இந்தியா தேடும் குற்றவாளிகள் 2 பேர் அமெரிக்காவில் கைது: நாடு கடத்த ஏற்பாடு

1 mins read
d98844ea-6b5e-4c6b-a02a-48228a73ffa2
வெங்கடேஷ் கார்க், பானு ராணா. - படம்: ஊடகம்

வாஷிங்டன்: இந்தியாவால் தேடப்பட்ட பயங்கர குற்றவாளிகள் இருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரையும் நாடுகடத்த இந்திய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

வெவ்வேறு குண்டர் கும்பல்களைச் சேர்ந்த வெங்கடேஷ் கார்க் என்பவருக்கு இந்தியாவில் நிகழ்ந்த பத்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்பு உள்ளது. இவர் இளையர்களைப் பணிக்கு அமர்த்தி, பல்வேறு குற்றச்செயல்களை நடத்தி வந்துள்ளார்.

குருகிராமைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கியமான தலைவரைக் கொலை செய்தது தொடர்பாகவும் இவர் தேடப்பட்டு வந்த நிலையில், இவர் ஜார்ஜியாவுக்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதேபோல் அமெரிக்காவில் வசித்து வரும் பானு ராணா என்ற இந்தியரும் பல்வேறு குற்ற வழக்குகளுக்காக இந்தியாவில் தேடப்பட்டு வந்தார்.

அமெரிக்காவில் இருந்தபடியே, இந்தியாவில் ஆள்களை வேலைக்கு வந்து பல குற்றச் செயல்களை அரங்கேற்றி வந்தார். இந்தியாவால் தீவிரமாகத் தேடப்பட்ட இருவரும் அமெரிக்காவில் பதுங்கியுள்ள இடத்தை இந்திய உளவுத்துறையினர் அண்மையில் கண்டுபிடித்ததுடன், அனைத்துலகக் காவல் அமைப்பான இன்டர்போலுக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, அமெரிக்க காவல்துறை இருவரையும் கைது செய்துள்ளது.

இருவரையும் இந்தியாவுக்கு நாடுகடத்த அந்நாட்டு அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்