இந்தியாவில் சாதனை அளவாக ரூ.29.90 லட்சம் கோடிக்கு ‘யுபிஐ’ பரிவர்த்தனை

இந்தியாவில் சாதனை அளவாக ரூ.29.90 லட்சம் கோடிக்கு ‘யுபிஐ’ பரிவர்த்தனை

2 mins read
1ed3277f-3dc0-4c3a-9ed6-21adba473924
கடந்த ஆண்டைக் காட்டிலும் யுபிஐ பணப் பரிவர்த்தனை 19 விழுக்காடு அதிகரித்துள்ளது. - படம்: இக்கனாமிக் டைம்ஸ்
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியாவின் மின்னிலக்கப் பணப் பரிவர்த்தனைத் தளமான யுபிஐ (UPI) மூலம் கடந்த மே மாதம் சாதனை அளவாக ரூ.29.90 லட்சம் கோடி அளவுக்கு பரிவர்த்தனை நடந்துள்ளது.

ஓராண்டுக்கு முன்னர் அது ரூ.25.14 லட்சம் கோடியாக இருந்தது. இது ஆண்டு அடிப்படையில் 19 விழுக்காடு ஏற்றம்.

அந்தத் தொகை சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 23.2 பில்லியன் என்று இந்திய தேசிய பணமாற்றுக் கழகம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம் ரூ.29.03 லட்சம் கோடி மதிப்புள்ள பரிவர்த்தனைகள் நிகழ்ந்தன. அந்த மாதம் நிகழ்ந்த பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 22.35 பில்லியன்.

பொதுமக்களும் வர்த்தகங்களும் மே மாதம் மேற்கொண்ட பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும் 23.2 பில்லியன் என்னும் சாதனை அளவைத் தொட்டது. கடந்த ஆண்டு மே மாதம் அந்த எண்ணிக்கை 18.67 பில்லியனாக இருந்தது. இரு 24 விழுக்காடு வளர்ச்சி.

மே மாதம் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும் அதன் தொடர்பிலான தொகையும் சாதனை அளவைத் தொட்டதற்கு, மக்களிடையே மின்னலக்கப் பரிவர்த்தனைக்கான தேவை அதிகம் உள்ளதைக் காட்டுவதாக ‘கேஷ்ஃப்ரீ பேமெண்ட்ஸ்’ அமைப்பின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆகாஷ் சின்கா தெரிவித்துள்ளார்.

மேலும், கோடைக் கால சுற்றுப் பயணங்கள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆகியவற்றுடன் பருவகால பயனீட்டாளர் செலவினங்களும் இணைந்து அந்த எண்ணிக்கையை உயர்த்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

யுபிஐ மின்னிலக்கத் தளத்தின் சீரான வளர்ச்சியை இது குறிக்கிறது என்றார் அவர்.

யுபிஐ செயலி வாயிலாக இந்தியாவுக்குள் பணப் பரிமாற்றம் செய்வதோடு சிங்கப்பூர், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், நேப்பாளம், பூட்டான், மொரிசியஸ் ஆகியன உள்ளிட்ட ஏழு நாடுகளிலிருந்தும் இந்தியாவுக்குள் பணப் பரிவர்த்தனை செய்யலாம்.

குறிப்புச் சொற்கள்