விவசாயக் கடனை ரத்து செய்யத் திட்டமில்லை: நிர்மலா சீதாராமன்

விவசாயக் கடனை ரத்து செய்யத் திட்டமில்லை: நிர்மலா சீதாராமன்

1 mins read
cabc813c-783f-4a60-9a89-9675bf12ece4
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். - படம்: பிடிஐ

புதுடெல்லி: விவசாயிகளின் கடனை முழுமையாக ரத்துசெய்வது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்யவில்லை என்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கட்கிழமை (மார்ச் 23) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஆயினும், விவசாயிகளின் பொருளியல் நிலையை வலுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

விவசாயிக் கடன் அட்டை, மானிய வட்டி விகிதத்துடன் ரூ.3 லட்சம் வரை பயிர்க்கடன், உரிய நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவோர்க்குக் கூடுதல் ஊக்கத்தொகை உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.

மேலும், பிணையில்லா குறுங்கால விவசாயக் கடன்களுக்கான வரம்பை 1.60 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக அரசு உயர்த்தியுள்ளது என்றும் அது சார்ந்த துறைகளுக்கு வங்கிகள் முன்னுரிமை அளித்து கடன் வழங்குவதை இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் உறுதிசெய்கின்றன என்றும் அமைச்சர் நிர்மலா கூறினார்.

அத்துடன், பயிர்க் காப்புறுதித் திட்டத்தையும் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் ‘பிஎம்-கிசான்’ திட்டத்தின்மூலம் நேரடியாகப் பணம் செலுத்தும் திட்டத்தையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்