத்தெருவில் நிற்க வைத்துள்ளனர். இது நம்பிக்கை துரோகத்துடன் கிரிமினல் சதியாகும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தனியார் கட்டுமான நிறுவனம், பிரச்சினையைச் சட்டரீதியாக எதிர்கொள்ளப்போவதாகத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், புகாரைப் பெற்ற காவல்துறை தலைமை இயக்குநர், ஆவடி காவல் ஆணையரைச் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மின்னிலக்க வசதிகள் பெருகியுள்ள இக்காலத்திலும் நிலம் வாங்கும் முன்பு தீர விசாரிக்காமல், பிரபல நிறுவனம் விற்கிறது என்று கண்ணை மூடிக்கொண்டு வாங்கியதே இந்த அவல நிலைக்குக் காரணம் என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்