காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம், குஜராத் முன்னோடி: பிரதமர் மோடி பாராட்டு

காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம், குஜராத் முன்னோடி: பிரதமர் மோடி பாராட்டு

2 mins read
44876361-b44d-4e0a-be2d-a315a3632e05
பிர­த­மர் மோடி. - படம்: தினமணி
multi-img1 of 2
Google News Preferred Icon

புதுடெல்லி: காற்றாலை மின் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது பற்றிக் குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, இத்துறையில் தமிழகம், குஜராத், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் முன்னோடியாகத் திகழ்வதாகப் பாராட்டினார்.

ஞாயிற்றுக்கிழமை ஆற்றிய ‘மனத்தின் குரல்’ (மன் கீ பாத்) உரையில், இந்தியாவின் எரிசக்தித் துறையில் ஏற்பட்டுள்ள மாபெரும் புரட்சி பற்றிப் பிரதமர் விரிவாகப் பேசினார்.

“நாட்டின் மொத்தக் காற்றாலை மின் உற்பத்தித்திறன் 56 கிகாவாட்டைக் கடந்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 6 கிகாவாட் திறன் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

“சூரிய, காற்றாலை மின்சாரம் என்பது வெறும் சுற்றுச்சூழல் சார்ந்தது மட்டுமல்ல, அது நாட்டின் வளர்ச்சிக்கான அச்சாணி,” என்று குறிப்பிட்ட அவர், குஜராத்தின் பாலைவனப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள எரிசக்தி பூங்காக்கள் இளையர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை வாரி வழங்கி வருவதைச் சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தின் கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் சாதனையைப் பிரதமர் தனித்துவமாகக் குறிப்பிட்டார்.

அங்குள்ள 500 மெகாவாட் திறன் கொண்ட ‘வேக ஈனுலை’ (Fast Breeder Reactor), கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி வெற்றிகரமாகச் செயல்படத் தொடங்கியது. இது இந்தியாவின் அணுசக்தி வரலாற்றில் ஒரு மிகமுக்கியமான முன்னேற்றம்.

இந்தியாவின் சொந்தத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த அணு உலையானது, மின்சாரத்தைத் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்திற்குத் தேவையான எரிபொருளையும் தானே உற்பத்தி செய்யும் அபூர்வத் திறன் கொண்டது.

தொடர்ந்து பேசிய பிரதமர், வரவிருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு குறித்துப் பேசினார். 2027ஆம் ஆண்டில் சேகரிக்கப்படவுள்ள இந்த விவரங்கள் அனைத்தும் முழுமையாக மின்னிலக்க முறையில் பாதுகாப்பாகப் பதிவு செய்யப்படும் என்றார்.

பொதுமக்கள் தங்களின் விவரங்களைச் சுயமாகப் பதிவு செய்யும் வசதி உள்ளது என்றும் இது அரசின் பணி மட்டுமல்லாது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், அனைத்துலகப் போட்டியில் வென்ற இந்தியப் பாலாடைக் கட்டிகள், கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் 165வது பிறந்த தினம் உள்ளிட்ட பல்வேறு சுவாரசியமான தகவல்களையும் பிரதமர் பகிர்ந்து கொண்டார்.

குறிப்புச் சொற்கள்
பிரதமர்எரிசக்திஅணுசக்திபதிவுஏப்ரல்