திருப்பதி லட்டு நெய் ஊழல்: நாடு முழுவதும் அமலாக்கத்துறை அதிரடிச் சோதனை

திருப்பதி லட்டு நெய் ஊழல்: நாடு முழுவதும் அமலாக்கத்துறை அதிரடிச் சோதனை

1 mins read
db543eac-193a-464c-8b0d-d2c492b4b6a0
சோதனையின்போது, கணக்கில் வராத ரூ. 60 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: லைவ் லா
Google News Preferred Icon

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. அந்த லட்டுத் தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள புகாரை அடுத்து மத்திய அமலாக்கத்துறை தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அதிரடிச் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், ரூ.60 லட்சம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனர்.

புதன்கிழமை (ஜூன் 3) நாடு முழுவதும் ஒரே நேரத்தில் 15 முக்கியமான இடங்களில் அந்தச் சோதனை நடைபெற்றது.

ஹைதராபாத் மண்டல அலுவலகத்தைச் சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி, மும்பை, குண்டூர், தமிழகத்தின் திண்டுக்கல் உள்ளிட்ட நகரங்களில் இருக்கும் சில முக்கிய நிறுவனங்களில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மேலும், கலப்பட நெய் விநியோக வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களான பொமில் ஜெயின், விபின் ஜெயின், ராஜு ராஜசேகரன், ராஜேஷ் மன்சுக்லால் சாவ்தா, அபூர்வ வினயகாந்த் சாவ்தா, மசிந்திர சாந்தாராம் லங்கா, அஜய் குமார் சுகந்த், மகேஷ் குமார் ரோஹிரா, ஆஷிஷ் அகர்வால் ஆகியோரின் இல்லங்களிலும் அலுவலக வளாகங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனையின்போது, கணக்கில் வராத ரூ. 60 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கலப்பட நெய் விநியோகத்தின் வாயிலாக ஈட்டப்பட்ட பணம், 45 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பான பல்வேறு முக்கியமான பத்திரங்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் குறிப்பிட்டன.

குறிப்புச் சொற்கள்