மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் பலர் பலி

மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் பலர் பலி

2 mins read
e6561dcd-77e8-4bed-96fc-cfbae23580c2
பாதிக்கப்பட்டவர்களைப் பக்தர்களும் மீட்புக்குழுவினரும் மீட்க உதவியதாகவும் மக்கள் தடுப்புகளின் மீது ஏறுவதைக் காண முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 3
Google News Preferred Icon

லக்னோ: மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 15 பேர் உயிரிழந்துவிட்டனர்.

மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவையொட்டி, உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் லட்சக்கணக்கானோர் கூடியுள்ளனர்.

புதன்கிழமை (ஜனவரி 29) தை அமாவாசையை முன்னிட்டு, திரிவேணி சங்கமத்தில் நீராடுவது புண்ணிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. அதனால் கூட்டம் மேலும் அதிகரித்துள்ளது. பெரும்பாலானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு மேற்கொள்ள ஆர்வமாக உள்ளனர்.

புதன்கிழமை மட்டும் கும்பமேளாவில் நான்கு கோடி பேர் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக கும்பமேளா நடக்கும் பிரயாக்ராஜ் பகுதியிலும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களிலும் புதன்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதுவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மகா கும்பமேளா நடக்கும் பகுதியில் புதன்கிழமை அதிகாலை கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த காவல்துறையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டபோதும் நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. நெரிசலில் சிக்கிக்கொண்டோர் அல்லாடினர். சிலர் கீழே விழுந்ததைக் கவனிக்காமல் பலர் அவர்கள் மீது ஏறிச் சென்றனர்.

காவல்துறையினர் இயன்றவரை அனைவரையும் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்ததாகக் கூறப்படுகிறது. கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 15 பேர் இறந்துவிட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது. பிரக்யராஜில் உள்ள மருத்துவர் ஒருவர், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் இத்தகவலைக் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

“குறைந்தது 15 பேர் மாண்டுவிட்டனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,” என்று தன் பெயரைக் குறிப்பிட விரும்பாத அந்த மருத்துவர் கூறியதாகவும் நடந்த சம்பவம் குறித்து ஊடகங்களிடம் பேச தங்களுக்கு அனுமதி இல்லை என்று அவர் கூறியதாகவும் ஊடகச் செய்தி மேலும் தெரிவித்தது.

இதற்கிடையே, பாதிக்கப்பட்டவர்களைப் பக்தர்களும் மீட்புக்குழுவினரும் சம்பவ இடத்திலிருந்து மீட்க உதவுவதையும் மக்கள் அங்குள்ள தடுப்புகளின் மீது ஏறுவதையும் காண முடிந்ததாக ஏஎஃப்பி புகைப்படக்காரர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

அதிகாலை 2 மணியளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும் கூட்டத்தைச் சமாளிக்க அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் உடைந்ததையடுத்து நெரிசலைச் சமாளிக்க இயலாமல் போனதாகவும் கும்பமேளா சிறப்பு அதிகாரி அகான்ஷா ராணா தெரிவித்தார் என்று பிடிஐ கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்