பயங்கரவாதி ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க டிரம்ப் ஒப்புதல்

பயங்கரவாதி ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க டிரம்ப் ஒப்புதல்

2 mins read
78b649ae-5334-48c0-80ee-e361ef22a072
தஹாவூர் ஹுசைன் ராணா. - படம்: ஏஎன்ஐ
Google News Preferred Icon

வாஷிங்டன்: மும்பையில் 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் தஹாவூர் ஹுசைன் ராணாவை இந்தியாவுக்கு நாடுகடந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதிகாரத்துவப் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த இந்திய பிரதமர் மோடி, பிப்ரவரி 13ஆம் தேதி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.

இதற்குபின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில், “மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய தஹாவூர் ராணா, தற்போது இந்தியாவில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும்”, எனத் திரு டிரம்ப் கூறினார்.

பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கனடா குடியுரிமை பெற்றவரான ராணா தற்போது வேறொரு பயங்கரவாத வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலிஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

ராணாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா நீண்டகாலமாக அமெரிக்காவிடம் கோரி வந்தது. ஒரு கட்டத்தில், தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. கடந்த ஆண்டு நவம்பரில் இந்த முடிவு குறித்து ராணா மேல்முறையீடு மனு ஒன்று தாக்கல் செய்தார். ஆனால், இந்த மனுவை கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2008ஆம் ஆண்டு மும்பைக்குள் கடல் வழியாக ஊடுருவிய பாகிஸ்தானின் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சோ்ந்த 10 பயங்கரவாதிகள், கிட்டத்தட்ட 60 மணிநேரம் நடத்திய தாக்குதலில் 6 அமெரிக்கா்கள் உள்பட 166 போ் கொல்லப்பட்டனா்.

தாக்குதல் நடத்திய 10 பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டாா். அவருக்கு கடந்த 2012ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

”பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. எல்லையின் மறுபக்கம் உருவெடுக்கும் பயங்கரவாதத்தை ஒடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ராணாவுக்கு இந்திய நீதிமன்றம் உரிய தண்டனை வழங்கும்,” என டிரம்புக்கு நன்றி தெரிவித்து பேசிய இந்தியப் பிரதமர் மோடி கூறினார்.

சீன எல்லைப் பிரச்சினை: டிரம்ப் உதவியை நிராகரித்தது இந்தியா

சீனா உடனான எல்லை பிரச்சினையில் இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாகத் திரு டிரம்ப் தெரிவித்தார்.

“சீன எல்லையில் இந்தியா எதிர்கொள்ளும் மோதல்கள் மிகவும் கொடூரமானவை. அவை தொடர்ந்து நடக்கும் என்று நினைக்கிறேன். நான் உதவ முடிந்தால், மிகவும் மகிழ்ச்சியுடன் உதவத் தயார். ஏனென்றால் அது நிறுத்தப்பட வேண்டும்,” எனச் செய்தியாளர்கள் சந்திப்பில் அமெரிக்க அதிபர் கூறினார்.

டிரம்ப்பின் உதவியை இந்தியா மறைமுகமாக நிராகரித்தது.

“எங்கள் அண்டை நாடுகளுடனான பிரச்சினைகளைக் கையாள்வதில் நாங்கள் எப்போதும் இருதரப்பு அணுகுமுறையையே கடைப்பிடித்து வருகிறோம்,” இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
டோனல்ட் டிரம்ப்அமெரிக்காஇந்தியாபிரதமர்நரேந்திர மோடி