திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாதனை அளவாக, கடந்த ஓராண்டில் 13.95 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அக்கோவில் வரலாற்றில் ஆக அதிகமான லட்டுகள் விற்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் நிர்வாகம் சார்பாக ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதலாகத் தேவைப்பட்டால் பக்தர்கள் ஒரு லட்டுக்கு 50 ரூபாய் செலுத்தி வாங்கிக்கொள்ளலாம்.
கடந்த ஆண்டு லட்டு விற்பனை மூலம் ஏழுமலையான் கோவிலுக்கு ரூ. 567 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி கோவிலில் நாள்தோறும் ஏறக்குறைய நான்கு லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. கடந்த ஏப்ரல் 2025 முதல் மார்ச் 2026 வரையிலான நிதியாண்டில் மட்டும் 13.95 கோடி லட்டுகள் விற்கப்பட்ட நிலையில், அதற்கு முந்தைய நிதியாண்டு இந்த எண்ணிக்கை 12.18 கோடியாக உள்ளது.
இதன் மூலம் கடந்த நிதியாண்டில் 1.76 கோடி லட்டுகள் கூடுதலாக விற்கப்பட்டது தெரியவந்துள்ளது.
லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யின் தரத்தை உயர்த்தியதுடன், மூலப்பொருள்கள் கொள்முதலிலும் தீவிர கவனம் செலுத்தப்பட்டதே விற்பனை அதிகரிக்கக் காரணம் என கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

