புதுடெல்லி: டெல்லியில் இருந்து சான் ஃபிரான்சிஸ்கோ சென்ற ஏர் இந்தியா விமானம், எட்டு மணிநேரத்துக்குப் பிறகு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் டெல்லிக்கே திரும்பியது.
இந்த விமானத்தில் பயணம் செய்த 230 பயணிகளும் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
கடந்த புதன்கிழமை (மே 27) டெல்லியில் இருந்து புறப்பட்ட ‘ஏஐ-173’ என்ற ஏர் இந்தியா விமானம், சான் ஃபிரான்சிஸ்கோ நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது அதில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
ஆனால், இக்கோளாற்றைக் கண்டறிவதற்குள் அந்த விமானம் புறப்பட்டு, ஏறக்குறைய நான்கு மணிநேரத்தைக் கடந்திருந்தது. இதையடுத்து, விமானப் போக்குவரத்துக்கான நடைமுறைகளுக்கு இணைங்க அந்த விமானத்தை மீண்டும் டெல்லிக்கே திருப்ப விமானிகள் முடிவு செய்தனர். இவ்வாறு முடிவு செய்வதற்குள் அந்த விமானம் சீன வான்வெளியில் மூன்று மணிநேரம் பறந்திருந்தது.
“விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதுடன், ஏர் இந்தியாவின் பாதுகாப்புத் தரநிலைகளுக்கு இணங்க தொழில்நுட்ப ஆய்வுக்கு உட்படுத்தப்படும்,” என்று அந்த விமான நிறுவனம் ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.
பயணிகள், பணியாளர்களின் பாதுகாப்பு, நல்வாழ்வே தங்களின் முதன்மையான முன்னுரிமை என ஏர் இந்தியா விளக்கம் அளித்தது.
“பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். அவர்களை விரைவில் உரிய இடங்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்.
“இதற்கிடையில், எங்கள் களப்பணியாளர்கள், பயணிகளுக்கு சிற்றுண்டி, தங்கும் விடுதி வசதி அல்லது அவர்கள் தேர்ந்தெடுக்கும் பயணத் திட்டத்தை மாற்றுதல் உள்ளிட்ட அனைத்துத் தேவையான உதவிகளையும் வழங்கி வருகின்றனர்,” என்றும் ஏர் இந்தியாவின் அறிக்கை தெரிவிக்கிறது.

