புதுடெல்லி: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) புதிதாக விதித்துள்ள, மும்மொழிக் கொள்கை அடிப்படையிலான விதிமுறை நியாயமற்றதா என்பதை ஆராயப் போவதாக இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
‘சிபிஎஸ்இ’ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்திலும் தேர்வு முறையிலும் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது.
அதன்படி, வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மொழிகள் படிப்பது கட்டாயம் என்றும் மூன்றாவது மொழிக்கு பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பள்ளிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடன் முறையான ஆலோசனை இன்றி இந்த விதி திடீரென அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் மனுதாரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தமிழகம் உட்பட சில மாநிலங்களும் இந்த விதிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சில தரப்பினர் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். இம்மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிய விதிமுறை குழந்தைகள் மீது நியாயமற்ற அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதா என்பதை ஆராய புதன்கிழமை (மே 27) ஒப்புக்கொண்டது.
ஆசிரியர்கள், புத்தகங்களுக்கே பற்றாக்குறை நிலவும் சூழலில், இந்தக் கொள்கையைச் செயல்படுத்துவதில் உள்ள நடைமுறை, உண்மைச் சவால்கள் குறித்து நீதிமன்றம் அதிக அக்கறை கொண்டுள்ளதாக இந்தியத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்தது.
மும்மொழிக் கொள்கையின்படி மூன்றாவது மொழிப் பாடத்திற்கு மதிப்பெண் இல்லை என்று கூறப்பட்டாலும், பத்தாம் வகுப்பு இறுதித்தேர்வின்போது மொழிப்பாடத்தில் மாணவர்களுடைய தேர்ச்சி என்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது என்று வாதிடப்பட்டது.
இந்நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகளில் மூன்று மொழிகள் படிப்பதைக் கட்டாயமாக்கக்கூடிய இந்தப் புதிய விதிமுறைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க ‘சிபிஎஸ்இ’க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூலை 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

