பிரேசில் அதிபருக்கு பாரம்பரிய வரவேற்பு

பிரேசில் அதிபருக்கு பாரம்பரிய வரவேற்பு

2 mins read
d9c1608b-e0b0-4d94-8458-1612cbda1177
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலாவை சனிக்கிழமை அன்று பிரதமர் மோடி, இந்திய அதிபர் திரவுபதி முர்மு ஆகியோர் வரவேற்றனர். - படம்: இபிஏ
Google News Preferred Icon

புதுடெல்லி: பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, புதுடெல்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு உச்சநிலை மாநாட்டில் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டார்.

இந்நிலையில் அவருக்கு சனிக்கிழமை அன்று அதிபர் மாளிகையில் பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய அதிபர் திரௌபதி முர்முவும் பிரதமர் மோடியும் அவரை வரவேற்றனர். பின்னர் மரியாதை அணிவகுப்பை பிரேசில் அதிபர் ஏற்றுக் கொண்டார்.

முன்னதாக இந்தியப் பிரதமர் மோடியும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலாவும் புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் வர்த்தகம், பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரையும் பிரேசில் அதிபர் சந்தித்துப் பேசினார்.

இதற்கிடையே இந்தியாவிற்கான பிரேசில் தூதர் கென்னத் டா நோப்ரேகா, ஏஐ உச்சநிலை மாநாடு ஏற்பாடு செய்த இந்தியாவின் முயற்சிகளைப் பாராட்டினார்.

அதிபர் லூலாவும் பிரதமர் மோடியும் வலுவான உறவைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்றும் அவர்கள் நல்ல நண்பர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“பிரேசில் அதிபர் லூலாவின் இந்தப் பயணம் இருதரப்பு உறவுகளில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைக் குறிக்கிறது. இந்தியாவிற்கு இதுவரை இல்லாத மிகப்பெரிய பிரேசிலியக் குழுவுடன் அவர் வந்துள்ளார். இந்தக் குழுவில் 11க்கும் மேற்பட்ட அமைச்சரவை அமைச்சர்கள், 300க்கும் மேற்பட்ட வணிகத் தலைவர்கள் மற்றும் சுமார் 50 தலைமை நிர்வாக அதிகாரிகள் உள்ளனர்,” என்றார் அவர்.

2025 ஜூலையில் பிரேசிலுக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட பயணத்தைத் தொடர்ந்து அதிபர் லூலாவின் வருகை இடம்பெறுகிறது. இது, 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிரேசிலுக்கு ஒர் இந்தியப் பிரதமர் மேற்கொண்ட முதல் பயணமாகும்.

குறிப்புச் சொற்கள்